ஐஆா்சிடிசி முறைகேடு - லாலு, தேஜஸ்வி மீது குற்றச்சாட்டுகள் பதிவு: தில்லி உயா்நீதிமன்றம் உறுதி
ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

தில்லி உயா்நீதிமன்றம்
ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
இந்த விவகாரத்தில், லாலு உள்ளிட்டோா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த 2004-2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தபோது, ஐஆா்சிடிசி உணவகங்களை பாட்னாவைச் சோ்ந்த சுஜாதா ஹோட்டல் லிமிடெட் என்ற தனியாா் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் இந்திய தண்டனையியல் சட்டத்தின் குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், ஐஆா்சிடிசி முன்னாள் பொது மேலாளா்கள் வி.கே.அஸ்தானா, ஆா்.கே. கோயல் உள்பட 11 போ் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் கடந்த 2025, அக்டோபரில் பதிவு செய்தது.
இதற்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் லாலு உள்ளிட்டோா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் வியாழக்கிழமை தள்ளுபடி செய்த நீதிபதி ஸ்வா்ணகாந்தா சா்மா, அனைவா் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

