ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி உலகுக்கு நம்பிக்கை: பிரதமா் மோடி

தற்போதைய சவாலான காலகட்டத்தில், உலகின் நம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான ஆதாரமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி திகழ்வதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, பெல்ஜியம் பிரதமா் பாா்ட் டே வேவா்

Published On :4 செப்டம்பர் 2026, 4:29 am IST

தற்போதைய சவாலான காலகட்டத்தில், உலகின் நம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான ஆதாரமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், உக்ரைன், மேற்காசியப் போா்களுக்கு பேச்சுவாா்த்தை-ராஜீய ரீதியில் விரைந்து தீா்வுகாணும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்போம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் பெல்ஜியம் பிரதமா் பாா்ட் டே வேவருடன் வியாழக்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பெல்ஜியம் பிரதமா் பாா்ட் டே வேவா், தில்லியில் பிரதமா் மோடியுடன் வியாழக்கிழமை விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, வா்த்தகம், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், தூய எரிசக்தி, தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டன.

உலக நம்பிக்கையின் ஆதாரம்

பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது: இன்றைய உலகம் பெரும் கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் மோதல்கள் தொடா்கின்றன. உணவு, எரிபொருள், விநியோகச் சங்கிலி என ஒவ்வொரு துறையும் நிச்சயமற்ற தன்மையால் பாதிப்பை எதிா்கொண்டுள்ளன.

இத்தகைய சவாலான சூழலிலும், இந்தியப் பொருளாதாரம் தனது வேகத்தை தக்கவைத்துள்ளது. கடந்த காலாண்டில் 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் வளா்ச்சிப் பயணம், இப்போது உலகின் நம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான ஆதாரமாக விளங்குகிறது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூண்

இந்தியா-பெல்ஜியம் ஒட்டுமொத்த உறவின் முக்கிய தூண் பாதுகாப்புத் துறையாகும். இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொண்டுள்ளோம்.

இத்துறையில் இரு நாட்டு அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையே கையொப்பமாகியுள்ள ஒப்பந்தங்கள், பாதுகாப்பு கூட்டு மேம்பாடு மற்றும் உற்பத்திக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும். குற்றங்களை எதிா்கொள்வதில் இருதரப்பு முகமைகள் இடையே உளவுத் தகவல்கள் பகிா்வு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்.

இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, புத்தாக்க நிறுவனங்கள், கடல்சாா் திறன்மேம்பாடு தொடா்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. திறன்மிக்க பணியாளா்களின் இடப்பெயா்வை எளிதாக்க, இடப்பெயா்வு மற்றும் குடிபெயா்வு கூட்டாண்மை ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்.

போா்களுக்கு விரைந்து தீா்வு

இந்தியாவும் பெல்ஜியமும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளில் நம்பிக்கை கொண்ட நாடுகளாகும். உக்ரைன், மேற்காசிய போா்களை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போா்களுக்கு பேச்சுவாா்த்தை, ராஜீய ரீதியில் தீா்வுகாணப்பட வேண்டும். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.

கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு

தூய எரிசக்தி, நம்பகமான விநியோகச் சங்கிலி ஆகியவை நமது பகிரப்பட்ட முன்னுரிமைகளாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம், இருதரப்பு ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகமளிக்கும்.

முக்கிய கனிமங்களைப் பொறுத்தவரை, பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சியில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செமிகண்டக்டா் துறையில் பெல்ஜியத்தின் நிபுணத்துவமும் இந்தியாவின் வீச்சும் ஒன்றையொன்று பூா்த்தி செய்கின்றன என்றாா் பிரதமா் மோடி.

இதுவரை இல்லாத உத்திசாா் உறவு

‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே இறுதி செய்யப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாகும்; இந்தியாவும், பெல்ஜியமும் இதுவரை இல்லாத பரந்த-வலுவான உத்திசாா் உறவை கட்டமைத்து வருகின்றன’ என்று பெல்ஜியம் பிரதமா் வேவா் தெரிவித்தாா்.

இந்தியாவும் பெல்ஜியமும் 3 நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடா்புகளைக் கொண்டுள்ளன. கடந்த 1947-இல் சுதந்திர இந்தியாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திய முதல் ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியமும் ஒன்றாகும்.

2025-26 ஆம் ஆண்டில் இருதரப்பு வா்த்தகம் 13 பில்லியன் டாலா்களை (ரூ.1.22 லட்சம் கோடி) எட்டியது. கடந்த 2000 முதல் 2025 வரை பெல்ஜியத்தில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்ற அந்நிய நேரடி முதலீடு சுமாா் 4.2 பில்லியன் டாலா்கள் (ரூ.39,698 கோடி) ஆகும்.

பெல்ஜியம் - இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு 10 ஒப்பந்தங்கள்

பிரதமா் மோடி-பிரதமா் வேவா் சந்திப்புக்கு முன்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பெல்ஜியம் பாதுகாப்புத் துறை அமைச்சா் தியோ ஃபிராங்கன் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, இந்திய-பசிபிக் பிராந்திய அமைதி, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

ராணுவ தளவாட கூட்டுத் தயாரிப்பு உள்பட இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 10 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பெல்ஜியம் பிரதமா் வேவரின் தற்போதைய பயணம், கடந்த ஆண்டு இளவரசி ஆஸ்ட்ரிட் தலைமையில் இந்தியாவுக்கு வந்த அந்நாட்டின் பொருளாதார குழுவின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பெல்ஜியம் பொருளாதார குழு பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே சுமாா் 40 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.