அத்தியாயம் 10: டாக்டர் ஜி. டபிள்யூ லெய்(ட்)னர் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி குறித்து…
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 24th November 2015 10:00 AM | Last Updated : 23rd November 2015 04:34 PM | அ+அ அ- |

ஆடம் தம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததற்கு 45 வருடங்கள் கழிந்த பிறகு டாக்டர் ஜி.டபிள்யூ. லெய்(ட்)னர் (லாகூர் அரசுப் பல்கலைக்கழகத்தின் முதல்வர், சிறிது காலத்துக்குப் பஞ்சாபின் பொதுக் கல்வி மையத்தின் தற்காலிக இயக்குநர்) பஞ்சாபில் நடைமுறையில் இருந்த பாரம்பரியக் கல்வி தொடர்பாக மிக விரிவான ஆய்வறிக்கையைத் தயாரித்திருக்கிறார். டபிள்யூ ஆடம் செய்த ஆய்வைப் போலவேதான் இவருடையதும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், லெய்(ட்)னரின் மொழியும் தீர்மானங்களும் நேரடியானதாகவும் பிரிட்டிஷ் ஆட்சியை அவ்வளவாகப் புகழாதவகையிலும் இருக்கின்றன. காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மைப் பற்றிய விமரிசனத்தைச் செவிமடுத்துக் கேட்கும் தன்மையை இழந்துவிட்டனர். இந்தியாவிலும் தாம் ஆக்கிரமித்த வேறு இடங்களிலும் தமக்கிடப்பட்ட ‘தெய்விகப் பணி’ குறித்து உண்மையாகவே நம்பத் தொடங்கிவிட்டிருந்தனர்.
லெய்(ட்)னரின் ஆய்வுகளின்படிப் பார்த்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பஞ்சாப் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் குறைவாக மதிப்பிட்டுப் பார்த்தாலும் 3,30,000 மாணவர்கள் எழுதுதல், வாசித்தல், கணிதம் போன்றவற்றில் திறன் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். ‘1882-ல் 1,90,000 க்கு கொஞ்சம் அதிகம்’ என்ற கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கிறது. மேலும் 35-40 வருடங்களுக்கு முன்பாக, ஆயிரம் பேர் அரபு, சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் படித்தனர், கீழைத்தேய இலக்கியம், கீழைத்தேய சட்டம், தர்க்கம், தத்துவம், மருத்துவம் போன்ற உயர் கல்விகள் இங்குக் கற்றுத்தரப்பட்டன. லெய்(ட்)னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக விரிவாக ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். முந்தைய அதிகாரபூர்வ ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு 1882-ல் கள நிலைமை என்ன என்பதை மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். முன்பு நடைமுறையில் இருந்த பள்ளி வகைகள், சம்ஸ்கிருதப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் ஆகியவை பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆய்வறிக்கையில் இருந்தும் 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்தும் பெரிதும் இறையியல், சட்டம் மருத்துவம், வான சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை பற்றிய விவரங்களே அதிகம் கிடைக்கின்றன. இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த தொழில்நுட்பங்கள், கைவினைக் கலைகள் ஆகியவை தொடர்பான கல்வி பற்றிய குறிப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. இசை, நடனம் ஆகியவற்றுக்கான கல்வி பற்றியும் குறைவான தகவலே கிடைத்துள்ளன. கடைசி இரண்டு கலைகளுக்கான கல்வி பெரிதும் கோயில் சார்ந்த அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
தொழில்நுட்பங்கள், கைவினைத் தொழில்கள் பற்றிய குறிப்புகள் அதிகம் இல்லாததற்கான காரணம் என்னவென்றால் அரசாங்க நிர்வாகிகள், பயணிகள், கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள், ஆய்வறிஞர்கள் ஆகியோருக்கு இந்தக் கலைகள், தொழில்கள் மீதும் அவை தலைமுறை தலைமுறையாக எப்படிக் கைமாற்றித் தரப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் எந்தப் பெரிய அக்கறையும் இருந்திருக்கவில்லை. ஒரு சிலருக்குக் குறிப்பிட்ட தொழில்நுட்பம் அல்லது கைவினைத் தொழில் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. இரும்பு, எஃகு, விவசாயக் கருவிகள் பற்றியும் பருத்தி, துணி போன்றவை, கட்டடக்கலையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கப்பல் கட்டுமானம், பனிக்கட்டி தயாரித்தல், காகிதம் தயாரித்தல் போன்றவை குறித்துத் தகவல்கள் சேகரித்திருக்கிறார்கள். இந்த இடங்களிலும்கூட அந்தத் தொழில் நுட்பம் எப்படிச் செயல்படுகிறது, அதன் தொழில் நுட்ப அறிவியல் அம்சங்கள் என்ன என்பது போன்ற தகவல்கள்தான் இருக்கின்றனவே தவிர அந்தத் தொழில்கள் எப்படிக் கற்றுத் தரப்பட்டன என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை. அது தொடர்பான தகவல்கள் அதிகம் இல்லாததற்கு இன்னொரு காரணம் அவையெல்லாம் வீடுகளில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.
பிரிட்டனில் பயிற்சிக் காலகட்டம் (ஒருவர் நேரடியாக எந்தத் தொழிலையும் செய்ய ஆரம்பித்துவிடக்கூடாது. தொழில் நிபுணர் அல்லது கைவினை கலைஞரிடம் நீண்டகாலம், கடினமான பயிற்சி பெற்ற பிறகே ஒரு தொழிலைச் செய்யவேண்டும்) இருந்ததுபோல் அல்லாமல் இந்தியாவில் கைவினைத்தொழில் கல்வி பெரிதும் பெற்றோரிடமிருந்தே பெறப்பட்டது. பெற்றோரே ஆசிரியர்கள்; குழந்தைகளே மாணவர்கள்! இன்னொரு காரணம் என்னவாக இருந்திருக்குமென்றால், கிணறு தோண்டுதல், பொருள்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லுதல் போன்றவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவின் (ஜாதியின்) விசேஷமான ஏகபோக உரிமைகொண்ட தொழிலாக இருந்திருக்கின்றன. இந்த ஜாதிகளில் ஒரு சிலர் இந்தியா முழுவதிலும் அந்தத் தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள். எஞ்சியவர்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இயங்கி வந்திருக்கிறார்கள். எனவே, இந்தத் தொழில்கள் சார்ந்த கல்வி என்பது அந்தந்த ஜாதியினரின் தனிப்பட்ட செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது.
‘இந்தியர்களின் கைவினைத் தொழில்களை அந்நியர்கள் கற்றுக் கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் அது ஜாதிகளுக்குள்ளாக தந்தையிடமிருந்து மகனுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஒருவர் தனது ஜாதியின் நலனுக்கு எதிராக ஏதேனும் செய்தால் அந்த ஜாதியில் இருந்து விலக்கிவைக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே, எந்தவொரு தகவல்களையும் பகிர்ந்துகொள்ளும்படி இவர்களைத் தூண்டுவது மிகவும் கடினம்’. இந்தக் கூற்று இந்திய கைவினைத்தொழில்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள்ளாகவே இருந்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், இது தொடர்பான கல்வி பற்றியோ அந்தத் தொழில்களில் நடக்கும் மாற்றங்கள், செழுமைப்படுத்தல்கள் பற்றியோ ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் இந்தக் குழுமங்கள் (ஜாதிகள்) பற்றிக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்தத் தொழில்களின் தன்மை, ஒவ்வொரு தொழிலையும் முறையாகவோ முறை சாராமலோ கற்பது எப்படி எனப் பல தகவல்களைத் தெரிந்துகொண்டாகவேண்டும். இது தொடர்பாகக் குறைவான தகவல்களே இருக்கின்றன.
மதராஸ் பிரஸிடென்ஸியில் நடைமுறையில் இருந்த தொழில்கள் பற்றிய பட்டியல் கீழே தரப்படுகிறது. வரி விதிப்பதற்காக இந்தத் தொழில்கள் பற்றிய தகவல்கள் 19-ம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்டன. இது இந்தத் தொழில்கள் எந்த அளவுக்கு பரந்துபட்டவையாக இருந்திருக்கின்றன என்பதை நமக்கு அறியத் தருகின்றன.
குளங்கள், கட்டடங்கள் கட்டும் தொழில்
கல் வெட்டுபவர்கள், மார்பிள் சுரங்கப் பணியாளர்கள், சுண்ணம் தயாரிப்பவர்கள், மரம் அறுப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள், மூங்கில் வெட்டுபவர்கள், குளம் தோண்டுபவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள்.
உலோகத் தொழில்
இரும்புத் தாது சேகரிப்பவர்கள், இரும்பு உற்பத்தியாளர்கள், இரும்புப் பட்டறைப் பணியாளர்கள், இரும்பு உலைப் பணியாளர்கள், உலோகங்களை உருக்கி அடித்து கருவி உருவாக்குபவர்கள், வெண்கல ஆசாரிகள், தாமிர ஆசாரிகள், ஈயம் பூசுபவர்கள், தங்கத் தூசு சேகரிப்பவர்கள், இரும்பு ஆசாரி, தங்க ஆசாரி, குதிரை லாடம் உருவாக்குபவர்கள்.
நெசவுத் தொழில்
பருத்தி தூய்மைப்படுத்துபவர்கள் (பறிப்பவர்கள்), பஞ்சு அடிப்பவர்கள், பஞ்சு பிரிப்பவர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளிகள், பருத்தி நெசவாளிகள், இண்டிகோ நீலம் தயாரிப்பவர்கள், நெசவாளர்கள், பட்டுத் துணி நெய்பவர்கள், சாய நூல் தயாரிப்பவர்கள், சாய டை தயாரிப்பவர்கள், துணி நெய்பவர்கள், போர்வை நெய்பவர்கள், மெத்தை விரிப்பு தைப்பவர்கள், கம்பளி நெய்பவர்கள், பர்தா நெய்பவர்கள், சாக்கு தயாரிப்பவர்கள், இஸ்லாமிய நெசவாளர்கள், தறி தயாரிப்பவர்கள், பட்டு நெசவாளர்கள்.
பிற கைவினைக் கலைஞர்கள்
வளையல் தயாரிப்பவர்கள், காகிதம் தயாரிப்பவர்கள், பட்டாசுப் பொருள்கள் தயாரிப்பவர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள், சோப் தயாரிப்பவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளம் தயாரிப்பவர்கள், சாராயம் (கள்) வடிப்பவர்கள், மூலிகைகள், வேர்கள் சேகரிப்பவர்கள், மருந்து தயாரிப்பவர்கள்.
வேறு தொழில்கள்
படகோட்டி, மீனவர், செருப்பு தைப்பவர்கள், குடை தயாரிப்பவர்கள், காலணி தைப்பவர்கள், ஓவியர்கள், மர ஆசாரிகள், அச்சு தயாரிப்பவர்கள், வைண்டிங் கருவி தயாரிப்பவர்கள், நெல் குத்துபவர்கள், கள் இறக்குபவர்கள், துணி துவைப்பவர்கள், சிகை அலங்காரத் தொழில் செய்பவர்கள், துணி தைப்பவர்கள், கூடை முடைபவர்கள், பாய் முடைபவர்கள்.