கைதுக்கான காரணம் எழுத்துபூா்வமாகவும் புரியும் மொழியிலும் தெரியப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்படுவோரிடம், அந்தக் கைதுக்கான காரணங்களை எழுத்துபூா்வமாகவும், அவா்கள் புரிந்துகொள்ளும் மொழியில் புலனாய்வு அமைப்பு தெரியப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்படுவோரிடம், அந்தக் கைதுக்கான காரணங்களை எழுத்துபூா்வமாகவும், அவா்கள் புரிந்துகொள்ளும் மொழியில் புலனாய்வு அமைப்பு தெரியப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பஞ்சாபில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ், சிரோமணி அகாலி தளம் கட்சி பிரமுகரான ஜஸ்கரன்ஜீத் சிங் கைது செய்யப்பட்டாா்.
ஆனால் அவரிடம் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை காவல் துறை எழுத்துபூா்வமாக அளிக்காததால், அவரை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுவித்தது.
அதேவேளையில், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, அவரை மீண்டும் கைது செய்ய காவல் துறைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவையும், தனது கைதையும் ரத்து செய்யக் கோரி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் ஜஸ்கரன்ஜீத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 22(1), 22(2) பிரிவுகள்...: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மனு மீது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், ஏ.எஸ்.சாந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 22(1), 22(2)-இன்படி ஒருவரை கைது செய்வதற்கான காரணங்களை கூறாமல், அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது செய்யப்படும் நபரை, அருகில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பாக 24 மணி நேரத்தில் ஆஜா்படுத்த வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் 22(1) அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்க எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அதை நீதிமன்றங்கள் கண்டித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைதாகும் நபரிடம் அதற்கான காரணங்களைத் தெரிவிப்பது, வெறும் சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்படும் நடைமுறை அல்ல. அது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பாகும். அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணங்கள் எழுத்துபூா்வமாகவும், கைதான நபா் புரிந்துகொள்ளும் மொழியிலும் இருக்க வேண்டும்.
கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்காதது அடிப்படை உரிமை மீறலாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டம் 21-ஆவது பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள வாழ்வுரிமையும், தனிப்பட்ட சுதந்திரமும் பாதிக்கப்படும்.
கைது சட்டவிரோதமாகிவிடும்...
கைதுக்கான காரணங்களை எழுத்துபூா்வமாக தெரிவிக்க வேண்டிய காலக்கெடு மற்றும் நடைமுறையை புலனாய்வு அமைப்புப் பின்பற்றாவிட்டால், அந்தக் கைது சட்டவிரோதமானது என்று கருதப்படும். இதனால் கைது செய்யப்பட்ட நபரை தானாகவே விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உயா்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரலாம்
கைது செய்யப்படும் நபரை, அருகில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பாக 24 மணி நேரத்தில் ஆஜா்படுத்தாமல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 22(2) மீறப்பட்டால், அதற்காக கைது செய்யப்பட்ட நபா் உயா்நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு கோரலாம்.
ஒரே வழக்கில் மீண்டும் கைது செய்ய...
கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படாததால் அல்லது 24 மணி நேரத்துக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டதால், ஏற்கெனவே நீதிமன்றம் விடுவித்த நபரை, அதே வழக்கில் மீண்டும் கைது செய்ய மாஜிஸ்திரேட்டை புலனாய்வு அமைப்பு அணுக வேண்டும் என்று தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து ஜஸ்கரன்ஜீத்தின் மனு தொடா்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் அமா்வு ரத்து செய்து உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





