1. காய்ச்சல்கள் - ஒரு முன்னோட்டம்

காய்ச்சல்தானே என்று அலட்சியமாகக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது, காய்ச்சலா என்று பயத்துடனும், அதிர்ச்சியுடனும், கலவரத்துடனும் கேட்கும் காலமாக இருக்கிறது.

காய்ச்சல் என்ற சொல்லை நாம் தினமும் உச்சரித்துக்கொண்டே இருக்கிறோம். அல்லது யாராவது சொல்ல நம் காதுகளால் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். நாம் எல்லோருமே எதாவது ஒரு நேரத்திலாவது காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருப்போம். இல்லை என்று சொன்னால், அரசியல்வாதிகள் சொல்வதுபோல் அது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய்யாகத்தான் இருக்கும்.

காய்ச்சல்தானே என்று அலட்சியமாகக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது, காய்ச்சலா என்று பயத்துடனும், அதிர்ச்சியுடனும், கலவரத்துடனும் கேட்கும் காலமாக இருக்கிறது. ஏனென்றால், சாதாரண காய்ச்சலாக இருந்தது இன்று உயிரையும் காவு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர். நீண்ட நெடுங்காலமாகவே, மக்களால் அறியப்பட்டும் அதனால் அவர்கள் அவதிப்பட்டும் வந்த பாதிப்பின் பெயர்தான் காய்ச்சல்.

தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற இந்தத் தொடர் மூலம், காய்ச்சல் வருவதற்கு முன்பே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு, காய்ச்சல் என்றால் என்ன, அது எதனால் வருகிறது, என்னென்ன வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன என, காய்ச்சல் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் இத் தொடரில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

வாருங்கள், தொடக்கத்தில் இருந்தே வருவோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பிறந்த காய்ச்சல்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காய்ச்சல் குறித்து மக்கள் அறிந்திருந்தனர். நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்ஸ்கூட, காய்ச்சல் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அப்போது காய்ச்சல் ஒரு நோயாகக் கருதப்பட்டது. அதுவும் குறிப்பாக, கேலன் (Galen) போன்ற அறிஞர்கள் காலத்தில், நோய் என்ற அளவில்தான் காய்ச்சல் பார்க்கப்பட்டது. மேலும் சில அறிஞர்கள், காய்ச்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகளையும் கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் உடலில் எவ்வாறு காய்ச்சல் ஏற்படுகிறது? அப்போது உடலில் ஏற்படும் மாறுதல்கள் என்னென்ன என்பது குறித்து ஹெர்மன் (Herman Boerhaave) போன்ற அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

டாக்டர் ஹெர்மன்

19-ம் நூற்றாண்டில், இக்னாஸ் (Ignaz Semmel Weiss) என்ற அறிஞர், பிரசவித்த ஒரு பெண் இறந்ததற்குக் காரணமாக காய்ச்சல் இருந்ததையும், ஆனால் அந்தக் காய்ச்சல் ஏற்பட ஏதோ ஒரு தொற்றுநோயின் பாதிப்பு இருந்திருக்க வேண்டும் என்றும் கணித்தார்.

20-ம் நூற்றாண்டில்தான், காய்ச்சல் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல; அது ஏதோ ஒரு நோயின் அறிகுறி என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சாதாரண மனித உடலின் வெப்பநிலை

சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம். காய்ச்சல் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமது உடலின் சாதாரண வெப்பநிலை குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அப்போதுதானே, காய்ச்சல் வந்தது குறித்து அறிந்துகொள்ள முடியும்.

19-ம் நூற்றாண்டில்தான் மனித உடலின் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கருதப்பட்டது. அதன்பிறகு, 98.4 டிகிரி ஃபாரன்ஹீட் என்றும், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மனித உடலின் வெப்பநிலை 98.2 டிகிரி ஃபாரன்ஹீட் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எப்போதும் இதே வெப்பநிலை இருக்காது. ஒருவருக்கேகூட, ஒரே நாளில் உடல் வெப்பநிலை மாறுபடும். எனவே, 97.7 முதல் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை (36.5 டிகிரி முதல் 37.5 டிகிரி சென்ட்டிகிரேட்) வெப்பநிலை இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

உடல் வெப்பநிலை மாறுவதற்கான காரணங்கள்

ஒருவரின் உடல் வெப்பநிலையானது பல்வேறு காரணங்களால் சிறிது மாறுபடும்.

உதாரணத்துக்கு, காலையில் ஒருவரின் உடல் வெப்பநிலையானது குறைவாக இருக்கும். (தூங்கி எழும்போது). அதேபோல், இரவில் தூங்கும்போதும் உடலின் வெப்பநிலை குறைவாக இருக்கும். மதியம் மற்றும் மாலை வேளைகளில் உடல் வெப்பம் அதிகரிக்கும். அது ஏன்?

தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும், உடலின் இயக்கங்கள் குறைவதால், வெப்பநிலை குறைகிறது. ஆனால், மற்ற நேரங்களில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதால், உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது.

அதாவது, உடலில் வளர்சிதை மாற்றங்களும், வினைகளும் அதிகரிக்கும் வேளைகளில் உடலில் வெப்பநிலையும் அதிகரிக்கிறது என்பது புலப்படுகிறது இல்லையா?

ஆக, ஒருவர் உடற்பயிற்சி செய்தால் அல்லது கடுமையான வேலைகள் செய்தால், கண்டிப்பாக அவரது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதேபோல், சாப்பிட்ட பிறகும், மது அருந்திய பிறகும் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும், வெளிப்புற சீதோஷ்ண நிலை, பருவநிலை மாற்றங்களாலும் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.

அதே நேரத்தில், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்காது. சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களைவிட உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இதயத்துடிப்பும் சற்றும் அதிகமாக இருக்கும். வளர்சிதை மாற்றங்களும் அதிகமாக இருக்கும்.

ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்தும் உடல் வெப்பநிலை மாறலாம். ஆண்களைவிட பெண்களுக்கு உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும். அவர்களுக்கு உடல்வாகு சிறியதாக இருப்பதாலும், ஆண்களின் தசைகளை ஒப்பிடும்போது பெண்களின் தசைகள் சிறியதாகவும் வலிமை குறைவாகவும் இருப்பதாலும் அவர்களின் உடல் வெப்பநிலை குறைந்து காணப்படும். மேலும், பெண்களின் உடல், வெப்பத்தை எளிதாக இழக்கும் தன்மையையும் பெற்றிருக்கும்.

பெண்களுக்குக் கரு உற்பத்தியாகி (Ovum - Ovulation), அது வெளிப்படும்போது, உடல் வெப்பநிலை சிறிது அதிகரிக்கும். அதேபோன்றே, கர்ப்பிணியாக இருக்கும்போதும் அவர்களது உடலில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களாலும், அதிக ரத்த ஓட்டத்தாலும், மிகுந்த வளர்சிதை மாற்றங்களாலும் அவர்களது உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.

காய்ச்சல் குறித்தும், உடலில் வெப்பநிலையைப் பற்றியும் அறிந்துகொண்ட நாம், அடுத்து உடலின் வெப்பத்தை எவ்வாறு அளவீடு செய்வது என்பதை அறிந்துகொள்வோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com