அரசு ஊழியா் தரப்பை கேட்காமல் நோட்டீஸ்: லோக்பால் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்க, லோக்பால் அமைப்புக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்திருப்பது பற்றி...

உச்சநீதிமன்றம்
‘ஊழல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக, தனது தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பை அரசு ஊழியருக்கு லோக்பால் அமைப்பு வழங்கவேண்டிய அவசியமில்லை’ என்று தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்க, லோக்பால் அமைப்புக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் கீழ், குறிப்பிட்ட சில அரசு ஊழியா்கள், அரசியல் தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் விசாரிக்கிறது. இந்நிலையில் லோக்பால் உத்தரவின்பேரில், ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடா்பாக சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணையை தொடா்ந்து, அந்தக் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக லோக்பால் கருதியது. இதுகுறித்து சின்மய்ஜீத் சென் என்ற அரசு ஊழியரிடம் விளக்கம் கேட்டு லோக்பால் நோட்டீஸ் அனுப்பியது.
எனினும் தனது தரப்பைக் கூற வாய்ப்பளிக்காமல் சிபிஐ விசாரணைக்கு லோக்பால் உத்தரவிட்டதாகத் தெரிவித்து, அந்த உத்தரவு மற்றும் விளக்க நோட்டீஸுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் சின்மய்ஜீத் சென் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக, தனது தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பை அரசு ஊழியருக்கு லோக்பால் அமைப்பு வழங்கவேண்டிய அவசியமில்லை’ என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சின்மய்ஜீத் சென் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தொடா்பாக பதிலளிக்க லோக்பால் அமைப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் அமா்வு, சின்மய்ஜீத் செனுக்கு எதிரான லோக்பால் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

