பாடகர் ஆனது எப்படி..?

பாடகர் ஆனது எப்படி? ஜனனி.. ஜனனி பாடல் உருவான விதம்..

பாடகர் ஆனது..!

கே. சங்கர், எம்ஜிஆருக்கு ரொம்ப நெருக்கம். அவர் நடித்த ‘உன்னை விடமாட்டேன்’ படத்துக்கு இசை அமைத்தேன். (அரசியல் காரணங்களுக்காக இந்தப் படம் முற்றுப்பெறவில்லை). அதில் டிஎம்எஸ் பாடிய ஒரு பாட்டைக் கேட்டுட்டு, ‘வேறு பாடகரைப் பாட வை’னு எம்ஜிஆர் சொன்னார். ‘அவர் பெரிய பாடகர். அவர் பாடினதை எடுத்துட்டு, வேறு ஒருவரை பாட வெச்சா தப்பா இருக்கும் அண்ணா’னு சொன்னேன். ‘நான் சொல்றதைக் கேள். வேறு பாடகரைப் பாட வை’னு சொன்னார். சரின்னு மலேசியா வாசுதேவனைப் பாட வெச்சேன். அதையும் கேட்டுட்டு, வேற பாடகரைப் பாட வைக்கச் சொன்னார். ‘இதுக்குமேல நான் என்ன பண்றதுண்ணா’னு கேட்டேன். ‘நீயே பாடு. நீ பாடுன மாதிரி அவங்கெல்லாம் பாடுனாங்களா’னு கேட்டார். ‘இல்ல, என் குரல் சின்னப் பையன் மாதிரி இருக்கும். அதுவும் இல்லாம நான் கிராமத்துல இருந்து வந்த ஆளு. என்னுடைய குரல் உங்களுக்குச் சேருமோ சேராதோ’னு சொன்னேன். ‘அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ பாடு’னு பாட வைத்தார். இப்படித்தான் நான் பாட ஆரம்பித்தது.

*

ஜனனி.. ஜனனி பாடல் உருவான விதம்!

‘கொல்லூர் மூகாம்பிகை’யில மகரிஷி இருக்கிற இடத்துக்கு ஆதிசங்கரர் வருகிறார். தியானத்துக்கு வந்த அவருக்கு, மூன்று தேவிகள் ஐக்கியமாகிற காட்சி தெரிகிறது. அந்த நேரத்துல இந்தப் பாடலைப் பாடுகிறார்’ என்று இயக்குநர் கே. சங்கர் பாடலின் சூழலைச் சொன்னார். நான் முதல்ல ஒரு டியூன் கம்போஸ் பண்ணிட்டேன். அப்போ கம்போஸிங் எப்படி நடக்கும்னு உங்களுக்குத் தெரியாது. ஆர்மோனியத்தோடு சேர்த்து என்னுடைய பக்கவாத்தியங்கள் வாசிக்கிற ரிதம் பிளேயர்ஸ் இருப்பாங்க. உதவி இயக்குநர்கள் நாலு பேர், இயக்குநர், பாடலாசிரியர் இருப்பார்.

என்னுடைய இசை உதவியாளர்கள் இத்தனை பேரும் இருப்பாங்க. இயக்குநர் கே. சங்கர் சூழலைச் சொல்லி முடித்ததும், நான் இசை அமைத்தேன். அப்பவே ஓகே பண்ணிட்டார். ‘இருங்க சார், நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்’னு சொன்னேன். போற வழியில பூஜை ரூம்ல ஆதிசங்கரருடைய படம் இருந்தது. நான் மனம் உருகி வேண்டுற ஆள் கிடையாது. இருந்தாலும், ஆதிசங்கரரைப் பார்த்து, ‘குருவே நீங்க என்னுடைய இசையில வர்றீங்க’னு சொல்லிட்டு வந்துட்டேன். வந்துட்டு, டியூனை மாத்தி வேற ஒண்ணு போட்டேன். ‘சார், இது முன்னாடி போட்டது மாதிரி இல்லையே’னு சொன்னார். ‘இது நல்லா இருக்கா’னு கேட்டேன். ‘ரொம்ப நல்லா இருக்கு சார்’னு சொன்னார். இதுக்கு நடுவுல வாலி, ‘ஜனனி.. ஜனனி.. ஜெகம் நீ.. அகம் நீ’னு பாட்டு பாடி பார்க்கச் சொன்னார். பாட்டைப் பாடி முடிச்சதும் இயக்குநர் அழ ஆரம்பிச்சுட்டார். டியூனைப் போட்டுட்டு யாரைப் பாட வைக்கிறதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தோம். ஜேசுதாஸைப் பாட வைக்கலாம்னு முடிவு பண்ணி, அவரைத் தேடும்போது, அவர் ஊர்ல இல்லை. அப்போல்லாம் டிராக் எடுத்துப் பாடுற பழக்கம் கிடையாது. ‘சார் இப்போ நான் டிராக் போட்டுப் பாடுறேன். ஜேசுதாஸ் வந்த உடனே அவரைப் பாட வெச்சு மிக்ஸ் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். பாடி முடிச்சதும், வாத்தியம் வாசிச்சவங்க, பார்த்தவங்க, ரெக்கார்டிஸ்ட் ராமநாதன்னு எல்லோருமே அழறாங்க. அப்படி ஒரு சரித்திரம்தான் இந்தப் பாட்டுக்குப் பின்னால இருக்கிறது’.

- நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com