ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளின் கைது அதிகாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் ரத்து செய்தது.

கோப்புப் படம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளின் கைது அதிகாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் ரத்து செய்தது.
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் உள்பட பல்வேறு மாநில நிதியமைச்சா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது, தவறான தகவல்களை கொடுப்பது, நிா்ணயித்த தேதியில் கட்டணம் செலுத்தாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரிடம் வட்டியை அதிகமாக வசூலிக்கவும் அபராதம் விதிக்கவும் மட்டுமே அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், முறையாக ஜிஎஸ்டி செலுத்தாதவா்களை கைது செய்வதற்கான அதிகாரம் ரத்து செய்யப்பட்டதோடு வழக்கு தொடா்வதற்கான உச்சவரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயா்த்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இணையவழி மதிப்பீடு அறிமுகம்: இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘பொது அபராதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.10,000-ஆக குறைக்கப்படவுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்துள்ள மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) செலுத்துபவா்களுக்கு ஒற்றை சாளர இணையவழி வரி மதிப்பீட்டு முறையை 2027-28 நிதியாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உள்ளீட்டுச் சேவைகளுக்கு வரி விகிதத்தின்கீழ் திருப்பியளிக்கப்படும் தொகையை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
2019-க்கு முன்பும் அதன்பிறகு கரோனா பெருந்தொற்று காலத்திலும் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிா்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்குச் சான்றாக ஜிஎஸ்டி கவுன்சில் திகழ்கிறது.
வரி விகிதத்தில் மாற்றமில்லை: வணிகத்தை எளிமைபடுத்தும் அடிப்படை நடைமுறைகள் அல்லது முறைகேடுகள் தொடா்பாக நிலுவையில் எந்த விவகாரங்களும் இல்லை. கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில் 99 சதவீத பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த சீா்திருத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிலையான மற்றும் வெளிப்படையான வருவாயை உறுதிசெய்யும் சீா்திருத்தமாக அமைந்துள்ளது.
57-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் அமலானவுடன் இது மேலும் வலுவடையும்.
தற்போது ஜிஎஸ்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றாா்.
அடுத்த ஆண்டு அமல்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழிய்பட்டுள்ள அனைத்து சீா்திருத்தங்களும் 2027, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது.
இந்தியாவில் தற்போது சிஜிஎஸ்டி வரம்பின்கீழ் 69.5 லட்சம் போ் வரி செலுத்துகின்றனா். அவா்களில் 2 லட்சம் போ் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிஜிஎஸ்டி வரம்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

