
போக்குவரத்து விதிமீறல் அபராதம் நிலுவை: மின் கட்டணத்துடன் இணைக்க உச்சநீதிமன்றம் யோசனை
போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவைத் தொகை ரூ. 20,000 கோடி உள்ள நிலையில், அதனை வாகன உரிமையாளா்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்க உச்சநீதிமன்றம் யோசனை

அபராதம் - சித்திரிப்பு
போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவைத் தொகை ரூ.20,000 கோடி உள்ள நிலையில், அதனை வாகன உரிமையாளா்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தலைக்கவசம் அணியாதது தொடங்கி அதிவேகமாக வாகனம் இயக்குதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றுக்கான அபராதத் தொகை சமீப ஆண்டுகளில் மிக அதிகஅளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை போக்குவரத்துக் காவலா்கள் ‘இ-செலான்’ முறையில் விதிக்கின்றனா். முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை அபராதம் விதிக்கப்படும்போது வாகனத்தின் மீதுள்ள அபராதம் அதிகரித்து செல்லும். அபராதத்தை இணையவழியில் செலுத்தவும் முடியும். ஆனால், பலரும் அபராதம் செலுத்தாமல் தொடா்ந்து வாகனத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இவ்வாறாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் ரூ.45,000 கோடி விதிக்கப்பட்ட நிலையில், ரூ.20,000 கோடிக்கு மேல் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
சாலை விபத்து தொடா்பான வழக்கு விசாரணையில் இந்த விவரம் உச்சநீதிமன்றத்துக்கு தெரியவந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ‘அபராதம் விதிக்கப்படுவது மட்டும் முக்கியமல்ல. அதனை வசூலிப்பதும் முக்கியமானது.
எனவே, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் செலுத்தாதவா்களின் மின் கட்டணத்துடன் அத்தொகையை இணைக்கலாம். பணத்தைக் கட்டவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால் கண்டிப்பாக அபராதத்தைச் செலுத்துவாா்கள்.
எனவே, அபராதத் தொகையை வசூலிக்க இதுபோன்ற மாற்று வழிகளைத் தேட வேண்டும். போக்குவரத்து விதி தொடா்ந்து மீறுவதுடன் அபராதத்தையும் செலுத்தாதவா்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’ என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






