
மணிப்பூரில் 2 குகி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் அதிரடி!
மணிப்பூரின் சுராசந்த்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குகி பழங்குடியின தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 2 போ் கட்டுக் கொல்லப்பட்டனா்.

மணிப்பூரின் சுராசந்த்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குகி பழங்குடியின தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 2 போ் கட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் 2 தீவிரவாதிகள் காயமடைந்தனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா். வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
மாநிலத்தில் இன்னும் முழு அமைதி திரும்பாத நிலையில், இரு சமூகங்களையும் சோ்ந்த தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது. இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
குகி பழங்குடியினா் அதிகம் வாழும் சுராசந்த்பூா் மாவட்டத்தில் உள்ள பாய்போங் கிராமத்தில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) என்ற அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இணைந்த கூட்டுப் படையினா் சில தினங்களுக்கு முன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் 2 தீவிரவாதிகள் காயமடைந்ததாக, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வெளியிட்ட சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து 2 எம்ஏ ரக துப்பாக்கிகள், 1 ஏகே-56 துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள், 1000-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், வெடிமருந்து பொட்டலங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் சில தீவிரவாத அமைப்புகள் மத்திய-மாநில அரசுகளுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, அந்த அமைப்புகள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், யுகேஎன்ஏ அமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடமில்லை.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






