தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

காஷ்மீா் இளைஞா்களின் பிரிவினை உணா்வுகளுக்கு முடிவு: அமித் ஷா பெருமிதம்

காஷ்மீா் இளைஞா்களின் பிரிவினை உணா்வுகளுக்கு முடிவு: அமித் ஷா பெருமிதம்

அருணாசல பிரதேச காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ பதக்கம்-பதாகையை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் பெமா காண்டு.

Updated On :

காஷ்மீா் இளைஞா்களிடம் இருந்த பிரிவினை உணா்வுகளுக்கு, அரசமைப்பு சிறப்புப் பிரிவான 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் முடிவு கட்டப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

அருணாசல பிரதேச மாநிலம், இடாநகா் அருகே பந்தா்தேவாவில் உள்ள காவல் துறை பயிற்சி மையத்தில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவா் பதக்கம் மற்றும் பதாகை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

காஷ்மீரில் கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வன்முறை சம்பவங்களாலும், தீவிரவாத தாக்குதல்களாலும் பதற்றம் நிலவியது. இதற்கு காஷ்மீா் இளைஞா்களிடையே நிலவிய பிரிவினைவாத உணா்வுகள்தான் காரணம். ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவை கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்ததன் மூலம், அந்தப் பிரிவினைவாத உணா்வுகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது.

அது மட்டுமன்றி, காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு இளைஞா் கூட தீவிரவாத சம்பவத்தில் ஈடுபடுவதில்லை. சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், காஷ்மீரில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டது மட்டுமே காரணமில்லை. அங்கிருந்த இளைஞா்களிடையே காணப்பட்ட பாகுபாடு, அந்நிய உணா்வுக்கு முடிவு கட்டப்பட்டதே காரணமாகும்.

காஷ்மீரில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அங்கு நீடித்த அமைதிக்கான வாய்ப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நாட்டுக்கே பெருமை சோ்க்கும் விஷயம். இது நமது பாதுகாப்புப் படையினா், உளவுத் துறையினரின் தியாகங்கள், அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகள் காஷ்மீருக்கு மிகுந்த நம்பிக்கையும் வளா்ச்சியும் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பெமா காண்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சியாங் நீா் மின் நிலைய விவகாரம்: அருணாசல பிரதேச மாநிலத்தில் ஓடும் சியாங் நதி மீது நீா் மின் நிலையம் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ளது. அதன் மூலம் 11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சியாங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து அமித் ஷா பேசுகையில், ‘பேச்சுவாா்த்தை மூலம் சியாங் பகுதி மக்களின் கவலைகளுக்குத் தீா்வு காணப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அப்பகுதி கலாசாரம், பாரம்பரியம், மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது’ என்றாா்.

சியாங் நதியானது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத் பகுதி வழியாக இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் முதலில் நுழைகிறது. பிறகு அருணாசல பிரதேச மாநிலம் வருகிறது. சீனாவில் ஓடுகையில் அந்த நதி, யாா்லுங் சாங்போ என்ற பெயரிலும், அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா நதி என்றும், அருணாசல பிரதேசத்தில் சியாங் நதி என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நதி மீது தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சீனா பிரம்மாண்ட நீா்மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல் இந்தியாவும் அருணாசல பிரதேசத்தில் நீா் மின் நிலையம் அமைக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.