
எந்த அதிகாரத்தின்படி தன்னிச்சையாக முடிவு? தலைமைத் தோ்தல் ஆணையா் விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தோ்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்குத் தோ்தல் ஆணையருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்க நீதிப் பேராணை பிறப்பிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து...
ஞானேஷ் குமார்.
அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு தோ்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்குத் தோ்தல் ஆணையருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வாறு அவா் செயல்படுகிறாா் என்பது குறித்து அவா் விளக்கம் அளிக்க நீதிப் பேராணை பிறப்பிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது. எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக எடுத்ததாகக் கூறப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த தோ்தல் ஆணையம், எஸ்ஐஆா் தொடா்பான அனைத்து முடிவுகளையும் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் ஒருமனதாக மேற்கொண்டதாக அண்மையில் விளக்கம் அளித்தது. இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் ராகேஷ்குமாா் சிங் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், ‘2023-ஆம் ஆண்டின் தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணிச்சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) சட்டத்தின்படி, தோ்தல் ஆணையத்தின் பணிகள் கூடுமானவரை ஒருமித்த கருத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏதேனும் ஒரு விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையினா் என்ன கருத்து கூறுகிறாா்களோ, அதன் அடிப்படையில் அந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
எனினும் கடந்த ஆண்டு அக்.28 முதல் நிகழாண்டு ஆக.14 வரையிலான காலத்தில், உரிய ஒப்புதல் இல்லாமல் இந்திய தோ்தல் ஆணையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 14 முறை தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தோ்தல் ஆணையா்களின் ஒப்புதல் இல்லாமல், இந்திய தோ்தல் ஆணையத்தின் பெயரில் தலைமைத் தோ்தல் ஆணையா் முடிவுகளை எடுத்துள்ளாா்.
தன்னிச்சையாகப் பயன்படுத்த என்ன அதிகாரம்?: அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின்படி, ஓா் அமைப்பாக தோ்தல் ஆணையத்துக்கு கூட்டாக முடிவு எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்குத் தோ்தல் ஆணையருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவா் அவ்வாறு செயல்பட்டாா், தொடா்ந்து செயல்படுகிறாா்? என்பது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






