12. வை.மு. கோதைநாயகி

ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன், சித்தி. போன்ற படங்கள் அவற்றில் சில.
12. வை.மு. கோதைநாயகி

ஐந்தரை வயதான அந்தக் குழந்தை தனக்கு புதிய பட்டுப் பாவாடை சட்டை போட்டு விடுவதையும், விதவிதமான நகைகள் பூட்டுவதையும், ஆண்டாள் கொண்டையிட்டு நீண்ட சடையில் பூக்கள் தொடுப்பதையும் மிகவும் ஆசையாக செய்து கொண்டது. அந்த அறையில் இருந்த கண்ணாடியில் தன் சின்னஞ்சிறு உருவத்தை முகமெல்லாம் பூரிப்பாக இப்படியும் அப்படியும் ஆடி ஆடி திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது.

வெளியில் இருக்கும் தன் தோழிகளுக்கு காண்பிப்பதற்காக ஓடிய குழந்தையை ‘கண்ணம்மா உனக்கு கல்யாணமடி தங்கம். வெளியில் எல்லாம் இப்படி ஓடிக் கொண்டிருக்கப்படாது. உன்னை மனைக்கு கூப்பிடவரை இந்த ரூமிலேயே சமத்தா உக்காந்துண்டு இருக்கனும் சரியா?’ என்று அவளது சித்தியின் குரல் மென்மையாய் தடுத்து உள்ளே அழைத்து உட்கார வைத்தது. ‘போங்கோ சித்தி, எத்தனை நாழி உள்ளேயே இருக்கறது’ என தன் மழலைக் குரலில் சொல்லிச் சிணுங்கியபடியே மருதோன்றி இட்டுச் சிவந்திருக்கும் தன் கை அழகை பார்க்க ஆரம்பித்து விட்டது.

அரளி மொட்டுக்களைப் போல சீராக சிவந்து இருந்த அந்தப் பிஞ்சு விரல்கள் தான் பின்னாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல், நாடகம், கதைகள் என எழுதித் தள்ளியது. அக்குழந்தை தான் வை.மு. கோதைநாயகி.  சிறந்த எழுத்தாளர், வெற்றிகரமான பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகி, இசைக் கலைஞர் என பல பரிணாமங்களில் தன்னை நிறுவிக் கொண்ட அசாத்திய பெண்மணி.  

1901 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார், பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர். கோதைக்கு ஒரு வயது இருக்கும் போது தன்னுடைய தாயை இழந்துவிட்டார். பாட்டி வேதவல்லி அம்மாளிடமும் சித்தி (சித்தப்பாவின் மனைவி) கனகம்மாளிடமும் வளர்ந்தார். சிறு வயது முதலே தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததில்லை. கோதையும் பள்ளி செல்லவில்லை. அவருக்கு அக்கால பழக்கத்தின் படி பால்ய விவாகம் செய்துவிட்டனர்.

1907–ல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது, திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் ஆசாரம் அனுஷ்டானங்களைக மிகச் சிரத்தையாகக் கடைப்பிடிக்கும் ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். அக்குடும்பத்தினருக்கு, அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், வைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது.

திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பெயரான வைத்தமாநிதி முடும்பை என்ற பெயர் கோதைக்கும் சேர்ந்தது. அதனால் அவர் (வைத்தமாநிதி முடும்பை) வை.மு. கோதைநாயகி ஆனார். ஆசாரம் மிக்க குடும்பம் ஆனாலும் பெண்களின் வளர்ச்சிக்கு தடை போடும் பழமைவாதிகளாக அவர் புகுந்த வீட்டினர் இல்லாதிருந்தது அக்காலத்தின் மிகப்பெரும் ஆச்சரியம்.

பள்ளி செல்லாததால் கோதைக்கு எந்த மொழியும் எழுதப் படிக்கத் தெரியது. ஆனால் செவிவழி கேட்டே அனைத்து பாசுரங்களையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரின் புகுந்த வீட்டினர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலுமே அதீத புலமை கொண்டவர்கள். ஆழ்வார்களின் பாசுரங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள். மூத்த மாமனார் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கும், நன்னூலுக்கும் உரை எழுதியவர். அதனாலயே பள்ளிக்குக் கூட சென்றிராத கோதைக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது. தன் மாமியாரிடம் தெலுங்கும் கற்றுக் கொண்டார்.

கோதை வீட்டில் எப்போதும் ஏதேனும் பாசுரங்களையும் ஸ்லோகங்களையும் பாடிக் கொண்டே இருப்பார். அதனால் அவருக்கு தமிழ் மொழி மிகச் சரளமாக வந்தது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வேலை நேரம் போக மீதி நேரங்களில் அழகாக புராணக் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் சொல்லுவார். பின்னாட்களில் தானே கற்பனையில் பல சுவாரசியமான கதைகளை உருவாக்கி அதையும் சொல்ல ஆரம்பித்தார். இதை கவனித்த கோதையின் புகுந்த வீட்டினர் அவரின் படைப்பாற்றைலையும் கற்பனைத் திறனையும் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவரது கணவர் பார்த்தசாரதி அவரை ஊக்குவிக்கும் பொருட்டு நிறைய நாடகங்களுக்கு கோதையை அழைத்துச் சென்றார். கணவருடன் வெளி உலகையும் நாடகங்களையும் பார்க்க ஆரம்பித்த கோதையின் கற்பனைத் திறத்துக்கு நிறைய தீனி கிடைத்தது. அவர் தானே ஒரு நாடகத்தை எழுத விரும்பினார்.

பெண்களின் வளர்ச்சிக்கும் சமூக மறுமலர்ச்சிக்கும் தான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த காலத்தில் தன் குடும்பத்தினர் தனக்கு அளித்த சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் சரியான வழியில் கொண்டு போக வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு இருந்தது. தனக்கு அமைந்த இந்த நல்ல வாய்ப்பால் சமூகத்தையும் மாற்ற வேண்டும் என விரும்பினார்.

அவருக்கு சரளமாக எழுத வராததால் அவரது தோழி பட்டம்மாள் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். கோதை சொல்லச் சொல்ல பட்டம்மாள் நாடகத்தை தழிமில் எழுதிக் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் (1924 ல்) ‘இந்திரமோகனா’ எனும் அவரது முதல் நாடகம் எழுத்தில் உருவானது. அப்போது அவருக்கு வயது 24. அந்நாட்களில் நாடகம் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கிய பம்மல் சம்மந்த முதலியார் மற்றும் துப்பறியும் கதைகளில் புகழ் பெற்றவரான வடுவூர் துரைசாமி ஐயங்காரிடம் தன் மனைவியின் நாடகப் பிரதிகளைக் காண்பிக்க, படித்துப் பார்த்த இருவரும் கோதையின் திறமையை வெகுவாகப் பாராட்டி மேலும் எழுத உற்சாகம் அளித்தனர்.

அதனை அடுத்து ‘வைதேகி’ எனும் நாவலை எழுதினார். ஆனால் அப்போது அதை வெளியிட எந்த பதிப்பகமும் முன் வராத காரணத்தால், ஏற்கனவே ஆரம்பித்து நஷ்டத்தால் பாதியில் நின்றுவிட்ட ‘ஜகன்மோகினி’ என்ற பத்திரிக்கையை 1925-ல் வாங்கி மாத அதை இதழாக மாற்றி அச்சிட்டார். தன்னுடைய முதல் நாவலை அவ்விதழிலேயே தொடர்கதையாக வெளியிட்டார். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது அந்நாவல்.

தன்னுடைய படைப்புகள் மட்டுமல்லாது புதியதாக எழுத வரும் இளம் படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்த இதழில் வெளியிட்டார்.

சிறு வயது முதல் தன் சித்தப்பாவிடம் படித்த திருக்குறள், நாலடியார் தேவாரம், திருவாசகம் போன்றவை பிற்காலத்தின் இவரது படைப்புகளுக்கு மிகவும் உதவியது. தொடர்ந்து இவர் எழுதிய நாவல்களும் நாடகங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தன் தீரா கற்பனைகளாலும் தேன் சுவை மொழி நடையாலும் மக்களிடையே வெற்றி நடை போடும் எழுத்தாளராக பிரபல்யமானார். தமிழில் துப்பறியும் நாவல்கள் படைத்த முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமை கோதையையே சேரும்.

இவரது படைப்புகளை இந்து, சுதேசமித்திரன் நியு இந்தியா ஆகிய நாளிதழ்கள் பாராட்டி எழுதின. மகாத்மா காந்தி தமிழகம் வந்திருந்த போது அவரை சந்திக்கச் சென்றார். அவரது சந்திப்பு கோதையின் வாழ்க்கையின் மிகப் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. அது முதல் மிகையான ஆபரணங்கள் பட்டாடைகள போன்றவற்றைத் தவிர்த்து, கதர் ஆடை அணிந்து மிக எளிமையாக தோற்றம் கொண்டார். காந்தியத்தில் ஈர்க்கப்பட்டு அவரது கொள்கைகளைப் பின்பற்றினார். பல சமூக சேவைகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி தேச நலனுக்காக சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றார்.

சுதந்திர உணர்வு நாட்டு மக்களை சென்றடைய பல மேடைகளில் கோதையும் உரையாற்றினார். கதை எழுதும் திறன் மட்டும் அல்லாது பேசும் திறனும் அவரிடம் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது. தனது பேச்சின் நடுவே குட்டி குட்டி கதைகளைச் சொலி கூட்டத்தை கலையவிடாமல் கட்டுண்டு கிடக்கச் செய்வதில் திறமைசாலி அவர். எழுத்தையும் பேச்சையும் போலவே கர்நாடாக இசையில் கோதைக்கு இருந்த ஆற்றல் அளவிடற்கரியது.  ராஜாஜியின் மனதிற்கு பிடித்த மேடைப் பேச்சாளர் இவர். தான் பேசும் மேடைகளில் எல்லாம் கோதையும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பாராம் ராஜாஜி.

அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. அவர் பாடியதோடு மட்டுமல்லாமல் பல இளம் இசைக் கலைஞர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் முதலிடம் பெற்றவர்தான் டி.கே. பட்டம்மாள்.

எழுத்துலகிலும் இசை உலகிலும் இந்தளவிற்கு ஒருசேரப் புகழ் பெற்றவர்  இவரைப் போல யாரும் இல்லை.

1932 இல் ‘லோதியன் கமிஷன்’க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். சிறை செல்ல அவர் தயங்கியதே இல்லை. அந்த நேரத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்ட புத்திசாலித்தனம் கொண்டவர். சிறையில் இருந்த நேரத்தில் தன்னுடன் இருந்த மற்ற கைதிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசி அவர்களது கதையை மையமாகக் கொண்டு பல நாவல்கள் படைத்தார். இவரின் படைப்புகள் பல சினிமாவாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியுள்ளது.

ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன், சித்தி. போன்ற படங்கள் அவற்றில் சில.  இதில் ‘சித்தி’ ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. திருமணத்திற்கு பின் நடிக்க வேண்டாம் என்று தான் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு கோதையின் கதையில் ஈர்க்கப்பட்டு பத்மினி நடித்துக் கொடுத்த படம் தான் சித்தி. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. அவர் மகன் ஸ்ரீனிவாசன், 38 வயதிலேயே விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. இந்தத் துக்கத்தின் விளைவு மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) அவரும் இறக்க நேர்ந்தது.

தமிழின் முதல் பெண் நாவலாசிரியை, துப்பறியும் கதைகளை எழுதிய முதல் பெண் எழுத்தாளர், நாடகங்கள் எழுதுவதில் வல்லவர், சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த மேடைப் பேச்சாளர், அபாரமான கர்நாடக சங்கீத வித்தகர், சிறந்த சமூக சேவகி போன்ற பன்முகத் தன்மை கொண்ட பெண்மணி வை.மு.கோதைநாயகி. இவை அனைத்தையும் அவர் சாத்தியமாக்கியது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் என எண்ணும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இன்றும் பல இளம் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்கிறார். இறந்த பின்னும் அவரது படைப்புகள் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கோதை. 

வை.மு. கோதைநாயகியின் படைப்புகளில் சில:

வைதேகி (1925),  பத்மசுந்தரன் (1926)  சண்பகவிஜயம் (1927) — ராதாமணி (1927 – 4) — கௌரிமுகுந்தன் (1928 – 2)  நவநீதகிருஷ்ணன் (1928) கோபாலரத்னம் (1929) சியாமளநாதன் (1930) சுகந்த புஷ்பம் (1930) காதலின் கனி (1933) கலா நிலையம் (1941) மதுர கீதம் (1943) பிரார்த்தனை (1945) புதுமைக் கோலம் (1947) தூய உள்ளம் (1950) நியாய மழை (1950) – ப்ரபஞ்ச லீலை (1950) ப்ரேமாஸ்ரமம் (1950) மனசாட்சி (1950) — ஜீவநாடி (1950) சௌபாக்கியவதி (1950) நம்பிக்கைப் பாலம் (1951)  பாதாஞ்சலி (1951)சுதந்திரப் பறவை (1953) நிர்மல நீரோடை(1953) கிழக்கு வெளுத்தது (1958)

இசைக்கலாம்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com