அத்தியாயம் 11: காலனிய விரிவாக்கமும் கலாசார அழித்தொழிப்பும்
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 01st December 2015 12:00 AM | Last Updated : 30th November 2015 01:30 PM | அ+அ அ- |

பிரிட்டிஷாரின் ஆட்சி ஆரம்பித்த சில பத்தாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை உதாசீனப்படுத்தப்பட்டு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது என்ற எண்ணம் பரவலாகப் பலர் மனதில் இருந்தது. 1822-25 மதராஸ் பிரஸிடென்ஸி தரவுகள், வங்காளம், பிகார் பற்றிய டபுள்யூ ஆடம் தயாரித்த 1835-38 ஆண்டு ஆய்வறிக்கை, ஜி.டபிள்யூ லெய்(ட்)னரால் பஞ்சாபில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் போன்றவை இந்தச் சித்திரத்தையே உருவாக்குகின்றன. பல்வேறு கைவினைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள், உற்பத்தித்தொழில்கள் அல்லது சமூகக் கட்டுமானம் தொடர்பான விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் தெளிவான சித்திரம் கிடைக்கும். மேலும் முந்தைய ஐரோப்பிய படைப்புகளில் இருந்து (ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு முந்தையவை) இந்தியாவின் பல்வேறு பகுதிகள் பற்றி தெரியவந்திருக்கும் தகவல்கள், அந்த ஆரம்பகால கட்டத்தில் (இந்தியாவின் சில பகுதிகளில் அரசியல் கொந்தளிப்பு இருந்தபோதிலும்) இந்திய ஏற்றுமதிகள் தொடர்பான தகவல்கள் எல்லாம் மிகவும் செழிப்பான, துடிப்பான இந்திய சமூகம் பற்றிய சித்திரத்தை உருவாக்குகின்றன. 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் காணக்கிடைக்கும் இந்திய பாரம்பரிய அமைப்புகளின் நசிவு ஐரோப்பிய மேலாதிக்கத்தைத்தொடர்ந்து ஏற்பட்டவையே என்ற முடிவுக்கே அவை கொண்டுவருகின்றன. 1769-70 காலகட்டத்து வங்காளப் பஞ்சம் பின்னால் வரவிருந்த அழிவுகளுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.
சரித்திர நகர்வை கணக்கில் கொண்டு பார்த்தால் இப்படியான அழிவுகள் தவிர்க்கமுடியாதவையே. ஒருவகையில் பார்த்தால் அது அவசியமும்கூட. வலிந்து உருவாக்கப்பட வேண்டிய மாற்றமும் கூட. முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானவரான கார்ல் மார்க்ஸ் 1853-ல் சொன்னது: இந்தியாவில் இங்கிலாந்து செய்து முடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு இருக்கிறது: ஒன்று ஆசிய பாரம்பரிய அமைப்பை அழித்தல், இரண்டாவது ஆசியாவில் மேற்கத்திய சமுதாய உருவாக்கத்துக்கு அடித்தளம் அமைத்துத் தருதல். இதுபோன்ற அழித்தொழிப்புக்கு ஆளானது இந்தியா மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா இதுபோன்ற மாபெரும் அழித்தொழிப்பை சந்தித்திருக்கின்றான. கி.பி. 1500 காலகட்டத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பினால் அமெரிக்க பூர்வகுடிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர். அது ஒரு மாபெரும் நிகழ்வு. நவீன ஆய்வறிஞர்கள் கி.பி. 1500 வாக்கில் அமெரிக்க பூர்வகுடிகளின் எண்ணிக்கை சுமார் 9 கோடியில் இருந்து 12 கோடியாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். அப்போதைய ஐரோப்பிய மக்கள் தொகையைவிட அது அதிகம். 19-ம் நூற்றாண்டுவாக்கில் அமெரிக்க பூர்வகுடிகளின் எண்ணிக்கை வெறும் சில லட்சங்களாகக் குறைந்துவிட்டிருந்தது. இந்த எண்ணிக்கையில் சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கக்கூடும். ஆனால், இப்படியான ஒரு அழித்தொழிப்பு மனித குல வரலாற்றில் அந்நிய ஆக்கிரமிப்பினாலும் படையெடுப்பினாலும் நிகழ்ந்திருக்கின்றன. உலகின் எந்தப் பகுதி மக்களும் இதுபோன்ற அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளவே முடியாது. கி.பி. 1500க்கு முந்தைய உலகம் எப்படியாக இருந்தபோதிலும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பினால் அதற்கு முந்தைய புராதன, உயிர்த்துடிப்பான, கலாசாரங்கள், முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டன. அல்லது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த உண்மைக்கு சான்றுகள் ஏராளம் உண்டு. அது ஊரறிந்த ஓர் உண்மை.
19-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்தில் இந்திய மக்களின் மனங்களில் இந்த அழிவும் ஒடுக்குதலும் கனன்று எரிய ஆரம்பித்தன. இதற்கு முந்தைய காலகட்டத்தில் அனுபவரீதியாக உணர்ந்தவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கொந்தளிப்புகள் வேர் பிடித்து எழுந்தன. சில நேரங்களில் அந்த உணர்வு மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், 1900 வாக்கில் இந்திய தேசமானது பிரிட்டிஷாரின் ஆட்சியினால் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டிருக்கிறது என்ற எண்ணம் பரவலாக பெரும்பாலானவர்களின் மனதில் எழுந்தது. இந்தியாவை ஒட்டச் சுரண்டி ஏழ்மையாக்கியது மட்டுமல்லாமல் அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானமும் படுத்திவிட்டிருக்கிறது. இந்தியர்களிடம் எவை இருந்தனவோ அவையெல்லாம் ஏமாற்றிப் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்களுடைய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் எல்லாம் கேலிக்குள்ளாக்கப்பட்டன. சமூகக் கட்டமைப்பு முழுவதும் சிதைக்கப்பட்டுவிட்டது. அது சார்ந்து சொல்லப்பட்ட வாக்கியம்தான் இந்தியாவில் அறியாமையும் கல்வியின்மையும் பிரிட்டிஷாரின் ஆட்சியால் உருவாக்கப்பட்டது என்ற வாக்கியம்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை இந்தியாவில் விரிவான பரந்துபட்ட கல்வி அமைப்பு இருந்துவந்திருக்கிறது. இந்தியக் கைவினைத்தொழில்கள் அழித்தொழிக்கப்பட்டு இந்திய கிராமங்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டது தொடர்பாக ஏராளமான படைப்புகள் வெளியாகின. அதுபோலவே பாரம்பரியக் கல்வியின் அழித்தொழிப்பு குறித்தும் 1930 வாக்கில் நிறைய எழுதப்பட்டிருந்தன. ஆனால், மேற்கத்தியமயமாக்கப்பட்ட இந்தியர்களின் மத்தியில் மார்க்சியர்கள், ஃபேபியர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள் ஆகியோரின் பார்வையானது வில்லியம் வில்பர்ஃபோர், ஜேம்ஸ் மில், கார்ல் மார்க்ஸ் ஆகியோருடைய எண்ணத்தைப் போலவே இந்தக் குற்றச்சாட்டுகளையும் உண்மைகளையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளாகவே கருதின. பிரிட்டிஷார் மீதான விமரிசனங்கள் உண்மையாகவே இருந்தாலும் தேவையற்றவை என்று ஒதுக்கித் தள்ளின.
இந்தப் பின்னணியில்தான் 1931-ல் இந்தியா குறித்து லண்டனில் பிரிட்டிஷார் ஏற்பாடு செய்த ஓர் கருத்தரங்குக்கு (வட்ட மேஜை மாநாடு) காந்திஜி போயிருந்தபோது, அவருக்கு ராயல் இஸ்டிடியூட் ஆஃப் லண்டன், உரை நிகழ்த்த அழைப்புவிடுத்தது. அந்த உரையில் காந்திஜி இந்தியா கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
20, அக், 1931-ல் நடந்த அந்தக் கருத்தரங்குக்கு செல்வாக்கு மிகுந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். லோதியன் பிரபுவின் தலைமையின் கீழ் அந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் காந்திஜி உரை நிகழ்த்தினார். எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அவர் சில விஷயங்கள் பற்றிப் பேசினார். இந்து முஸ்லிம் சீக்கியர் பிரச்னை, தீண்டாமை, அதிகரித்துக்கொண்டே செல்லும் வறுமை, 85% இந்தியர்கள் கிராமப்புறங்களில் வசித்துவருவது இவைபற்றிப் பேசினார். அதன்பிறகு உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் பற்றிப் பேசினார்.
காங்கிரஸ் சுதந்தரமாக அதனுடைய வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டால் எந்தெந்த பிரச்னைகளில் உடனடி கவனத்தைக் குவிக்கும் என்பதுபற்றிப் பேசினார். பொருளாதார மேம்பாடு, தேவைப்படும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்தார். சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பான தீர்வுகளையும் முன்வைத்தார். வெறும் மலேரியா தடுப்பு குயினைன் மாத்திரைகள் மட்டும் தந்தால் போதாது. போதுமான பாலும் பழங்களும் மக்களுக்குக் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றெல்லாம் பேசியவர் அதன் பிறகு கல்வியின் மீது கவனத்தைக் குவித்தார்.
பிறகு பாரம்பரிய நீர்ப்பாசன வழிமுறைகளின் புறக்கணிப்பு பற்றிப் பேசினார். முடிவாக, நாம் ஆக்கபூர்வமாக எதையெல்லாம் செய்வோம்... அதேநேரம் சில அழித்தொழிப்பு வேலைகளும் செய்தாக வேண்டியிருக்கிறது என்று சொல்லி முடித்தார். இந்திய பிரிட்டிஷ் அரசு ராணுவத்துக்குச் செலவிடும் தொகையையும் ஆட்சியாளர்களின் நிர்வாகச் செலவினங்களையும் ஒழிக்கவேண்டும் என்று சொன்னார். அந்தச் செலவுகளை இந்தியாவால் சமாளிக்க முடியாது என்று சொன்னார். என்னிடம் முழுப்பொறுப்பும் விடப்படுமானால், ராணுவச் செலவினங்களில் முக்கால் பங்கைக் குறைத்துவிடுவேன் என்றார். பிரிட்டனின் பிரதமர் பிரிட்டனின் சராசரி வருமானத்தைவிட ஐம்பது மடங்கு அதிக தொகையைப் பெறுகிறார். இந்தியாவில் வைஸ்ராயோ இந்திய சராசரி வருமானத்தைவிட 5000 மடங்கு அதிக சம்பளத்தைப் பெறுகிறார். இந்த ஒன்றிலிருந்தே நிர்வாகச் செலவினங்கள் இந்தியாவுக்கு எவ்வளவு கேட்டை விளைவிக்கிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
காந்தி கல்வி தொடர்பாக இரண்டு விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இன்றைய இந்தியா ஐம்பது வருடங்களுக்கு முந்தைய இந்தியாவைவிட கல்வியில் வெகுவாகப் பின்தங்கி இருக்கிறது. இரண்டாவதாக பிரிட்டிஷார் இந்தியாவின் நடைமுறை யதார்த்தங்களை செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை வேரோடு பிடுங்கி எறிந்தனர். மண்ணைத் தோண்டி வேரை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த வேரை அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர். அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது. தன்னுடைய இந்தக் கூற்றை யாரும் மறுக்கக்கூடுமென்ற பயமே தனக்கு இல்லை என்றும் சொன்னார்.
ஆனால், இந்தக் கூற்றுக்கு உடனே எதிர்க் கருத்து வந்தது.
லண்டனில் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடீஸ் என்ற அமைப்பை நிறுவியவரும் டாக்கா பல்கலையின் முன்னாள் துணை வேந்தருமான சர் ஃபிலிப் ஹெர்டாக் காந்தி சொன்னதை மறுத்துக் குரல் எழுப்பினார். அவர் பிரிட்டிஷ் அரசு 1918-1930 காலகட்டத்தில் அமைத்த பல்வேறு கல்விக் ஆய்வுக் குழுக்களின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். காந்திஜியை அந்த மாநாட்டிலேயே கேள்வி கேட்டவர், அதன் பிறகு ஐந்தாறு வாரங்கள் கடிதப்போக்குவரத்திலும் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார். கடைசியாக ஹெர்டாக் காந்திஜியைச் சந்தித்து ஒருமணி நேரம் இது தொடர்பாக விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியில் காந்திஜி சில ஆவணங்களை பிலிப் ஹெர்டாக்கின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். யங் இந்தியாவில் டிசம்பர் 1920-ல் தவுலத் ராம் குப்தா எழுதிய இந்தியாவில் பொதுக்கல்வியின் வீழ்ச்சி (தி டிக்லைன் ஆஃப் மாஸ் எஜுகேஷன் இன் இந்தியா), இந்திய பாரம்பரியக் கல்வி பஞ்சாபில் அழித்தொழிக்கப்பட்ட விதம் (ஹவ் இந்தியன் எஜுகேஷன் வாஸ் க்ரஷ்ட் இன் பஞ்சாப்) என்ற இரண்டு கட்டுரைகளைச் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு கட்டுரைகளுமே ஆடம்மின் ஆய்வறிக்கை, லெய்(ட்)னரின் ஆய்வறிக்கை மற்றும் பம்பாய், பஞ்சாப், மதராஸ் பகுதி அரசு ஆவணங்கள் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால், இவை எதுவும் சர் ஃபிலிப் ஹெர்டாகுக்கு நம்பத்தகுந்த ஆதாரமாகப்பட்டிருக்கவில்லை. காந்திஜி சாத்தம் ஹவுஸில் முன்வைத்த கூற்றைப் பின்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார். இந்தியா திரும்பிய பிறகு நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியான வலுவான ஆதாரங்களை உங்களுக்குத் தருகிறேன். ஒருவேளை என் கூற்றை நிருபிக்க முடியாமல் போனால், சாத்தம்ஹவுஸில் என் கூற்றுக்குக்கு என்ன முக்கியத்துவம் கிடைத்ததோ அதைவிட அதிக முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் என் மன்னிப்பைத் (பின்வாங்கலைத்) தெரிவிக்கிறேன் என்று காந்திஜி சொன்னார்.
இந்த பேட்டியில் இருந்து தெரியவந்த இன்னொரு முக்கியமான கருத்தாக ஃபிலிப் ஹெர்டாகுக்குப் பட்ட விஷயம் என்னவென்றால், ‘இந்திய பாரம்பரியப் பள்ளிகளை பிரிட்டிஷ் அரசு அழித்ததாக காந்திஜி குற்றம் சாட்டவில்லை. அதற்கு ஆதரவு தராமல் இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.’ இதற்கு ஹெர்டாகின் பதில் என்னவென்றால், ‘அந்தப் பள்ளிகளை பிரிட்டிஷார் அழியவிட்டார்கள்; ஏனென்றால், அவை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு முக்கியமானவை அல்ல’.
இதனிடையில் ஹெர்டாக் வரலாற்றாய்வாளரான எட்வர்ட் ஜே.தாம்சனிடம் காந்தி சொன்னது சரியா என்று கேட்டிருக்கிறார். அவரும் காந்தி சொல்வது தவறு. பாரம்பரியப் பள்ளிகளையும் பாரம்பரியக் கைவினைத் தொழில்களையும் பிரிட்டிஷார் திட்டமிட்டு அழிக்கவில்லை. அது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு என்று சொல்லியிருக்கிறார். மேலும், ‘கடந்த சில ஆண்டுகளில். பொதுக் கல்வி தொடர்பாக, நாம் பாராட்டிக்கொள்ளும்படியாக எதுவும் செய்திருக்கவில்லை’ என்றும் சொல்லியிருக்கிறார். தாம்சன் பின்னர் எழுதிய ஒரு கடிதத்தில் இந்த விஷயத்தை மேலும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘1918க்குப் பிறகு நாம் வெகு சொற்பமாகவே உருப்படியாக எதுவும் செய்திருக்கிறோம். இந்தியர்களைக் கடைத்தேற்றும் பொறுப்பானது அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் ஆக்ஸ்ஃபோர்டு போன்ற இடங்களில் முதல் வகுப்பில் தேறும் அளவுக்குத் திறன் கொண்டிருந்தவர்களைக்கூட முடக்கிவிடும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. சிப்பாய் கலகத்துக்கு முன்பாக அங்கு இருந்த பிரிட்டிஷாரின் ஆவணங்களைப் பார்த்தேன். காங்கிரஸ்வாலாக்களுக்கு அது ஒருபோதும் புரியப்போவதில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஹெர்டாக் மற்றும் எட்வ்வர்டு தாம்சனுடனான கடிதப் பரிமாற்றம் கசப்பான விதத்தில் முடிவடைந்தன. ஹெர்டாக் என்னவிதமான தகவல்பூர்வமான, அறிவார்ந்த ஆதாரங்களை எதிர்பார்த்தாரோ அவை கிடைத்திருக்கவில்லை. எனினும் காந்திஜியுடனான பேட்டிக்குப் பிறகு காந்திஜியின் கூற்றுக்கு மறுப்புரையை இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் கட்டுரையாக வெளியிட்டார். ‘இன்றைய தேதிவரை திருவாளர் காந்தியால் தான் சொன்ன கூற்றுக்கு ஆதாரமாக எதையும் முன்வைத்திருக்கமுடியவில்லை. தன்னால் நிரூபிக்க முடியாமல் போனால் அந்தக் கூற்றை பின்வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்’ என்று அந்தக் கட்டுரையை முடித்திருக்கிறார்.