ரூ. 2 கோடி லஞ்சம்? ஞானேஷ் குமார் மீது புதிய வழக்கு பதிவுசெய்ய கேரள அரசு அனுமதி
கேரளத்தில் 2006-ல் ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் வழக்கு தொடர மாநில அரசு அனுமதி அளித்தது குறித்து...

ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
கேரளத்தில் 2006-ல் சாலை விரிவாக்கப் பணியில் ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் வழக்கு தொடர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 2006-ல் பொதுப்பணித் துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) இருந்து வந்தார். 2006-ல் இவர் பணியில் இருந்த காலத்தில் திருவனந்தபுரம் - கோட்டயம் இடையே சாலை விரிவாக்கப் பணியும் நடந்தது. இந்தப் பணிகளின்போது சாலை ஒப்பந்தத்துக்கான ரசீது வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக சாலை ஒப்பந்ததாரர் சாஜன் புகார் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே எம்.சி. சாலை விரிவாக்கப் பணி நடந்து வந்தது. இதனை கே.எஸ்.டி.பி. என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானேஷ் குமார் மீதான புகாரையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது தொடர்பாக மாநில அரசிடம் லஞ்ச ஒழிப்புத் தனிப்பிரிவு அனுமதி கோரியது. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இதே காலகட்டத்தில் மாநில போக்குவரத்துத் திட்டத்தில் பணியாற்றிய மலேசியாவை சேர்ந்த பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவரின் தற்கொலைக் குறிப்பில் அப்போதைய பொதுப்பணித் துறைச் செயலாளர் ஞானேஷ் குமாரின் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) பெயர் இடம்பெற்றிருந்தது. மலேசிய நிறுவனம் சேர்ந்திருந்த இந்தச் சாலைப் புனரமைப்புத் திட்டத்துக்கு நிதியை விடுவிக்க லஞ்சம் கோரியதாகவும், பணம் செலுத்துவதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுகளும் தற்கொலைக் குறிப்பில் இருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஞானேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் மத்திய அரசுப் பணியிலும் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், 2006-ல் கிடப்பில் போடப்பட்ட ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், 2006-ல் இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அனைத்து கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்துவரும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய வழக்கின் விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டது மற்றும் புதிய வழக்குப்பதிவும் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
Summary
Keralam Home Minister directs Vigilance to examine Rs 2-crore bribery allegation against CEC Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

