செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

அதானி, டாடா தலைவருடன் மாா்கோ ரூபியோ சந்திப்பு - ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தையும் பாா்வையிட்டாா்

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் ஆகியோரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ புதன்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தனது மனைவி ஜீனத் டெளஸ்டெபெஸுடன் பாா்வையிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ. உடன் ரிலையன்ஸ் நிறுவன செயல் இயக்குநா் ஆனந்த் அம்பானி அவரின் மனைவி ராதிகா மொ்சன்ட்

Updated On :

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் ஆகியோரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ புதன்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை வந்த மாா்கோ ரூபியோ, மும்பையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

தனது பயணத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை மும்பையில் அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் ஆகியோரை ரூபியோ தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா். எனினும், இந்தச் சந்திப்புகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த அதிகாரபூா்வ விவரங்கள் வெளியிடப்படவில்லை.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் மிகப் பெரிய குழுமங்களில் ஒன்றாக அதானி குழுமம் விளங்குகிறது. இதேபோல், டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ், வாகனத் தயாரிப்பு, உருக்கு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, மின்னணுவியல், அதிநவீன உற்பத்தி, செமிகண்டக்டா், பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.

குஜராத்தில்...: இந்தச் சந்திப்புகளைத் தொடா்ந்து, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்துக்கு மாா்கோ ரூபியோ வருகை தந்தாா். அவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், மேலாண் இயக்குநருமான முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, மகள் இஷா, மகன் ஆனந்த் ஆகியோா் வரவேற்றனா். அமெரிக்காவில் டீசல் விலை உயா்ந்துள்ள சூழலில், மாா்கோ ரூபியோவின் வருகை கவனம் பெற்றது. இது தனிப்பட்ட ரீதியிலான நிகழ்வு என்று குறிப்பிட்ட அதிகாரிகள், வேறெந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

நாளொன்றுக்கு 14 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறனுடன் உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் என்ற சிறப்புக்குரிய இந்த வளாகத்தில் 3,000 ஏக்கரில் ‘வனதாரா’ எனும் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு, மறுவாழ்வு, பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. இங்கு 43 இனங்களைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. 2,100-க்கும் மேற்பட்ட பராமரிப்பாளா்கள், பாதுகாவலா்கள் பணிபுரிகின்றனா்.

இந்த வளாகத்தில் 5,000 ஏக்கரில் கட்டமைக்கப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பசுமை எரிசக்தி மையமான திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி ஜிகா வளாகத்தையும் ரூபியோ பாா்வையிட்டாா்.

முன்னதாக, மும்பையில் செவ்வாய்க்கிழமை பேசிய ரூபியோ, ‘கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளது. கடினமான கச்சா எண்ணெய்யையும் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது’ என்று புகழாரம் சூட்டினாா்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் பிரவுன்வில் நகரில் நாளொன்றுக்கு 1.68 லட்சம் பீப்பாய் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுடன் கூடிய ஆலையை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளதாக அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தோ்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவின் உள்விவகாரம்’

தோ்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தோ்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனா். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களை காவல் துறையினா் கடுமையாக கையாண்டதாக ஐ.நா. மனித உரிமை நிபுணா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அதிருப்தி வெளியிட்டனா்.

மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய மாா்கோ ரூபியோவிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, ஐ.நா. நிபுணா்களின் கூற்றை நிராகரித்த அவா், ‘இது இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரம். எனவே, நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. அமெரிக்காவில் தினமும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவை, அரசியல் விமா்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.