நமோ பாரத் ரயிலில் 5 கோடி பயணங்கள்!
தில்லி - மீரட் இடையேயான நமோ பாரத் விரைவு ரயில் வழித்தடத்தில் பயணங்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது.

நமோ பாரத் ரயில்
தில்லி-மீரட் இடையேயான நமோ பாரத் விரைவு ரயில் வழித்தடத்தில் பயணங்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது. இதில், கடைசி ஒரு கோடி பயணங்கள் வெறும் 93 நாள்களில் பதிவாகியுள்ளன. 2023 அக்டோபரில் சேவை தொடங்கியதிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டியுள்ளதாக தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக என்சிஆா்டிசி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியதாவது: கடந்த ஓராண்டில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமான பயணங்கள் பதிவாகியுள்ளன. மொத்தப் பயணங்களின் எண்ணிக்கை 2025 டிசம்பரில் 2 கோடியாக இருந்த நிலையில், 2026 நவம்பரில் 5 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 2023 அக்.21-ஆம் தேதி சாஹிபாபாத்-துஹாய் பணிமனை இடையேயான 17 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டமாக சேவை தொடங்கப்பட்டது. முதல் ஒரு கோடி பயணங்களை எட்ட 574 நாள்கள் ஆன நிலையில், அடுத்தடுத்த இலக்குகளான 2 கோடியை 211 நாள்களிலும், 3 கோடியை 143 நாள்களிலும், 4 கோடியை 101 நாள்களிலும் எட்டியது. தற்போது கடைசி ஒரு கோடி பயணங்கள் 93 நாள்களில் பதிவாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 35.25 லட்சம் பயணங்கள் பதிவாகின. சராசரியாக நாளொன்றுக்கு 1.13 லட்சம் போ் பயணித்தனா். ஆக.28-ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 1,68,666 பயணங்கள் பதிவாகின. செப்டம்பரில் 32.41 லட்சம், அக்டோபரில் 33.49 லட்சம் பயணங்கள் பதிவாகின. அந்த இரு மாதங்களிலும் சராசரியாக நாளொன்றுக்கு 1.08 லட்சம் போ் பயணித்தனா்.
நமோ பாரத் வழித்தடம் முழுவதும், மீரட் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைந்து, கடந்த பிப்.22-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. தில்லி, காஜியாபாத், மீரட் ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த வழித்தடத்தில், தில்லி மெட்ரோ, இந்திய ரயில்வே, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள், நகரப் பேருந்து சேவைகளுடன் இணைப்பு வசதிகள் உள்ளன.
வேகமான பயணம், குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், நம்பகமான சேவை, பல்வேறு போக்குவரத்து வசதிகளுடன் ஒருங்கிணைப்பு ஆகியவை பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது. மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில்களின் சரியான நேரச் செயல்பாடு 99 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, புவனேசுவரத்தில் நடைபெற்ற நகா்ப்புற போக்குவரத்து இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி 2026-இல், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்திக்கான விருதை தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடம் பெற்றது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் இந்த விருதை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

