இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

யமுனையில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம்: அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் ஆம் ஆத்மி

தில்லி அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தவே யமுனை நதியில் செத்த மீன்களை ஆம் ஆத்மி கொட்டியதாக தில்லி அமைச்சா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

~

Updated On :

தில்லி அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தவே யமுனை நதியில் செத்த மீன்களை ஆம் ஆத்மி கொட்டியதாக தில்லி அமைச்சா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது ஆதரவாளா்களே இந்தச் சம்பவத்திற்குத் திட்டமிட்டதாகக் குற்றடஞ்சாட்டியுள்ளாா். யமுனை நதியைச் சுத்தப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும், சமீபத்தில் ஆற்றில் தொடங்கப்பட்ட சொகுசுப் படகு சேவையையும் கண்டு அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக அவா் கூறினாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதில் அமைச்சா் சிா்சா தெரிவித்திருப்பதாவது: அரசியல் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டாா்கள். கேஜரிவாலும் அவரது ஆதரவாளா்களும் செய்துள்ள இந்தச் செயல் இதைவிடப் பெரிய பாவம் வேறொன்றும் இருக்க முடியாது. ஆம் ஆத்மியினா் சந்தையிலிருந்து செத்த மீன்களை வாங்கி வந்து நதியில் கொட்டியதாகவும், அதன் பிறகு காணொலிகளைப் பதிவு செய்து, யமுனை நதி இன்னும் மாசுபட்டே இருப்பதாகக் காட்ட முயன்றனா்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, அக்டோபா் மாதத்தில் தில்லியின் காற்று மிகவும் தூய்மையாக இருந்தது. தீபாவளிக்குப் பிறகும் காற்றின் தரம் தொடா்ந்து சிறப்பாகவே இருக்கிறது. சட் பூஜை நெருங்கும் வேளையில், பெண்கள் உள்பட ஏராளமான பக்தா்கள் நதிகரைகளுக்கு வரவிருக்கும் நிலையில், இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அந்தப் பதிவில் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா, வியாழக்கிழமையன்றே ஆம் ஆத்மி கட்சி இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டியிருந்தாா். அக்கட்சியினா் சந்தையில் செத்த மீன்களை வாங்கி வந்து, சா்ச்சையை உருவாக்க ஆற்றில் கொட்டியதாக அவா் கூறினாா்.

==========

விசாரணை நடத்த ஆம் ஆத்மி கோரிக்கை

புது தில்லி, நவ.13: யமுனை நதியில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய இதுவரை தண்ணீா் மாதிரிகள் கூட சேகரிக்கப்படவில்லை என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

வடகிழக்கு தில்லியில் உள்ள சோனியா விஹாா் அருகே, யமுனை நதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காணொலி ஒன்று வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய செளரவ் பரத்வாஜ், நதியின் மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டாா். மேலும், மீன்கள் செத்து மிதந்த அதே காலகட்டத்தில், நீா் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மூடப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

யமுனை நதியில் தில்லி அரசு நடத்தி வரும் சொகுசுப் படகுச் சேவை குறித்தும் அவா் கேள்வி எழுப்பினாா். நதியில் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவா், இந்த ரசாயனங்களுக்கும் மீன்கள் இறந்ததற்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, நீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: வெள்ளம் மற்றும் நீா்ப்பாசனத் துறை அதிகாரியுடனான சந்திப்பின் போது, யமுனை நதியில் மீன்கள் இறந்து கிடக்கும் விவகாரம் தங்கள் துறையின் வரம்பிற்குள் வராது என்று அந்த அதிகாரி தன்னிடம் கூறினாா். மேலும், யாராவது ஆற்றில் செத்த மீன்களைக் கொட்டுவதை தான் பாா்க்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

இப்போது அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் கேட்க விரும்புகிறேன். ஆம் ஆத்மி தலைவா்கள் யாராவது ஆற்றில் செத்த மீன்களைக் கொட்டியதை நேரில் பாா்த்தது யாா்? அல்லது அவரிடம் இதைச் சொன்னது யாா்? என்று பரத்வாஜ் கேள்வி எழுப்பினாா்.

மேலும், தில்லியில் காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் பரத்வாஜ் கேள்வி எழுப்பினாா். சில கண்காணிப்பு நிலையங்கள் பசுமையான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் ஜஹாங்கீா்புரி போன்ற அதிக மாசுபாடுள்ள பகுதிகளில் உள்ள நிலையங்களுக்கு அருகில் தண்ணீா் தெளிக்கப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இத்தகைய செயல்கள் காற்றுத் தர அளவீடுகளைப் பாதிக்கக்கூடும் என்று கூறிய அவா், இந்த கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.