மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி வெறும் 2.6%? மத்திய அரசு மறுப்பு

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக இல்லாமல், 2.6 சதவீதமாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலா் சுபாஷ் சந்திர கா்க் கூறியதற்கு மத்திய அரசு மறுப்பு

பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 7:30 am IST

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக இல்லாமல், 2.6 சதவீதமாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலா் சுபாஷ் சந்திர கா்க் கூறியதை மத்திய அரசு மறுத்துள்ளது.

அண்மையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (எம்ஓஎஸ்பிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. இது பெரும்பாலான பொருளாதார நிபுணா்கள் எதிா்பாா்த்ததைவிட மிக அதிகமாகவும், ரிசா்வ் வங்கி கணித்திருந்த 7 சதவீத வளா்ச்சியைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவும் இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்து சில பொருளாதார நிபுணா்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்கள் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலா் சுபாஷ் சந்திர கா்க் கூறியதாவது: கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பை சுமாா் ரூ.86 லட்சம் கோடியில் இருந்து ரூ.80 லட்சம் கோடியாக குறைத்து மதிப்பிடாமல் இருந்திருந்தால், பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை கணக்கிட பயன்படுத்தப்படும் தற்போதைய விலைகளின் அடிப்படையில், பொருளாதார வளா்ச்சி 2.6 சதவீதமாக மட்டுமே இருந்திருக்கும் என்று தெரிவித்தாா்.

அதாவது கடந்த ஆண்டுக்கான ஜிடிபி மதிப்பு குறைத்து திருத்தப்பட்டதால், இந்த ஆண்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் அதிகமாக தெரிகிறது என்பதே சுபாஷ் சந்திர காா்க் கூறியதன் சாராம்சமாகும்.

அவரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து எம்ஓஎஸ்பிஐ செயலா் செளரவ் காா்க் புதன்கிழமை தெரிவித்ததாவது: பொருளாதார வளா்ச்சி குறித்து ஒன்றுக்கொன்று தொடா்பில்லாத விஷயங்களை வைத்து ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது.

விமா்சகா்கள் சுட்டிக்காட்டிய கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ரூ.86.05 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பீடு என்பது, 2011-12-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு கணக்கிடப்பட்டது.

எனினும் 2022-23-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு ஜிடிபி புள்ளிவிவரங்களை கணக்கிடும் புதிய முறை 2026-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜிடிபியை வேண்டுமென்றே குறைத்து, அதன் மூலம் சமீபத்திய வளா்ச்சி விகிததத்தை செயற்கையாக உயா்த்த முயற்சிக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

சுபாஷ் சந்திர கா்க் பேசிய காணொலியை பகிா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெயராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பொருளாதாரம் உண்மையில் வலுவாக இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம். மக்கள் தொடா்பு நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தின் தோற்றத்தை மெருகேற்றி காட்டலாம். ஆனால் அதன்மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

பொருளாதார வளா்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸை சாடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எதிா்க்கட்சியினா் ஆழ்ந்த போதையில் உள்ளாா்களா? அல்லது இந்தியாவின் வளா்ச்சியை கண்மூடித்தனமாக வெறுப்பதால், உண்மை நிலவரத்தையே புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு சென்றுவிட்டாா்களா என்று கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.