2. பாட்டு ஒன்னு நா பாடட்டுமா..

இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட தேர்வுரிமையை நாம் எப்போதுமே தவறாகத்தான் பயன்படுத்துகிறோம்! மணந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரண தேவி என்று நாம் முடிவெடுக்கிறோம்.
2. பாட்டு ஒன்னு நா பாடட்டுமா..

பயந்துவிடாதீர்கள். நான் நிச்சயமாகப் பாடப்போவதில்லை. இந்தக் குரலை வைத்துக்கொண்டு நான் பேசுவதே பெரிய விஷயம்! ஏன், அவ்வளவு மோசமான குரலா என்கிறீர்களா? அப்படியும் சொல்லிவிட முடியாது. நான் பாட்டுப்பாடி முதல் பரிசு பெற்ற காலமும் ஒன்றுண்டு! அது என் கல்லூரிக் காலம். வயது ஏற ஏற குரலும் மாறிக்கொண்டேதானே போகும்! அதைப் புரிந்துகொண்ட நான் இப்போதெல்லாம் நான் குளியறையில்கூடப் பாடுவதில்லை. போகட்டும். இசை தப்பித்தது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் என் குரலைப் பற்றி இப்போது நான் ஏன் பேசுகிறேன் தெரியுமா? அதற்கு ஒரு முக்கியமான காரணமொன்று உண்டு. சொல்கிறேன்.

என் குரல் ஒன்றும் மோசமானதில்லை. ஆனால் லேசாக லதா மங்கேஷ்கர் சாயலடிக்கிறது என்று என் நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவு இனிமையான குரலா என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது! ஆனால் அவர்கள் அப்படிச் சொன்னதற்கு என் குரலின் இனிமை காரணமல்ல. அதிலிருக்கும் லேசான பெண் தன்மைதான் காரணம்!

ஆமாம். நான் ஒரு பிரபலமான எழுத்தாளனில்லையா! அதனால் எனக்கு அடிக்கடி புதுப்புது எண்களிலிலிருந்து அலைபேசி அழைப்புகள் வரும். அப்படி வரும் அழைப்புகள் பெரும்பாலும் நான் ‘ஹலோ’ என்று சொன்னபிறகு, ‘மேடம், நாகூர் ரூமி சார் இருக்காரா?’ என்று கேட்கும்! முதலில் அப்படி ஒரு குரல் என்னைக் கேட்டபோது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. பின்னர் பழகிவிட்டது! பின்னே, ஒரு நாளைக்கு பத்து முறையாவது மேடம், மேடம் என்று காதில் விழுந்துகொண்டே இருந்தால் என்ன செய்வது?!

நான் நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை. வாழ்வில் ஒரு முக்கியமான பாடத்தை நான் புரிந்துகொண்டதற்கு உதாரணமாகவே இதைச் சொல்கிறேன். முதலில் சங்கடமாக இருந்த ஒரு விஷயம், அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு சந்தோஷம் கொடுக்க ஆரம்பித்தது. எப்படி என்கிறீர்களா? பல ஊர்களிலும் என்ன சுயமுன்னேற்றம், ஆன்மிகம், ஆரோக்கியம் தொடர்பாக பேச அழைத்தார்கள். நானும் பேசினேன். என் குரலை உயர்த்தவோ, மாற்றவோ நான் முயற்சிக்கவில்லை. ஜேசுதாஸ், ஜக்தித் சிங், ஹரிஹரன் மாதிரியான குரல்களில் முட்டாள்தனமாக நான் உளறி இருந்தால் என்னை அவமானப்படுத்தி இருப்பார்கள். அல்லது குறைந்தபட்சம் அலட்சியப்படுத்தியாவது இருப்பார்கள். ஆனால் நாளுக்கு நாள் எனக்கான அழைப்புகள் கூடிக்கொண்டே போகின்றனவே தவிர குறையவில்லை. நானாகப் பார்த்து எந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு செல்வது என்று முடிவெடுத்து என் பிரயாணத்தைக் கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளும் நிலையில்தான் எல்லாம் உள்ளது. காரணம் என் குரல் அல்ல. குறள் நெறியைப்போல, என் குரல் மூலமாக நான் சொல்லும் நெறிகளும், அறம், ஆரோக்கியம், ஆன்மிகம் சார்ந்த உண்மைகளும்தான் காரணம் என்பதை நான் புரிந்துகொண்டேன். மாற்ற முடியாத ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ளும்போது அதை மாற்ற வேண்டியதே இல்லை என்ற உண்மை புரியவரும். என் குரல் எனக்குக் கற்றுக்கொடுத்த உண்மை அது.

மாற்ற முடியாத என் பிரச்னையை நான் ஏற்றுக்கொண்டதுதான் இதற்கெல்லாம் அடிப்படை. அதுவும் மனப்பூர்வமாக. இப்போது ஒரு படி மேலே போய் என் குரலை நானே ரசிக்கவும், காதலிக்கவும் ஆரம்பித்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்கிறோமா இல்லையா என்பது நம்மை, அடுத்தவர்களை, கிடைத்ததை, கிடைக்காததை – இப்படி எல்லாவற்றையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

சரி, ஒரு பிரச்னையை, ஒரு நிகழ்வை, நடந்து முடிந்துவிட்ட அல்லது மாற்ற முடியாத எந்த ஒன்றையும் மனப்பூர்வமாக நாம் ஏற்றுக்கொண்டால் சந்தோஷம் நிச்சயம் வருமா என்று கேட்டால். நூற்றுக்கு நூறு நிச்சயம் வரும் என்று சொல்வேன். அந்த சந்தோஷம் நிரந்தரமாக இருக்குமா என்று கேட்டால், கேள்வியே தப்பு என்றும் நான் சொல்வேன்! ஏன்?

இந்த இடத்தில் கனடியப் பாடகி சாரா மெல்லாலன் என்பவர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. ‘சந்தோஷம் ஒரு மேகம் மாதிரி. ரொம்ப நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தால் அது கரைந்து மறைந்துவிடும்’ என்று அவர் சொன்னார்! ஒரு பாடகியிடமிருந்துகூட நமக்கு ஞானம் கிடைக்கும் என்று தெரிகிறது! ஆமாம். எவ்வளவு சத்தியாமான வார்த்தைகள்!

கம்யூனிஸத்தை எதிர்த்து கிண்டலாக உலகப்புகழ் பெற்ற Animal Farm என்ற நாவலை எழுதிய ஜார்ஜ் ஆர்வல் என்ற அருமையான எழுத்தாளர் சொன்னதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ‘மகிழ்ச்சி என்பது வண்ணத்துப்பூச்சியைப் போன்றது. அதைப் பிடிக்க முயன்றால் அது கையில் சிக்காது. அமைதியாக அமர்ந்திருக்கும்போது அது உங்கள் கையில் வந்து அமரலாம்’ என்றார் அவர்! எவ்வளவு அழகான உண்மை! சாரா சொன்னதும், ஆர்வல் சொன்னதும் மகிழ்ச்சியைப் பற்றிய இரண்டு அழகான உண்மைகள். சந்தோஷமென்பது மேகத்தைப்போல வந்து போகக்கூடியது. அது தேடி அடைவதும் அல்ல. அதுவாக வரும். அதுவாகப் போகும். வண்ணத்துப்பூச்சி மாதிரி. சந்தோஷம் மட்டுமல்ல, எதுவுமே நிரந்தரமானதல்ல என்பதும் நமக்குத் தெரியும்தான்.

ஒருமுறை ஓஷோ அழகாகச் சொன்னார். ‘பறவைகள் சந்தோஷமாக இருக்கின்றன. ஆறு சந்தோஷமாக ஓடுகிறது. மரங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. அவையெல்லாம் ஏன் அப்படி இருக்கின்றன என்றால், அவற்றுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. ஆனால், மனிதனுக்கு மட்டும் தேர்வுரிமை உள்ளது. அதனால் அவன் எப்போதுமே துன்பத்தையும் துக்கத்தையுமே தேர்ந்தெடுத்துக்கொள்கிறான்!’

ஆமாம். இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட தேர்வுரிமையை நாம் எப்போதுமே தவறாகத்தான் பயன்படுத்துகிறோம்! மணந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரண தேவி என்று நாம் முடிவெடுக்கிறோம். பல திருமணங்கள் நடந்தேறிய பிறகு மகாதேவிகளாலேயே மரணதேவிகளை கணவன்மார்கள் தேடிய வரலாறும் உண்டு!

சொர்க்கத்தில் குளிர்ந்த கண்களையுடைய ‘ஹூருல் ஈன்’ எனப்படும் பெண்களை மனைவியாக அல்லாஹ் கொடுப்பான் என்று ஒரு மார்க்கச் சொற்பொழிவைக் கேட்டதும், ஒரு சகோதரர் ரொம்ப சந்தோஷப்பட்டார். சொற்பொழிவாற்றிய மார்க்க அறிஞர் மேலும் விளக்கினார். ‘அந்த ஹூருல் ஈன்கள் இம்மையில் உங்களுடைய மனைவி யாரோ அவராகத்தான் சொர்க்கத்திலும் இருப்பார்’ என்று சொன்னதும், சந்தோஷப்பட்டவரின் முகம் சோகத்தால் சுருங்கிவிட்டது! ‘அங்கே போயும் அவதானா? யா அல்லாஹ், எனக்கு சொர்க்கத்திலேயும் தண்டனையா?’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்!

ஒரு விஷயத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொருத்து நம் மகிழ்ச்சியை நாம் தீர்மானிக்கிறோம். ‘காலுக்கு செருப்பு இல்லையே என்று கவலைப்பட்டேன், காலே இல்லாத மனிதனைப் பார்க்கும்வரை’ என்று ஹஸ்ரத் அலீ கூறினார்கள். ஒரு ஜென் ஞானியிடம் போய் ஒருவர், ‘நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு எதாவது உபதேசத்தை எழுதிக்கொடுங்கள் குருவே’ என்று வேண்டினார். ஞானியும் எழுதிக்கொடுத்தார். ஞானி எழுதிக்கொடுத்த காகிதத்தைப் படித்த அந்த மனிதர் கதிகலங்கிப் போய்விட்டார். ‘என்ன குருவே, இப்படி எழுதியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அப்படி அந்த ஞானி என்ன எழுதிக்கொடுத்தார்?

‘தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்’ – இதுதான் அவர் அந்தக் காகிதத்தில் எழுதிக்கொடுத்த வாசகம்! அடப்பாவி, சந்தோஷமாக இருக்க ஏதாவது எழுதிக்கொடு என்று கேட்டால் சாவைப் பற்றி எழுதிக்கொடுத்திருக்கிறாயே, நீ உருப்படுவியா என்று மனதில் திட்டிக்கொண்டே அந்த ஞானியிடம் அந்த மனிதர், ‘குருவே, என்ன இப்படி எழுதிகொடுத்துள்ளீர்கள்?’ என்று பணிவாகக் கேட்டார்.

‘ஆமாம் மகனே, சந்தோஷத்துக்கான வரிசை இதுதான். முதலில் தந்தை, பிறகு மகன், பிறகு பேரன் என்று போனால்தானே வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்? தந்தைக்கு முன் மகனோ பேரனோ இறந்தால் அது துயரம்தானே?’ என்று சொன்னார்! ஆஹா, அதுவல்லவோ உபதேசம்! அதுவன்றோ ஞானம்!

ஞானம் பெறுவதற்காக ஒரு குருவைத் தேடி ஒருவன் வந்தான். ‘குருவே எனக்கு ஞானம் வழங்க வேண்டும் தாங்கள்’ என்று வேண்டிக் கேட்டுக்கொண்டான்.

குரு புன்னகைத்துவிட்டு, ‘நீ எதிலே வந்தாய்?’ என்று கேட்டார்.

‘என் குதிரையில் வந்தேன் குருவே’ என்று அவன் சொன்னான்.

உடனே குரு, ‘அப்படியானால் முதலில் குதிரையைத் தேடு’ என்று சொன்னார்.

குதிரையில் வந்தவன் குழம்பிப்போனான். இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது! இவரைப்போய் ஞானி என்று மக்கள் சொல்கிறார்களே! ‘குருவே, நான் குதிரையில்தானே வந்தேன். பின்னே ஏன் குதிரையை நான் தேட வேண்டும்? அது என்னிடம்தானே இருக்கிறது?’ என்றான் அவன். ‘இது என்ன மடத்தனமாக உள்ளதே’ என்று சொல்லவில்லை. ஆனால் நினைத்துக்கொண்டான்!

குரு சொன்னார். ‘ஆமாம். குதிரை உன்னிடம்தான் உள்ளது. அதுபோல ஞானமும் உன்னிடம்தான் உள்ளது. கண்டுபிடி’ என்றார்!

ஞானம் மட்டுமல்ல, சந்தோஷமும் அப்படித்தான். ‘சந்தோஷம் அடைவதற்கு எந்த வழியும் கிடையாது, எதையும் அடைவதற்கு சந்தோஷம்தான் வழி’ என்று புத்த துறவி திச் நாட் ஹன் சொன்னதும் இந்த அர்த்தத்தில்தான்.

சந்தோஷம் என்பது நமக்கு வெளியில் ஏதோ ஒரு பொருளில், அல்லது பல பொருள்களில் இருப்பதாக நாம் நினைக்கிறோம். செலவழிக்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருக்கும்போது, உங்களிடம் ஒரு ரூபாய் இருந்தாலும் ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான் என்று தான் இறந்துபோவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னார். ஆப்பிள் போன்ற சத்தான, இனிப்பான சொற்கள்! எவ்வளவு உண்மை!

பணத்தால் நிச்சயம் சந்தோஷத்தை வாங்க முடியாது. ஏன் இரண்டு இட்லிகளைக்கூட வாங்க முடியாது. எப்படி என்கிறீர்களா? உங்களிடம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மட்டும்தான் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். காலையில் ஏழு மணி. கடுமையான பசி. வீட்டில் யாரும் இல்லை. ஆனால் தெருவில் உள்ள கடைகளில் இட்லி, பூரி எல்லாம் வாங்கிச் சாப்பிடலாம். உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து இரண்டு இட்லிகள் வாங்கி மீதி கேட்டால் கொடுப்பார்களா?! சில்லறை கொடு என்பார்கள். இல்லாவிட்டால் இட்லி கிடைக்காது! சரி அது போகட்டும். இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து ஒரு டீயாவது குடிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அவசரத்துக்கு உதவாத ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா! பணத்தால் மனிதன் சந்தோஷமடைய முடியாது என்ற பேருண்மையை மக்களுக்குப் புரியவைப்பதற்காக மத்திய அரசு எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் ஒன்று என்பது யோசித்துப் பார்த்தால் புரியும்!

ஆனால் திருவள்ளுவப் பெருமான், மகிழ்ச்சி எப்படி மனிதனுக்கு வரும் என்பதற்கு ஒரு வழி சொல்கிறார். அது மிகச்சிறந்த வழி என்பதில் சந்தேகமே கிடையாது. அது என்ன வழி?

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறத்தின் வழிநடப்பதனால் வரும் விளைவுதான் இன்பம் என்று அடித்துக்கூறுகிறார். அது எப்படி?

இன்னும் உண்டு…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com