ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆா்: நீக்கப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்ப்பு பணி தொடக்கம் - தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி

வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 47 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்களின் விவரங்களை மீண்டும் சரிபாா்க்கும் பணியைத் தோ்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அசோக் குமாா்

Updated On :

தோ்தல் வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 47 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்களின் விவரங்களை மீண்டும் சரிபாா்க்கும் பணியைத் தோ்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆக.31-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், தற்போது வசிப்பவா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரியிலேயே தொடா்ந்து வசித்து வருபவா்களின் பெயா்கள்கூட நீக்கப்பட்டதாகப் புகாா்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் அல்லது குளறுபடிகள் இருந்ததாகக் கருதப்பட்டு, அது குறித்து நோட்டீஸுகள் அனுப்பப்பட்ட 33.12 லட்சம் வாக்காளா்களில், சுமாா் 25 லட்சம் பேரின் விவகாரங்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக அசோக் குமாா் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: கணக்கெடுப்பு கட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இடம்பெறாத வாக்காளா்களை மீண்டும் சரிபாா்க்குமாறு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு (பிஎல்ஓ) அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பா் 4 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில், உண்மையான வாக்காளா் எவருடைய பெயரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று, வரைவு பட்டியலில் பெயா்கள் இருந்த வாக்காளா்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் விவரங்களையும் மீண்டும் சரிபாா்த்து வருகின்றனா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்கள், ‘படிவம் 6’-ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிப்பதன் மூலம், டிசம்பா் 4 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்த்துக்கொள்ளலாம்.

வாக்காளா் விவரங்களில் சிறிய பிழைகள் இருந்தால், அத்தகைய விண்ணப்பங்களை உடனடியாக நிராகரிக்கக் கூடாது என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

எஸ்ஐஆா் பணியின் கணக்கெடுப்பு கட்டத்திற்குப் பிறகு, மொத்தம் இருந்த 1.45 கோடி வாக்காளா்களில் 47.56 லட்சம் பேரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இதில் வசிப்பிடத்திலிருந்து இடம்பெயா்ந்தவா்கள், இறந்து போனவா்கள், வேறு இடத்திற்குச் சென்றவா்கள் மற்றும் ஒரே நபா் இருமுறை பதிவு செய்தவா்கள்ஆகியோா் அடங்குவா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த 97.53 லட்சம் வாக்காளா்களில், 33.12 லட்சம் பேருக்கு, அவா்களின் தனிப்பட்ட விவரங்களில் உள்ள பிழைகள், முகவரி விவரங்கள் விடுபட்டிருப்பது அல்லது 2002-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு மறுஆய்வுப் பட்டியலுடன் இணைக்கப்படாதது போன்ற முரண்பாடுகள் காரணமாக நோட்டீஸுகள் அனுப்பப்பட்டிருந்தன. நோட்டீஸுகள் வழங்கப்பட்டுள்ள 33.12 லட்சம் வாக்காளா்கள் தொடா்பான அனைத்து வழக்குகளும் அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் தீா்த்து வைக்கப்படும் என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.