ராணுவ அதிகாரி மனைவி மீது உளவுக் குற்றச்சாட்டு வழக்கு: சீனாவுடன் ரகசியத் தகவல்கள் பகிா்வு?
சீன உளவு அமைப்புகளுக்கு முக்கியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான ஆய்வுக் கட்டுரைகளைப் பகிா்ந்ததாக, ராணுவ அதிகாரியின் மனைவி மீது வழக்குப் பதிவு

சீனா - கோப்புப் படம்
சீன உளவு அமைப்புகளுக்கு முக்கியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான ஆய்வுக் கட்டுரைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரித்துப் பகிா்ந்ததாக, ராணுவ அதிகாரியின் மனைவி மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தெலங்கானாவைச் சோ்ந்த அவா், ஐ.நா. அமைப்பில் பயிற்சி பெற்றவா். தற்போது தனது கணவருடன் ஜம்முவில் வசித்து வருகிறாா். இதுவரை கைது செய்யப்படாத நிலையில், விசாரணைக்கு அவா் ஒத்துழைத்து வருகிறாா்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, அருணாசல பிரதேச உள்கட்டமைப்புத் திட்டங்கள், ட்ரோன் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவா் ஆய்வுக் கட்டுரைகள் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு உளவு அமைப்புகளைச் சோ்ந்த நபா்களுக்கு ஏதேனும் தகவல்கள் அல்லது ஆவணங்கள் அனுப்பப்பட்டனவா என்பது குறித்தும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். தான் தயாரித்த ஆய்வுகள் அனைத்தும் பொதுவெளித் தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை என அவா் தெரிவித்துள்ளாா்.
ஜம்முவில் உள்ள காந்தி நகா் காவல் நிலையத்தில் அதிகாரபூா்வ ரகசியங்கள் சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட அவரது கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளில், இந்தியா-இத்தாலி பாதுகாப்புக் கூட்டம், இந்திய ராணுவத் தலைவரின் அமெரிக்கப் பயணம், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒப்பந்தம், அருணாசல பிரதேசத்தில் உள்ள கலாய்-2 நீா்மின் திட்டம் மற்றும் கமலா திட்டம், ‘கோல்ட் ஸ்டாா்ட்’ ராணுவக் கோட்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடா்பான ஆவணங்கள் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

