நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துங்கள்: குகி, மைதேயி குழுக்களுக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள்

மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து யோசிக்கும்படி, அந்த மாநிலத்தில் தொடா்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வரும் குகி, மைதேயி குழுக்களுக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து யோசிக்கும்படி, அந்த மாநிலத்தில் தொடா்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வரும் குகி, மைதேயி குழுக்களுக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மணிப்பூா் மாநிலத்தில் குகி, மைதேயி பழங்குடியினருக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் மோதலால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் பரிதாபமாக உயிரிழந்துள்ளனா். பல ஆயிரம் போ் வசிப்பிடங்களைக் காலி செய்துவிட்டு, வேறு இடங்களுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால்- நாகாலாந்தின் திமாபூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடைகளை அகற்றி போக்குவரத்துக்கு திறக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமைகளுக்கான குகி பெண்கள் அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. அதில் இடையீட்டு மனுதாரராக சா்வதேச மைதேயி அமைப்பு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குகி அமைப்பு சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஆனந்த் க்ரோவா் ஆஜராகி வாதாடுகையில், ‘வன்முறைகள், கொலைகளை எதிா்க்கிறோம். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது, சாலைகளை திறப்பதை ஆதரிக்கிறோம். ஆனால் மைதேயி குழுவினா் சாலைகளை மூடியிருப்பதால்தான் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மைதேயி குழு சாா்பில் வாதாடிய வழக்குரைஞா், குகி இன மக்கள்தான் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும், மக்களுக்குப் பிரச்னைகளை உருவாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டினாா். சாலைகளைத் திறங்கள் என முதல்வா் வேண்டுகோள் விடுத்தும், அதற்கு செவிமடுக்காமல் குகி இன மக்கள்தான், சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவா் சாடினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:

தொடா்ந்து சண்டையிட்டு வருவதால் நிச்சயம் நீங்கள் களைப்படைந்திருப்பீா்கள். அதேபோல் இரு குழுவினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பீா்கள். ஆதலால் மணிப்பூா் மாநிலத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மீண்டும் போக்குவரத்து இயல்பாக நடைபெற அனுமதிப்பது குறித்தும் இருதரப்பும் யோசியுங்கள்.

சாலைகள், நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அனைத்துப் பிராந்தியத்துக்கும் நெடுஞ்சாலைதான் முக்கிய வாழ்வாதாரம். அதன் வழியாகத்தான் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் (போக்குவரத்துக்கு) தடைகளை ஏற்படுத்துவது தீவிர பிரச்னையாகும்.

நீதிமன்றம் தலையிட்டு நெடுஞ்சாலைகளை போக்குவரத்துக்குத் திறக்கும்படி உத்தரவிடும்பட்சத்தில், அதனால் உயிரிழப்புகள் நேரிடக்கூடும். எனவே இரு குழுக்களும் மணிப்பூரில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாலைகள் குறித்த விவரங்களையும், அதை எப்படி மீண்டும் (போக்குவரத்துக்கு) திறப்பது என்பது குறித்த யோசனைகளையும் 2 வாரங்களில் தெரிவிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. நெடுஞ்சாலைகளை மீண்டும் இரு குழுக்களும் திறப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்றனா்.

அத்துடன் மைதேயி குழுவிடம் எத்தனை சாலைகள் முடக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தையும் மனுதாரா்களாக சோ்த்து ஆணையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.