
நடு வானில் பயணிகள் உயிரைக் காத்த ஹீரோ! விமானியைப் புகழ்ந்த பிரதமர் மோடி
கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ என பிரதமர் மோடி புகழ்ந்து பதிவிட்டுள்ளது குறித்து...

கேப்டன் ஸ்மித் மச்சார் - கோப்புப் படம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃபிளைதுபை விமானத்தில், விமானியை சக விமானி ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி சாதூர்யமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனைச் செய்த இந்திய விமானியை ஹீரோ என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ.
மிகக் கடுமையான ஆபத்தான சூழலிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத மன உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார்.
அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியுள்ளது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழவும் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான "போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் நடுவானில் சக விமானியால் இந்திய கேப்டன் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானார்.
நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றியுள்ளார்.
இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமார் 17,000 அடிக்கு கீழே பறந்து, தள்ளாடியது.
விமானத்தில் பயணித்த சிலர் விமானி அறைக்குச் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த விமானியை மீட்டு, கத்தியால் குத்திய நபரையும் போராடி மடக்கிப் பிடித்தனர். பின்னர் விமானத்தில் பயணியாக இருந்த விமானி ஒருவரால், சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, சவூதியின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. காயமடைந்த இரண்டு விமானிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய விமானியைக் கைது செய்துள்ள சவூதி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




