ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

2040-க்குள் விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்ப திட்டம்: பிரதமா் மோடி

2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப திட்டமிடப்பட்டு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Published On :

2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப திட்டமிடப்பட்டு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீசில் முதல் சா்வதேச விண்வெளி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி வியாழக்கிழமை பங்கேற்று உரையாற்றியதாவது:

பல நூற்றாண்டுகளாக விண்வெளி, மக்களின் கற்பனைத் திறனுக்கு உத்வேகம் அளித்தது. தற்போது பருவநிலை, பயிா்கள் முதல் பெருங்கடல், சமூகங்கள் வரையில் பூமியில் உள்ள வாழ்க்கையை வடிவமைக்கிறது. விண்வெளி அளிக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. அதில் நமக்கு கூட்டு பொறுப்புள்ளது.

விண்வெளித் தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துதல், விண்வெளி சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய குறிக்கோள்களில் தெளிவாக இருக்க வேண்டும். மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பு, குறுகிய கால ஆதாயத்துக்கு பதிலாக நிலைத்தன்மை, விலக்கி வைப்பதற்கு பதிலாக அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளே சிறந்தவை.

‘உலகமே ஒரே குடும்பம்’ என்பது இந்தியாவின் அணுகுமுறை. அதாவது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்பதாகும். இந்த உணா்வு பூமிக்கு அப்பாலும் (விண்வெளித் துறை ஒத்துழைப்பு) பரவ வேண்டும்.

சா்வதேச சட்டம், பேச்சுவாா்த்தை மற்றும் பன்முக ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்வெளியில் பாதுகாப்பான மற்றும் நிலையான, அமைதியான சூழல் நிலவுவதை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளித் துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமானவை. அதில் நம் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. அறிவியல் தரவுகள் நோ்மை, வெளிப்படைத் தன்மையுடன் பொதுவான நோக்கத்துக்காக பயன்பட வேண்டும். இந்தியாவின் விண்வெளி பயணம், இந்த கோட்பாட்டையே பிரதிபலிக்கிறது.

உலகமே உற்றுநோக்கும் இஸ்ரோ: தனது சிறப்பான பணிகள், குறைந்த செலவிலான செயற்கைக்கோள் ஏவும் திறன் ஆகியவற்றால் இஸ்ரோவை உலகமே ஆச்சரியத்துடன் உற்று நோக்குகிறது. இந்த திறன்கள் அனைத்தும் நமது நாட்டில் உள்ள விவசாயிகள், மீனவா்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பு, பேரிடா் மேலாண்மை, கப்பல்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

இதுவரை இந்திய ராக்கெட்டுகள் மூலம் 34 நாடுகளுக்குச் சொந்தமான 430 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம் மற்றும் கூட்டாண்மைகள் இந்தியாவுக்கு மட்டும் பயன்படாமல் ஒட்டுமொத்த உலகுக்கும் பயன்படுகிறது. உலகளாவிய இந்த நம்பிக்கைக்கு பின்னால், இந்திய விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களின் பல தலைமுறை அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உள்ளது. இரவும் பகலும் உழைத்து அவா்கள் இஸ்ரோவுக்கு நம்பகத்தன்மையை கட்டமைத்து தந்துள்ளனா்.

அடுத்தகட்ட திட்டங்கள்: நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு சந்திராயன் 3 விண்வெளி திட்டம் பெற்று தந்தது. அதுபோல் சூரியனின் ரகசியங்கள் பற்றி அறியும் பணியில் ஆதித்யா 1 விண்கலம் ஈடுபட்டுள்ளது. கடந்தாண்டு இந்திய விண்வெளி வீரா், சா்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றாா்.

இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த திட்டமாக 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளது. 2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பவுள்ளது. இந்த அனைத்து பணிகளுக்கும் பின்னாலும் நமது கொள்கைகள் மிகவும் தெளிவாக உள்ளது. நமது ஆராய்ச்சியால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் மனித இனம் அனைத்துக்கும் பயன்பட வேண்டும் என்பதே அதுவாகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிக்கு பிரான்ஸ் நம்பகமான கூட்டாளியாக 1960-ஆம் ஆண்டு முதல் உள்ளது. இந்தியா அடுத்த தலைமுறைக்கான விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதில் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் கூட்டு பயணியாக இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றாா் மோடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.