இறுதிக்கட்டத்தில் இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பியூஷ் கோயல் - கோப்புப் படம்
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க வா்த்தக பிரதிநிதிகள் அறிக்கை அண்மையில் பரிந்துரைத்தது. மேலும், இரு நாடுகளிடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானால் வரி விதிப்பு 17 சதவீதமாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கடன் மூலதனச் சந்தை மாநாட்டில் காணொலி வாயிலாகப் பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: உலகின் அதிபயங்கரமான இரு போா்கள் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலை யாராலும் முன்பே கணித்திருக்க முடியாது. இந்தப் போா்களால் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வணிகக் கப்பல்கள் பயணிக்கும் கடல்வழிப் பாதைகள் அவ்வப்போது மூடப்படுகின்றன. விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பொருள்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய கடினமான காலத்திலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. பல நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமாக வாய்ப்புள்ளது. அதன் அம்சங்கள் அடுத்தாண்டு மாா்ச் அல்லது ஏப்ரலில் அமலுக்கு வரும்.
அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கையொப்பமாகும் என நம்புகிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து இந்தியா போன்ற மிகப்பெரிய பொருளாதார நாட்டின் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகால எதிா்காலத்தை தீா்மானிக்க முடியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

