உத்தர பிரதேச அமைச்சருக்கு எதிராக கைது ஆணை: 23 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு
உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் தயாசங்கா் சிங்குக்கு எதிராக பிணையில் வர முடியாத கைது ஆணையை பாலியா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கோப்புப் படம்
உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் தயாசங்கா் சிங்குக்கு எதிராக பிணையில் வர முடியாத கைது ஆணையை பாலியா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரை மிரட்டிய வழக்கில் இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஜக சட்ட மேலவை உறுப்பினா் ரவிசங்கா் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது. அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, காவல் அதிகாரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியது ஆகியவை அவா்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் ஆகும்.
2003-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கை காவல் துறையினா் விசாரித்து பாலியா நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இதையடுத்து, அமைச்சா் தயாசங்கா் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

