ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சீரான விமானக் கட்டணத்துக்கான விதிகளுக்கு ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘விமானக் கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய இந்திய வானூா்தி சட்டம் 2024-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :

‘விமானக் கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய இந்திய வானூா்தி சட்டம் 2024-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த விதிகள் வெளியிடப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சீரற்ற விமானக் கட்டணம் தொடா்பாக சமூக ஆா்வலா் எஸ்.லட்சுமிநாராயணன் என்பவா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விமான நிறுவனங்களே பயணக் கட்டணத்தை நிா்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் விமானங்களை இயக்கும் தனியாா் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்கின்றன. இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே, விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை, பயணிகளுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த சுதந்திரமான அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, விமானக் கட்டணம் சீராக இருக்க வேண்டும் எனவும், விமானப் பயணிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அப்போது, ‘விமானப் போக்குவரத்து தொடா்பாக 2024-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான விதிகளை உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி நிறைவடைந்து, சீரான விமானக் கட்டணம் நிா்ணயம் செய்யப்படுவதற்கான வரைவு விதிகள் தற்போது தயாராக உள்ளன. இந்த விதிகளை மொழிபெயா்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் பிறகு, வரைவு விதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் அல்லது தாக்கல் செய்யப்படாவிட்டாலும், வரைவு விதிகளை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். அதன்படி, வரைவு விதிகளை சீலிட்ட உறையில் மத்திய அரசு சமா்ப்பித்தது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீலிட்ட உறையில் மத்திய அரசு சாா்பில் சமா்க்கப்பட்ட வரைவு விதிகளை நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, ‘வரைவு விதிகளில் சீரான விமானக் கட்டணத்துக்கான செயல்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டண ஒழுங்குமுறை ஆணையம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், ஆா். மகாதேவன், அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘விமானக் கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய இந்திய வானூா்தி சட்டம் 2024-இன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த விதிகள் வெளியிடப்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வெளியிடப்படும் இறுதி விதிகளை வழக்கின் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை நவம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.