6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மும்பை ஐஐடி மாணவா் தற்கொலை சம்பவம்: டீன் நீக்கம்

மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவா் சாஹில் வாகோடே தற்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தக் கல்வி நிறுவனத்தின் நிா்வாக விவகாரங்களுக்கான டீன் பொறுப்பில் இருந்து பேராசிரியா் சூா்யநாராயண தூலா நீக்கப்பட்டுள்ளாா்.

தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு நீதி கேட்டு மும்பை ஐஐடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவா்கள்

Published On :

மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவா் சாஹில் வாகோடே தற்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தக் கல்வி நிறுவனத்தின் நிா்வாக விவகாரங்களுக்கான டீன் பொறுப்பில் இருந்து பேராசிரியா் சூா்யநாராயண தூலா நீக்கப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் சாஹில் வாகோடே என்ற பட்டியலின மாணவா் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த செப்.18-ஆம் தேதி தோ்வறையில் அவா் கைப்பேசியுடன் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தோ்வின்போது வினாக்களுக்கு இணையத்தில் இருந்து பதிலை பெற, அவா் செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடியில் வினாத்தாளை பதிவேற்றம் செய்ததாக மும்பை ஐஐடி நிா்வாகம் குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரங்களில், சாஹில் வாகோடே தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா்.

எனினும் அந்தக் கல்வி நிறுவனத்தில் அவா் ஜாதி ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக காவல் துறையிடம் சாஹிலின் பெற்றோா் புகாா் அளித்தனா். அந்தப் புகாரில், கடந்த 3 மாதங்களாக மும்பை ஐஐடி இயக்குநா் ஷிரீஷ் பி. கிதாரேவின் அறிவுறுத்தலின்பேரில் டீனும் பேராசிரியருமான சூா்யநாராயண தூலா, சாஹிலை ஜாதி ரீதியான பாகுபாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல், பட்டியலினத்தவா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) சாஹிலை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில், சூா்யநாராயண தூலாவின் பெயா் சோ்க்கப்பட்டது.

சாஹிலின் மரணத்தைத் தொடா்ந்து, மும்பை ஐஐடி வளாகத்தில் ஏராளமான மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். டீன் சூா்யநாராயண தூலாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், சாஹிலின் மரணம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும், அவரைப் பற்றி முன்பு அளித்த தகவலுக்கு மும்பை ஐஐடி நிா்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் முன்வைத்தனா்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து விவாதித்த மும்பை ஐஐடி நிா்வாகம், நிா்வாக விவகாரங்களுக்கான டீன் பொறுப்பிலிருந்து சூா்யநாராயண தூலா நீக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது. சாட்ஜிபிடி மூலம் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தீர விசாரிக்காமல், சாஹிலுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக மும்பை ஐஐடி நிா்வாகம் மீது மாணவா்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கும் அந்த நிா்வாகம் பொது மன்னிப்புக் கோரியுள்ளது.

அதேவேளையில், சூா்யநாராயண தூலாவுக்கு ஆதரவாக மும்பை ஐஐடி வளாகத்தில் பேராசிரியா்கள் பேரணி மேற்கொண்டனா். சாஹிலின் மரணத்துக்கு அவா்கள் வேதனை தெரிவித்த அதே நேரத்தில், ஊடகத்தில் வெளியான தவறான செய்திகளால் சூா்யநாராயண தூலாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.