எங்கள் நிறுவன குடிநீர் "பாதுகாப்பானதுதான்": பிஸ்லெரி விளக்கம்
பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பானதுதான்" என அந்த நிறுவனம் அளித்துள்ள விளக்கம் குறித்து...

எங்கள் நிறுவன குடிநீர் "பாதுகாப்பானதுதான்": பிஸ்லெரி - கோப்புப்படம்
பாட்டிலில் அடைக்கப்பட்ட பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பானதுதான்" என விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம்(எஃப்எஸ்எஸ்ஏஐ) இருந்து இதுவரை பாட்டிலில் அடைக்கப்பட்ட பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பற்றது" என எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும், எஃப்எஸ்எஸ்ஏஐ-இன் சட்ட நடைமுறைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக திங்கள்கிழமை (நவ.23) விளக்கம் அளித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(எஃப்எஸ்எஸ்ஏஐ), பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது 'உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006'-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி அளித்த நிலையில், பிஸ்லெரி நிறுவனம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து மினரல் வாட்டர் அல்லாத பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.
ஆய்வக சோதனையில் அந்த மாதிரி, பரிந்துரைக்கப்பட்ட புரோமேட் எனப்படும் வேதிப்பொருள் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு அளவைவிட அதிகமாக இருப்பதும், அந்த நீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (பிஎஎச்எஸ்) இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த குடிநீரை 'பாதுகாப்பற்றது' என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வக பரிசோதனை முடிவுகளின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் கீழ் பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தல் தொடர்பான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் என தெரிவித்திருந்தது.
பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு பாதுகாப்பானதுதான்
இந்த நிலையில், பாட்டிலில் அடைக்கப்பட்ட பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு "பாதுகாப்பானதுதான்" என விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், எஃப்எஸ்எஸ்ஏஐ-இன் சட்ட நடைமுறைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), பிஸ்லெரி நிறுவனத்திற்கு ஓர் அறிக்கை அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நாங்கள் அறிந்தோம். இந்த சோதனையானது, சுமார் 14 மாதங்களுக்கு முன்பு நடந்தது; அதாவது, எங்கள் நிறுவனத்தின் 143 ஆலைகளில் ஒன்றான கோவாவில் உள்ள உற்பத்தி ஆலையில், 2025 செப்டம்பர் 30-இல் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி தொடர்பானது.
2025 செப்டம்பர் 30 ஆம் தேதி கோவாவில் உள்ள ஆலையில் இருந்து எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள் 6 மாதிரிகளை சேகரித்தனர். முதல் கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 5 மாதிரிகள் தரநிலைக்குள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே ஒரு மாதிரியில் மட்டும் புரோமேட் அளவு அதிகரித்து இருந்தது. ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராம் என்ற பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு பதிலாக, ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த இரண்டு முடிவுகளுக்கு இடையே இருந்த முரண்பாடுகளை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என கருதி, பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, 2025 நவம்பர் 22 ஆம் தேதி அந்த மாதிரியை எஃப்எஸ்எஸ்ஏஐ அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகத்தின் முடிவில், புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது கண்டறியப்பட்டது; அதே சமயம், அந்த மாதிரியில் 'பாலினியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்' இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளை, 2026 பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வ கடிதத்துடன் எஃப்எஸ்எஸ்ஏஐ-இன் மேற்கு மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. எனவே, இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே நாங்கள் கருதினோம். இன்றுவரை, எஃப்எஸ்எஸ்ஏஐ-விடம் இருந்து மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ எந்த கடிதமும் பிஸ்லெரி நிறுவனத்துக்கு வரவில்லை; மேலும், இது குறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ இணையதளத்திலும் எந்த அறிவிப்பும் காணப்படவில்லை.
குடிநீர் பாதுகாப்பே பிஸ்லெரியின் முக்கிய நோக்கம்
குடிநீர் பாதுகாப்பே பிஸ்லெரியின் முக்கிய நோக்கம். நாட்டில் அதிகயளவில் விற்பனையாகும் குடிநீர் தயாரிப்பாளர்களில் ஒன்றான எங்களது நிறுவனம், 10-படிநிலை உற்பத்திச் செயல்பாட்டில், 90-க்கும் மேற்பட்ட கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொள்கிறது. தூய்மையான, பாதுகாப்பான, ஆரோக்கியமான குடிநீரை நுகர்வோருக்கு வழங்குவதையே அடிப்படைக் கொள்கையாக நிறுவனம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்காக எஃப்எஸ்எஸ்ஏஐ-இன் சட்ட நடைமுறைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், பிஸ்லெரி குடிநீர் எப்போதும் அருந்துவதற்கு பாதுகாப்பானது. பல ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய பிராண்டாகத் திகழும் பிஸ்லெரி, தொடர்ந்து பாதுகாப்பான நுகர்வுக்கு உகந்ததாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ள பிஸ்லெரி நிறுவனம், 143 உற்பத்தி ஆலைகள், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 7,500 விநியோக வாகனங்களுடன் செயல்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய குடிநீர் தயாரிப்பு நிறுவனமாகும்.
A trusted brand for years, Bisleri remains safe for consumption..."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


