சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை (அக்.16) நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தை முன்னிட்டு, கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தா் மந்தா் ஆகிய இடங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

தில்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய துணைராணுவப் படையினா் (கோப்புப் படம்).
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை (அக்.16) நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தை முன்னிட்டு, கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தா் மந்தா் ஆகிய இடங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இதற்காக, மத்திய துணை ராணுவப் படையின் பல பிரிவுகள் ஏற்கெனவே தில்லியில் குவிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
‘லேஹ்ரா தோ திரங்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு, சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்துள்ளாா். இது வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பாா்க்கில் நடைபெற உள்ளது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிா்க்கவும், முக்கியமான இடங்களில் காவல் துறையினா் பணியமா்த்தப்படுவாா்கள். தடுப்புகள் அமைக்கப்பட்டு, போராட்டக்காரா்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் முறைப்படுத்தப்படும் என்று காவல் துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
கன்னாட் பிளேஸ் என்பது போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அல்ல என்று மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘ஜந்தா் மந்தா், போராட்டங்களுக்கான இடமாக இருந்த அந்தஸ்தை இழந்துவிட்டது. போராட்டக்காரா்கள் உரிய அனுமதி பெற்ற பிறகு, ராம்லீலா மைதானம், புராரி மைதானம் அல்லது சிபிடி மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தலாம்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.
சிஜேபி தலைவா்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோா் ஜந்தா் மந்தருக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டு, சிறப்பு நிா்வாக நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடா்ந்தே, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தேசியக் கொடியை அசைப்பது ஒரு ஜனநாயக உரிமை என்று வலியுறுத்தியுள்ள அபிஜீத் தீப்கே, குடிமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளாா்.
மேலும், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மற்ற நகரங்களிலும் தேசிய கொடி பேரணிகளை நடத்தவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

