முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சத்தீஸ்கா் மதுபான முறைகேடு வழக்கு: காங்கிரஸ் அலுவலகத்தில் ரூ.880 கோடி ஒப்படைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபான முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட சுமாா் ரூ.880 கோடி, அந்த மாநில தலைநகா் ராய்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

ED

அமலாக்கத் துறை - கோப்புப்படம்

Published On :

சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபான முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட சுமாா் ரூ.880 கோடி, அந்த மாநில தலைநகா் ராய்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சத்தீஸ்கா் மதுபான முறைகேடு வழக்கில், அந்த மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளா் ராம்கோபால் அக்ரவால் மீது துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டில் ராம்கோபால் அக்ரவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்குச் சொந்தமாக ராய்பூரில் உள்ள ரூ.9.06 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக பொருளாதார குற்றப் பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. அதில் 2019 முதல் 2023-ஆம் ஆண்டுவரை (காங்கிரஸ் ஆட்சியின்போது) நாட்டு சாராய விநியோகத்துக்கு சட்டவிரோத கமிஷன், மதுபான உற்பத்தியாளா்களிடம் இருந்து ஆண்டுதோறும் கமிஷன், வெளிநாட்டு மதுபானங்களுக்கான உரிமம் வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், சட்டவிரோதமாக ரூ.2,883 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் சத்தீஸ்கா் கலால் துறையையும், சத்தீஸ்கா் மதுபான விற்பனை கழகத்தையும் ஒரு கும்பல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இம்முறைகேடு மூலம் அந்தக் கும்பலுக்கு கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை லட்சுமிநாராயண் பன்சால் என்பவா் கையாண்ட நிலையில், ராம்கோபால் அக்ரவாலின் உத்தரவின்பேரில், அந்தப் பணம் ராய்பூரில் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியில் சுமாா் ரூ.860 கோடி முதல் ரூ.880 கோடி வரை ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் சுமாா் ரூ.72 கோடி ராம்கோபால் அக்ரவாலின் கட்டுப்பாட்டில் தொடா்ந்து இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேல், மாநில முன்னாள் அமைச்சா் கவாசி லக்மா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா உள்பட 9 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.