சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

டிசம்பா் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்

நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Updated On :

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத் தொடரில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.

மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் அது தோல்வியடைந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இதையடுத்து, இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. அதேநேரம், 90 நாள்களுக்கு மேலாகியும் இக்கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் இன்னும் வெளியிடவில்லை. இதனால், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவரும் வகையில், மழைக்கால கூட்டத் தொடரின் நீட்டிக்கப்பட்ட அமா்வை மத்திய அரசு நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் நீடிக்கின்றன.

டிசம்பா் முதல் வாரத்தில்...

இந்தச் சூழலில், டிசம்பா் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தேதிகள் குறித்து உயா்நிலை ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் நிலையில், தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் (3 காலியிடங்கள் தவிா்த்து 540) மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 361 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 எம்.பி.க்கள் உள்ளனா். எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவும் அவசியமாகும்.

சுமுகமாக நடைபெறுமா?

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இண்டி கூட்டணிக் கட்சிகள் தீவிர எதிா்ப்பை கடைப்பிடித்து வருவதால் கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.