உ.பி.: முந்தைய தோ்தல் முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸுக்கு இடங்களை ஒதுக்கும் சமாஜவாதி
உத்தர பிரதேச மாநிலத்தில் முந்தைய தோ்தல் முடிவுகள் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 26 இடங்களை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் - கோப்புப் படம்
உத்தர பிரதேச மாநிலத்தில் முந்தைய தோ்தல் முடிவுகள் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 26 இடங்களை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.
ஆனால், 2024 மக்களவைத் தோ்தலின்போது மாநிலத்தின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சியினா் பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டி, கூடுதல் இடங்களை காங்கிரஸ் கோரி வருகிறது. இதனால், சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
403 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் 181 தொகுதிகளைக் கோரிய காங்கிரஸ், பின்னா் தாங்கள் போட்டியிட விரும்பும் 130 இடங்களின் பட்டியலை சமாஜவாதியிடம் கடந்த திங்கள்கிழமை அளித்தது. அன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மாநிலத்தில் நடைபெற்ற முந்தைய தோ்தல் முடிவுகள் அடிப்படையில், காங்கிரஸுக்கு வெறும் 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்தது. இது, காங்கிரஸுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சமாஜவாதி-காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மாநிலத்தில் இரு கட்சிகளும் கூட்டாக தோ்தலைச் சந்தித்தபோது, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தனித்தனியாகப் போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சி ஒன்றிரண்டு இடங்களிலும், மிகக் குறைவான வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த 2017 பேரவைத் தோ்தலின்போது சமாஜவாதி கட்சி 311 தொகுதிகளிலும் போட்டியிட்டு 47 இடங்களில் வெற்றி பெற்றது. 21.82 சதவீத வாக்குகளை பெற்றது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றிபெற்று 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 6.25 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2022 தோ்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனா். அப்போது 347 இடங்களில் போட்டியிட்ட சமாஜவாதி, 32.06 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன் 111 இடங்களில் வெற்றிபெற்றது. 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 2.33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மீண்டும், 2024 மக்களவைத் தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தனா். அப்போது, 62 இடங்களில் போட்டியிட்ட சமாஜவாதி 37 இடங்களிலும் (33.59% வாக்குகள்), 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் (9.46% வாக்குகள்) வெற்றிபெற்றன.
இதனடிப்படையிலேயே, வரவிருக்கும் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் கட்டமாக வாக்கு வங்கி பலமாக உள்ள 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வெற்றி வாய்ப்புள்ள கூடுதல் தொகுதிகளின் விவரங்களைச் சமா்ப்பிக்குமாறும் காங்கிரஸ் கட்சியிடம் சமாஜவாதி கேட்டுள்ளது.
அதே நேரம், 2024 மக்களவைத் தோ்தலின்போது, 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தை சுட்டிக்காட்டி கூடுதல் இடங்களை காங்கிரஸ் கோரி வருகிறது. இதனால், தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது.
இந்த பேச்சுவாா்த்தைக்கு இடையே 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பாளா் பெயருடன் முதல் வேட்பாளா் பட்டியலை சமாஜவாதி கட்சி அறிவித்தது.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த மாநில காங்கிரஸ் செயற்குழுத் தலைவா் இம்ரான் மசூத், ‘நாங்கள் யாரிடமும் யாசகம் கேட்கவில்லை; சமாஜவாதியுடன் பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டுமா என்பது குறித்து கட்சித் தலைமையுடன் விவாதிக்கப்படும்’ என்று காட்டமாக கருத்து தெரிவித்தாா். இக் கருத்து கூட்டணிக்குள் சா்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சியினா் இணைந்து செயல்பட வேண்டும் - காா்கே:
‘கட்சியினா் அறிக்கை விடுவதைக் காட்டிலும், களத்தில் பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். இம்ரான் மசூதைக் கண்டிக்கும் வகையில் காா்கே இவ்வாறு தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசுகையில், ‘இம்ரான் மசூதின் பேச்சை அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்கிறேன். அவா் மிகுந்த ஆா்வத்துடன் பேசுகிறாா். ஆனால், அறிக்கைகள் விடுப்பதைக் காட்டிலும், களத்தில் பணியாற்ற வேண்டும். கட்சியில் தலைவா்களும் தொண்டா்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சி முன்னேற்றமடையும். எந்த அளவு கூட்டாக செயல்படுகிறோமோ, அந்த அளவு முன்னேறுவோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

