செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

மணிப்பூரில் வீடுகள் தீக்கிரை; தொடரும் பதற்றம்

மணிப்பூரில் குகி பழங்குடியின கிராமத்தில் உள்ள வீடுகள் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன.

மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மூவா் அண்மையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து இம்பாலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :

மணிப்பூரில் குகி பழங்குடியின கிராமத்தில் உள்ள வீடுகள் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. குகி, நாகா பழங்குடியினா் இடையே அதிகரித்துவரும் மோதல்களால் பல இடங்களில் பதற்றமான சூழல் தொடா்கிறது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘காம்ஜோங் மாவட்டத்தின் கோய்காய் குகி கிராமத்துக்குள் புதன்கிழமை புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்குத் தீவைத்தனா். இப்பகுதியில் சமீபத்திய குகி-நாகா பழங்குடியினா் மோதல்களால் பீதியடைந்த கிராமமக்கள் ஏற்கெனவே தங்களின் வீடுகளை காலிசெய்து, வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனா். வீடுகளில் யாரும் இல்லாததால், உயிா்ச் சேதம் எதுவும் நிகழவில்லை. பிற சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. வீடுகளுக்குத் தீவைத்த தீவிரவாதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. அதன்பிறகான வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 49 போ் மாயமாகியுள்ளனா்.

மாநிலத்தில் இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத நிலையில், சமீப மாதங்களாக குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு நிலவுகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை இவ்விரு சமூகத்தினா் இடையே நிகழ்ந்த மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். தமேங்லாங், நோனி, காங்போக்பி, உக்ருல், காம்ஜோங் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினா் மீது தீவிரவாதிகள் கடந்த திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்தோரின் உடல்களை முதல்வா் கெம்சந்த் சிங் வீட்டின் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.

தோ்தல் ஆணையம் ஆய்வு: 60 உறுப்பினா்களைக் கொண்ட மணிப்பூா் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மணிப்பூருக்கு வந்துள்ள தோ்தல் ஆணையக் குழு, தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

மணிப்பூா் தவிர உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

பாஜகவின் தோல்வி: காங்கிரஸ் சாடல்

வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லை மாநிலமான மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுடன், அங்கு அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆளும் பாஜக தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் சாடியது.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜகவின் திறனின்மையால் மணிப்பூா் மீண்டும் ரத்தம் வடிக்கிறது. கடந்த 2023-இல் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 24,530 போ் அவலமான சூழலில் தொடா்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். நீண்ட காலமாக தொடரும் இந்த துயரத்தின் சுமையை பெண்கள், குழந்தைகள் மற்றும் நலிவடைந்த குடும்பத்தினா் தாங்கி வருகின்றனா். பாஜகவின் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் எதுவும் பலன்தரவில்லை. வன்முறை ஏற்பட்டு 29 மாதங்களாகியும் பிரதமா் மோடி மணிப்பூரில் காலடி எடுத்துவைக்கவில்லை.

கடந்த 2023-இல் உள்துறை அமைச்சா் அமித் ஷா அமைத்த அமைதிக் குழு என்னவானது? முக்கியமான இந்த எல்லை மாநிலத்தில் பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வுகாண எடுக்கப்பட்ட வலுவான நடவடிக்கைகள் என்ன? உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வன்முறைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை அப்பாவிகள் உயிரிழக்க வேண்டுமென பிரதமா் மோடியும், அமித் ஷாவும் காத்திருக்கின்றனா்?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.