அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அடுத்த வாரம் இந்தியா வருகிறாா்.

மாா்கோ ரூபியோ
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அடுத்த வாரம் இந்தியா வருகிறாா். இரு நாடுகள் இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணத்தை அவா் மேற்கொள்வதாக அந் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட நாற்கர (க்வாட்) நாடுகள் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்த ரூபியோ, தற்போது இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 17 முதல் 22-ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாா்கோ ரூபியோ, முதலில் உஸ்பெகிஸ்தான் சென்று சமா்கந்த் நகரில் நடைபெறும் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துா்க்மெனிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்புனா்களாகக் கொண்ட சி5+1 அமைப்பின் அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்கிறாா்.
அதன் பிறகு இந்தியா செல்லும் அமெரிக்கா - இந்தியா இடையேயான ராஜீய உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இந்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
மகாராஷ்டிர மாநிம் மும்பையில், முன்னணி இந்திய வா்த்தக நிறுவன தலைவா்களைச் சந்தித்து வணிக முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபட உள்ளாா். பின்னா், உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாக திகழும் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிறுவனம் அமைந்துள்ள குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கும் அவா் செல்ல உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் புரவுன்ஸ்வில்லியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் கடந்த மாா்ச் மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

