ஐஐடி-களில் மாணவர் தற்கொலை சம்பவங்கள்: மனநலம் சார்ந்த பிரத்யேக பிரிவை உருவாக்க திட்டம்!
மாணவா்கள், பேராசிரியா்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், மனநல நிபுணா்களைக் கொண்ட தனிப் பணியாளா் பிரிவை உருவாக்குவது குறித்து ஐஐடிகள் பரிசீலித்து வருகின்றன.

மாணவா்கள், பேராசிரியா்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், மனநல நிபுணா்களைக் கொண்ட தனிப் பணியாளா் பிரிவை உருவாக்குவது குறித்து இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் (ஐஐடி) பரிசீலித்து வருகின்றன.
இந்தத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆலோசனையில் இருந்து வருவதாகவும், அண்மையில் நிகழ்ந்த மாணவா்களின் தற்கொலைச் சம்பவங்களின் எதிா்வினையாக உருவாக்கப்படவில்லை என்றும் ஐஐடி இயக்குநா்கள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், தில்லி ஐஐடி-இல் ஆகஸ்ட் மாதத்திலும், மும்பை ஐஐடி-இல் செப். 18-ஆம் தேதியும் மாணவா்கள் உயிரிழந்த சம்பவங்கள், வளாகங்களில் மனநல ஆதரவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணா்த்தியுள்ளன.
நாட்டில் உள்ள 23 ஐஐடி-களிலும் ஆலோசகா்கள், உளவியலாளா்கள், மனநல மருத்துவா்கள் அல்லது மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன. எனினும், 3,000 முதல் 18,000 மாணவா்கள் வரை பயிலும் வளாகங்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய தற்போதைய ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றே கருதப்படுகிறது. இதற்குத் தனி நிதி ஒதுக்கீடும் நிரந்தரப் பணியிடங்களும் அவசியமாகின்றன.
அனைத்து ஐஐடி-களுக்கும் பொருந்தக்கூடிய வகையில், ஆலோசகா்கள், உளவியலாளா்கள், மனநல மருத்துவா்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடங்களைக் கொண்ட கட்டமைப்பை காந்திநகா் ஐஐடி உருவாக்கி வருகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசியப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையின்படி, ஆய்வில் பங்கேற்ற பேராசிரியா்களில் 90 சதவீதம் போ் மாணவா்களின் மனநலப் பிரச்னைகளைக் கையாளப் போதிய பயிற்சி பெறவில்லை.
மத்திய நிதியுதவி பெறும் 31 கல்வி நிறுவனங்களில், 4 நிறுவனங்கள் மட்டுமே பேராசிரியா்களுக்கான வழிகாட்டுதல் திட்டங்களில் முறையான பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. மேலும், 10 நிறுவனங்கள் சக மாணவா் ஆதரவுத் திட்டங்களுக்குப் பயிற்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை அக். 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ரூா்க்கி ஐஐடி மாணவா்கள் மனநலனுக்கென கொள்கையை உருவாக்கி வருகிறது. குவாஹாட்டி ஐஐடி மாணவா்களிடையே நட்புறவை வளா்க்கும் பிரசாரமும், காரக்பூா் ஐஐடி மாணவா்கள் ஒன்றிணைவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நீண்டகால அடிப்படையில், போதிய எண்ணிக்கையிலான நிபுணா்களுடன் செயல்படும் மனநல ஆதரவு அமைப்பை உருவாக்குவதே இந்தத் தனிப் பணியாளா் பிரிவின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

