டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் திருமூலரும்

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் ‘மூத்த’ தலைவரான சுப்ரமணியன் சுவாமி ஒரு செய்தியை ‘ட்வீட்’டியிருந்தார்.


ண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் ‘மூத்த’ தலைவரான சுப்ரமணியன் சுவாமி ஒரு செய்தியை ‘ட்வீட்’டியிருந்தார். பிரேமா ராகவன் என்பவர் நாஸாவில் பணியாற்றுகிறாராம். சூரியன் வெளியிடும் ஒலிகளை அவர் ஆராய்ச்சி செய்தாராம். அவை ‘ஓம்’ என்று இருக்கின்றனவாம். அவை மனிதப் புலன்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன என்றபோதிலும், நம் ரிஷிகளால் அவற்றை கேட்க முடிந்ததாம்.

ஆனால், இத்தகைய ‘அறிவியல் உண்மைகள்’ வெளிவருவது இது முதல் தடவை அல்ல. இன்டர்நெட் தரும் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி, மத நம்பிக்கையாளர்கள் இத்தகைய ‘அறிவியல் கண்டுபிடிப்புகள்’ மூலம் தங்கள் தங்கள் மதங்களே உண்மை என சொல்ல பிரசாரம் செய்கிறார்கள். ஸாகிர் நாயக் மிகச் சிறந்த தீவிர உதாரணம். அவர் தனது மத நூலில், உலக அறிவியலின் கண்டுபிடிப்புகளை எல்லாம் கண்டுபிடிப்பார் – பரிணாம அறிவியலைத் தவிர. கிரியேஷனிஸம் என்பது போன்ற அடிப்படைவாத போலி அறிவியல் முயற்சிகளை, மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் காணலாம். புராண மொழிக்கும் அதில் இருக்கும் குறியீட்டு கவிதை பரிமாணங்களுக்கும் நேரடி பொருள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் அனர்த்தம் இது. குறிப்பாக, வரலாற்று மையம் கொண்ட ஆபிரகாமிய மதங்கள், தங்கள் புராணங்களை வரலாறாக எடுத்துக்கொண்டு அறிவியலுடன் நேரடியாக மோதுவதால் ஏற்படும் பிரச்னை இது.


இந்திய மரபில், புராணங்களின் மொழி அகவயத்தன்மை கொண்டது என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதை, முகத்தில் அறையும் தன்மையுடன் சொன்னவர் திருமூலர்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே. 


இந்த முப்புரம் என்கிற புராண மரபு எப்படி தோன்றியிருக்கக்கூடும்? இந்தியவியலாளர் ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச், தன்னுடைய ‘Presence of Shiva’ என்கிற அருமையான நூலில் இதை ஆராய்ச்சி செய்கிறார். மூன்று கோள்கள் ம்ருகவ்யதா என்கிற அழல்மீனுக்கு நேராக வந்த ஒரு வானியல் நிகழ்ச்சியாக இது இருக்கலாம். ம்ருகவ்யதா என்கிற அழல்மீனின் ஆங்கிலப் பெயர் ஸிரியஸ் (Sirius). பூமியின் இரவு வானில் மிகப் பிரகாசமாகத் தெரியும் விண்மீன் இது. நாய்-விண்மீன் என அழைக்கப்படுவது, சம்ஸ்கிருதத்தில் இந்த விண்மீனின் பெயரின் பொருள், மான் வேட்டையாடுபவர். ருத்ரனுடன் இணைத்துப் பேசப்படும் விண்மீன். ஆக, ருத்ரன்/சிவன் முப்புரங்களை அழித்தது என்பது ஒரு தொன்மையான வானியல் நிகழ்வாக இருந்திருக்கும். அதிலிருந்து ஒரு புராணம் முகிழ்த்திருக்கலாம். ஆனால், பின்னர் சைவம் பரிணமிக்கும்போது அந்த தொன்மம் ஒரு அக புராணமாக மாறியுள்ளது. முப்புரங்கள் என்பவை ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்களாக மாறியுள்ளன.


ஆனால் பாருங்கள், திருமூலருக்கு நாளைக்கு ‘Ancient Aliens’ போன்ற போலி அறிவியல் தொடர்கள் வரப்போவதும், அதில் இந்த முப்புரங்களை ஏதோ ஏலியன் சாட்டிலைட் நகரங்கள் என சொல்லப்போவதும் தெரிந்திருக்கிறது. எனவேதான் அவர் சொல்லிவிட்டார், ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்’. நாஸாவின் ‘ஒலி’ப்பதிவுகளில் – ரொம்பக் கறாராகச் சொல்வதென்றால், அவை ‘ஒலி’ப்பதிவுகள் அல்ல - ஓம் இருப்பதாகவும், அதைத்தான் நம் ரிஷிகள் தங்களுடைய ஞானக் காதுகள் மூலம் கேட்டதாகவும் சொல்கிற சுப்ரமணியன் சுவாமிக்கும், திருமூலர் அதைத்தான் சொல்வார், ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்’.

சரி… ஓங்காரத்தின் வேர் எங்கிருந்து வந்திருக்கலாம்? பெல்ஜிய இந்தியவியலாளர் கொன்ராட் எல்ஸ்ட், ஒரு சுவாரசியமான ஊகத்தை முன்வைக்கிறார். தீர்க்கதமஸ் ஒரு வேதரிஷி. புகழ்பெற்ற ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது இவரால் கொணரப்பட்டது. இவர், இறையை துதிப்பதற்கான அந்த மந்திர அட்சரத்தைத் தேடுகிறார். அத்துடன் இணைந்து, பசு வெளிப்படுத்தும் ஒலிகளை, அதற்கும் கன்றுக்கும் இருக்கும் வாத்சல்யத்தை குறிப்பிடுகிறார். எல்ஸ்ட், இதுவே ஓமின் வேர் எனக் கருதுகிறார். பசுவுக்கும் கன்றுக்கும் இருக்கும் வாத்சல்யத்தை வெளிப்படுத்தும் ஒலியை, மானுடன் பிரதி எடுத்ததே ஓங்காரத்தின் வேர் எனக் கருதுகிறார்.

சூரியனிலிருந்து வரும் ‘ஒலி’ அலைகளை அறிந்துகொள்ளும் அதிமானுட வேத ரிஷிகளைக் காட்டிலும், தன் வீட்டுத் தொழுவத்தில் இருக்கும் பசுவுக்கும் கன்றுக்குமான வாத்சல்யத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வேத ரிஷி, இன்னும் ஆழமும் அழகும் கொண்டவராக இருக்கிறார். முந்தியது அபத்தம், பிந்தியது உண்மையான ஆன்மிகம்.

ஜெயமோகன் ஒருமுறை அவரது குரு நித்ய சைதன்யயதியின் அறையில் இருந்த ஒரு வேடிக்கை சித்திரத்தைக் குறித்து குறிப்பிட்டிருந்தார். ஒரு யோகி கண் மூடி அமர்ந்து ஓம் என்று சொல்கிறார். அருகே ஒரு மாடு ‘மோ’ (mho) என்கிறது. இந்த இரண்டுக்கும் இருக்கும் ஒரு வேடிக்கையான முரண்நகை தொடர்பை இந்த கார்ட்டூன் காட்டுகிறது.

ஏறக்குறைய இதே புள்ளிக்கு வருகிறார் எல்ஸ்ட். அவர் கூறுகிறார் -

“சில மதங்களில் அதன் ஆகப்புனிதமான ஒரு விஷயம், பசுவின் ஒலி போன்றதொரு மிகச் சாதாரணம் எனக் கருதப்படுவதில் இருந்து வந்தது எனச் சொல்வது இறைநிந்தனையாகக் கருதப்படும். ஆனால், வேத இந்து மதத்தில் அவ்வாறல்ல. பசு எப்போதுமே கொல்லப்படக்கூடாத விலங்காக இருந்திருக்குமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பசு எப்போதுமே புனிதமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. வேத கால சிறுவன் கண்ணனைப் போலவே, பசுவைப் பராமரிக்கும் வாழ்க்கைச் சூழலுடன்தான் வளர்ந்தான். பசுவின் கதறல் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலை. ஆக, யோகி தன் தியானத்தில் ஒரு ஒலியைக் கேட்பதற்கு முன், வேத கால சமுதாயத்திலோ அதற்கு முன்னரோ வாழ்ந்த மாட்டிடையர்கள், கால்நடைகள் எழுப்பும் ஒலிகளுக்கு மிகப் பரிச்சயமாகியிருந்தார்கள். இந்த ஒலிகளை அவர்கள் எழுப்பினார்கள். அவர்களுக்கு மிகவும் புனிதமான இறைவர்களுக்கான புனிதப் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தினார்கள்’’.

பின்னர், மாண்டூக்ய உபநிடதத்தில், தன்னுணர்வின் ஒலிக் குறியீடாக ஓங்காரம் விவரிக்கப்படுகிறது.

ஆக, ஒரு ஆன்மிகக் குறியீடோ அல்லது ஒரு புராணமோ – அதைப் பரிணமிக்கவைக்கும் ஒரு செயல்முறையை நாம் இங்கு காண்கிறோம். இது பாரதத்துக்கே உரிய செயல்முறை. பிற மதங்களிலும், இதுவே ஒரு புராணத்தையோ அல்லது புனிதக் குறியீட்டையோ உருவாக்கும் செயல்முறையாக இருக்கலாம். ஆனால், வரலாற்று மைய வாதம் அதை மறைத்துவிட்டது. பாரதத்திலோ, இந்தச் செயல்முறை மிகவும் பிரக்ஞை பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மனிதன் தன் புலனுணர்வால் அறியும் இயற்கையிலிருந்து ஒரு ஆச்சரியத்தை தன் ஆழங்களில் அறிகிறான். அதிலிருந்து அவன் ஒரு குறியீட்டை அல்லது புராணக் கதையை உருவாக்குகிறான். பின்னர், அந்தக் கதை மீண்டும் மீண்டும் பல்வேறு கதை சொல்லிகளால் செழுமைப்படுத்தப்படுகிறது. அந்தக் கதை/குறியீடு, கலை வடிவங்களில் மிளிர்கிறது. கூடவே, அதற்கு ஒரு அக பரிமாணம் அளிக்கப்படுகிறது. இத்தனை வலைப்பின்னல்களிலும் கச்சிதமாகத் தன்னை நிலைநிறுத்தும் விஷயங்கள் மட்டுமே இந்தப் பண்பாட்டின் ஆன்மிகச் சின்னங்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்துவிடுகின்றன. அது, குண்டலினியின் பாம்பாக இருந்தாலும், பிரணவ மந்திரமாக இருந்தாலும்…

ஆனால், இந்தக் குறியீடுகளைப் புறவயமாகவும் அசட்டுத்தனமாகவும் அறிவியலுடன் பொருத்தும் பார்வை, துரதிர்ஷ்டவசமாக இணைய ஹிந்துத்துவர்களில் ஒரு சாரரால் முன்னெடுக்கப்படுகிறது. ஆபிரகாமியம் எந்தத் தளையிலிருந்து விடுபட வேண்டுமென நாம் விரும்புகிறோமோ, அந்தத் தளையில் பாரதியத்தை நாம் தள்ளுவதைவிட மூடத்தனமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்…

எந்த ஒரு புராணத்தையும் ஆன்மிகக் குறியீட்டையும் இப்படி புற வய அறிவியலுடன் இணைக்கும் கதைகள் எழுப்பப்படும்போது, நம் நினைவுக்கு வர வேண்டியது திருமூலரின் வார்த்தைகள்தாம் -

‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்’

                               ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com