
சுங்கச்சாவடிகளே மோசடி! அதில் இப்படி ஒரு மோசடியா? 100 சுங்கச்சாவடிகள் சிக்கின!
பல இடங்களில் கால வரம்பு இன்றி இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில் நடந்துள்ள மோசடி குறித்து..

சுங்கச்சாவடி - பிரதி படம் - ENS
நாடு முழுவதும் போலி செயலிகளைக் கொண்டு மக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளைக் கண்டறிந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க போலியான செயலிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இந்த கும்பல், பணத்தை மோசடி செய்து, போலி ரசீதுகள் கொடுத்து, நெடுங்சாலைத் துறைக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாத வாகனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சுங்கக் கட்டணத்தை வசூலிக்க, 'அங்கீகரிக்கப்படாத' இரண்டு செயலிகளைப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 100 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், அதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் இயக்கப்படுபவைதான், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி நாட்டின் பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் தில்லி-என்சிஆர் உள்ளிட்டப் பகுதிகளில் 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 1 கோடி ரொக்கம், பல வங்கிக் கணக்குகளின் புத்தகங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, எட்டு வங்கிக் கணக்குகள் முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோப்டேட்டா மற்றும் எனி என்று இரண்டு செயலிகளை மோசடி கும்பல் தயாரித்து, அதன் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாதவர்களிடமிருந்து சட்டவிரோதமாக கட்டணத்தைப் பெற்றுள்ளனர்.
முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டபோதுதான், அவரது இந்த செயலி மூலம் நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் முறைகேடு நடந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் மிகப்பெரிய கும்பல் ஈடுபடிருக்கலாம் என்றும், இந்த செயலிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு போலி ரசீதுகளும் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






