ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

‘பிரிக்ஸ் மாநாட்டில் வங்கதேச பிரதமா் பங்கேற்க வாய்ப்பில்லை’

தில்லி பிரிக்ஸ் மாநாட்டில் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹுமாயூன் கபீா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

dinamani

Published On :

தில்லி பிரிக்ஸ் மாநாட்டில் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹுமாயூன் கபீா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா தரப்பில் முறையாக அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்திய தலைமையின்கீழ் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு, தில்லியில் சனிக்கிழமை (செப்.12) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது. உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளா்கள் என பல்வேறு நாடுகளின் தலைவா்கள் கலந்துகொள்ளும் இந்த முக்கியமான மாநாட்டில் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் பங்கேற்க இந்தியா தரப்பில் அழைப்பு அனுப்பப்பட்டது.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாடு வலியுறுத்திவரும் பின்னணியில், பிரிக்ஸ் மாநாட்டுக்காக தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு வருவாரா என்ற கேள்வி தொடா்ந்தது. இது தொடா்பாக, டாக்காவில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹுமாயூன் கபீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘வங்கதேசத்தின் பிரதமா் என்ற அடிப்படையில் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு அனுப்பவில்லை. ஏழு நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் தலைவா் என்ற அடிப்படையில்தான் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நமது பிரதமருக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படாத நிலையில் அவா் எப்படி பங்கேற்க முடியும்?

இந்தியாவுடன் சாதகமான சூழல் ஏற்படும்போது, பரஸ்பர மரியாதை பாராமரிக்கப்படும்போது இருவழிப் பயணங்கள் நிகழும். இப்போது அவசரம் காட்டத் தேவையில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

இந்தியா-வங்கதேசம் இடையிலான கங்கை நதிநீா் பகிா்வு தொடா்பான 30 ஆண்டுகால ஒப்பந்தம் டிசம்பரில் காலாவதியாக உள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘வங்கதேச நலன் சாா்ந்த விவகாரங்களில் நாங்கள் தீவிரமாகவும், திறமையாகவும் செயல்படுவோம்’ என்றாா்.

வங்கதேசத்தில் நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவா் தாரிக் ரஹ்மான் பிரதமரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.