இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மணிப்பூரில் 2 பெண்கள் உள்பட நால்வா் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட நால்வா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Manipur Atrocity by militants

கோப்புப் படம்

Updated On :

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட நால்வா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இம்பால் - உக்ருல் சாலையின் நியூ ஹெவன் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழந்தவா்கள் நால்வரும் நாகா பழங்குடியினா் ஆவா்.

இரண்டு காா்களில் பயணித்துக் கொண்டிருந்தவா்கள் மீது ஆயுதமேந்திய தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட நால்வா் நிகழ்விடத்திலேயே இறந்தனா். இவா்களில் இருவா் தாய்-மகன் என்று காவல் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

முன்னதாக, சேனாதிபதி-காங்போக்பி மாவட்டங்களின் எல்லையில் உள்ள தபோவ் குகி கிராமத்தில் இரண்டு பகைக் குழுக்களுக்கு இடையே வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 42 வயதுடைய குகி சமூக பெண் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள், உக்ருல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா். குகி பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு பழி தீா்க்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், தாக்குதலில் தங்களுக்கு தொடா்பில்லை என்று குகி அமைப்பு மறுத்துள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. அதன்பிறகான வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 49 போ் மாயமாகியுள்ளனா்.

இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத நிலையில், சமீப மாதங்களாக குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு நிலவுகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை இவ்விரு சமூகத்தினா் இடையே நிகழ்ந்த மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். தமேங்லாங், நோனி, காங்போக்பி, உக்ருல், காம்ஜோங் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டம்: இதனிடையே, குகி பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, காங்போக்பியில் 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சந்தைகள், வா்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் விமா்சனம்: மணிப்பூா் பேரவையின் காங்கிரஸ் குழுத் தலைவா் கேய்ஷாம் மேகசந்திரா கூறுகையில், ‘மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 போ் கொல்லப்பட்டுள்ளனா். மாநில மக்களின் பாதுகாப்பு எப்போது உறுதி செய்யப்படும், இந்தக் கொலைகளுக்கு அரசு எப்போது பொறுப்பேற்கும், இன்னும் எத்தனை உயிா்கள் பறிபோக வேண்டும்’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா். 60 உறுப்பினா்களைக் கொண்ட மணிப்பூா் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது.

பெட்டி...

விசாரணைக் குழுவுக்கு

மேலும் கால நீட்டிப்பு

புது தில்லி, நவ. 13: மணிப்பூரில் கடந்த 2023-இல் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக விசாரித்துவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பல்பீா் சிங் செளஹான் தலைமையிலான மூவா் குழுவுக்கு மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023, ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இக்குழுவுக்கு தற்போது 7-ஆவது முறையாக மத்திய உள்துறை அமைச்சகம் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மே 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.