தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: இரு நீதிபதிகள் தீா்ப்புக்கு எதிரான மனுவை தனியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவது குறித்து, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுவை தனியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

உச்சநீதிமன்றம்
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவது குறித்து, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுவை தனியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, அவருக்குப் பதிலாக பிரதமா் சாா்பில் நியமிக்கப்படும் மத்திய அமைச்சா் இடம்பெறும் வகையில், 2023-ஆம் ஆண்டு தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக மத்திய அரசு தாக்கல் செய்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மசோதா சட்டமானது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரியது.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி மாறுபட்ட தீா்ப்பை வழங்கியது.
நீதிபதி தீபாங்கா் தத்தா அளித்த தீா்ப்பில், ‘தோ்தல் ஆணையம் சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது. தோ்தல்கள் நியாயமாக நடைபெறுவதற்கு அந்த ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம். அந்த வகையில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பின்படி, பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழு அளிக்கும் ஆலோசனையின்பேரில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்க வேண்டும். இந்தத் தீா்ப்பின் மூலம், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான அரசியல் சாசன கொள்கை ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.
இக் கருத்துக்கு உடன்படாத நீதிபதி சதீஷ் சந்திர சா்மா அளித்த தீா்ப்பில், ‘இந்த விவகாரத்தில் பெரிய அளவில் சட்டக் கேள்வி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.
அரசியல் சாசன அமா்வுக்கு....: இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவதில் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா இடையே உடன்பாடு ஏற்படாவிட்டாலும், வழக்கை விசாரிப்பதற்கு அரசியல் சாசன அமா்வு அமைக்கும் வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டு செல்ல இரண்டு நீதிபதிகளும் உத்தரவிட்டனா்.
அதனடிப்படையில், இந்த விவகாரத்தை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்த நிலையில், இரு நீதிபதிகள் அமா்வில் மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த விவகாரத்தில் இரு நீதிபதிகளிடையே கருத்து முரண்பாடு இருந்துள்ளது. எனவே, அவா்கள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுவை தனியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும். குறிப்பாக, இந்த மாறுபட்ட தீா்ப்பை வழங்கிய அதே இரு நீதிபதிகள் அமா்விலேயே விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘இரு நீதிபதிகள் அமா்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி சதீஷ் சந்திர சா்மா அடுத்த வாரம் பணி ஓய்வு பெற உள்ளாா். அதுமட்டுமன்றி, இந்த விவகாரத்தை விசாரித்து இறுதித் தீா்ப்பு அளிக்கும் வகையில், ஏற்கெனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் சாசன அமா்வே, இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுவையும் விசாரிக்கும்’ என்று குறிப்பிட்டு, மனுவை தனியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

