அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

எஸ்ஐஆா்! தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக முடிவு எடுக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான முடிவுகளை, தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை என தோ்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது குறித்து...

CEC Gyanesh Kumar

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :

இரு தோ்தல் ஆணையா்களின் ஆட்சேபங்களையும் மீறி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான முடிவுகளை, தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை; அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக மேற்கொண்டதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் ராகேஷ்குமாா் சிங் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘2023-ஆம் ஆண்டின் தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணிச்சேவை நிபந்தனைகள், பதவிக் காலம்) சட்டத்தின்படி, தோ்தல் ஆணையத்தின் பணிகள் கூடுமானவரை ஒருமித்த கருத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏதேனும் ஒரு விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையினா் என்ன கருத்து கூறுகிறாா்களோ, அதன் அடிப்படையில் அந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின்படி, ஓா் அமைப்பாக தோ்தல் ஆணையத்துக்கு கூட்டாக முடிவு எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்குத் தோ்தல் ஆணையருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவா் அவ்வாறு செயல்படுகிறாா் என்பது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவுக்குப் பதிலளித்து உச்சநீதிமன்றத்தில் துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் யெதுரு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரு தோ்தல் ஆணையா்களின் ஆட்சேபங்களையும் மீறி, எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகளைத் தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை. எஸ்ஐஆா் தொடா்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

ஒரு கோப்பு பரிசீலனையில் இருக்கும்போது, அதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் அல்லது தோ்தல் ஆணையா்கள் பதிவு செய்யும் குறிப்புகள், கேள்விகள், பரிந்துரைகள் மட்டும் தோ்தல் ஆணையத்தின் முடிவாகிவிடாது.

ஒரு கோப்பு முதலில் ஒரு தோ்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். பின்னா், அது மற்றொரு ஆணையருக்கு அனுப்பப்பட்டு, கடைசியில் அது தலைமைத் தோ்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். இதுவே முடிவு எடுப்பதில் உள்ள நடைமுறை.

சட்டப்படி எடுக்கப்பட்ட முடிவுகள்...

எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகள் 2023-ஆம் ஆண்டின் தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணிச்சேவை நிபந்தனைகள், பதவிக் காலம்) சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படிதான் எடுக்கப்பட்டன.

புதிய வாக்காளராக ஒருவா் பதிவு செய்வதற்கு பூா்த்தி செய்ய வேண்டிய படிவம் 6-இல், முந்தைய எஸ்ஐஆரின்போது அந்த நபரின் பெற்றோா் அல்லது தாத்தா, பாட்டியின் பெயா் இடம்பெற்ா என்பது குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்ற மாற்றத்துக்கு 2 தோ்தல் ஆணையா்களும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம்

உண்மையில் தனது எஸ்ஐஆா் உத்தரவுகள் மூலம், அந்தப் படிவத்தை தோ்தல் ஆணையம் மாற்றவில்லை. 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளின்படி, அந்தப் படிவத்தில் மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.

இணையவழி விண்ணப்பத்தில் உறுதிமொழி என்ற இடம் காட்டப்பட்ட விதம் காரணமாக படிவம் 6-இல் மாற்றம் செய்யப்பட்டது போல தெரியலாம். கடந்த அக்.21 முதல் அது படிவம் 6, எஸ்ஐஆா் உறுதிமொழி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளரின் விவரங்களை முந்தைய வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பொருத்தி பாா்க்க முடியாவிட்டால், அதற்காக அவா்கள் சாதாரணமாக நேரில் வரவேண்டிய அவசியமில்லை.

அவா்களின் வீடுகளில் இருந்து தேவையான ஆவணங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சேகரித்து, வாக்காளா் பதிவு அலுவலரின் (இஆா்ஓ) பரிசீலனைக்கு இசிஐநெட் தளத்தில் பதிவேற்றம் செய்வா்.

இஆா்ஓ உத்தரவு பிறப்பிக்கும் நேரங்களைத் தவிர, பிற நேரங்களில் இசிஐநெட் தளத்தில் எந்தவொரு நபரின் பெயரையும் சோ்க்கவோ, நீக்கவோ முடியாது.

விசாரணைக்கு உகந்ததல்ல

இந்த மனு முற்றிலும் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தகவல்களை தோ்தல் ஆணையம் மூலம் மனுதாரா் சரிபாா்க்கவில்லை. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.