அத்தியாயம் 3: இந்தியப் பாரம்பரியக் கல்வியில் பிரிட்டிஷாரின் முதல் குறுக்கீடு
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 06th October 2015 10:00 AM | Last Updated : 05th October 2015 04:21 PM | அ+அ அ- |

18-ம் நூற்றாண்டு மத்திம காலத்தில் ஆரம்பித்து இப்படியாக சேகரமான ஆவணங்கள் இந்தியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் தொடர்ச்சியான அறிவார்ந்த விவாதங்களையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அரசியல், சட்டம், தத்துவங்கள், விஞ்ஞானங்கள், முக்கியமாக இந்திய ஜோதிடம் தொடர்பாக மிகுந்த ஆர்வம் உண்டானது. ஐரோப்பியர்களிடையே (குறிப்பாக வோல்டர், அபே ரேய்னல், ழான் சலிவன் பெய்லி ஆகியோரிடையே) ஏற்பட்ட இந்த ஆர்வம் பிரிட்டனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எடின்பர்க் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருந்த ஆடம் ஃபெர்கூசன், வில்லியம் ராபர்ட்ஸன், ஜான் ப்ளேஃபெயர், ஏ.மக்கனோக்கி ஆகியோரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. 1775-ல் ஆடம் ஃபெர்கூசன் தனது முன்னாள் மாணவர் ஜான் மேக்பெர்ஸனிடம் (1784-85 காலகட்டத்தில் வங்காளத்தின் கவர்னர் ஜெனரல்) ஒரு விஷயம் சொன்னார்:
இந்தியாவில் அரச நிர்வாகம், கொள்கை அமலாக்கம் தொடர்பாக அனைத்துவகையான தகவல்களையும் விரிவாக சேகரிக்கவும். ‘விரிவாக’ என்று நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒரு நகரத்தையும் அதன் மாவட்டத்தையும் எடுத்துக்கொள். அதன் பரப்பளவு, மக்கள் தொகை இவற்றைச் சேகரி. அந்த மக்கள் தொகையின் பல்வேறு வர்க்கங்கள், அவர்களுடைய தொழில்கள், வருவாய்க்கான ஆதாரங்கள், வாழ்க்கை முறை இவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரி. ஒவ்வொரு பிரிவுகளுக்கிடையிலான உறவு, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எந்தவகையில் சார்ந்திருக்கிறார்கள், தொழிலாளரிடமிருந்து அரசு அல்லது கீழ்மட்ட அதிகாரிகள் என்னவிதமான பங்களிப்புகளைப் பெறுகிறார்கள், எப்படிப் பெறுகிறார்கள், இதையெல்லாம் சேகரிக்கவும். என்னைவிட அதிகம் உனக்குத் தெரிந்திருக்கக்கூடிய விஷயங்கள் பற்றி நான் விரிவாகப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும். இந்தியாவில் இருந்து ஒளியைக் (அதாவது அதன் பொருளாதார மூலங்கள் போன்றவை பற்றிய தகவல்களைக்) கொண்டுவர முடிந்த ஒருவருக்கு, அந்த ஒளியைப் பலரைப் பின்பற்றச் செய்யவேண்டிய ஒருவருக்கு இதற்கு மேலும் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என் கடிதத்தை இதனுடன் முடித்துக்கொள்கிறேன்.
‘நமது பேரரசர், கங்கைக் கரையின் (புதிய) அதிபர் இந்துக்களின் பழம் பெரும் படைப்புகளை சேகரிக்கவும் மொழி பெயர்க்கவும் தேவையானதைச் செய்து தருவார்’ என்று ஏ.மெக்கனோகி குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய எண்ணம் என்னவென்றால், இந்திய அறிவை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றால் வான சாஸ்திரம், பழங்காலக்கலைகள் மற்றும் அவற்றுடன் பிணைந்திருக்கும் அறிவியல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் முன்னேறியதாகவே இருக்கும். பழங்கால இந்துக்களின் மதம், அரசாங்கம் போன்றவையும் எந்தவகையிலும் அவர்களுடைய அறிவியல் அறிவுக்குக் குறைந்தவை அல்ல. வரலாறு, கவிதைகள், பாரம்பரியங்கள், ஹிந்து நீதிக்கதைகள் எல்லாம் பழங்கால உலகம் குறித்த சித்திரத்தை நமக்குக் காட்டக்கூடும். மோசஸ் எந்த மக்களிடமிருந்து கல்வியைப் பெற்றாரோ கிரேக்கர்கள் யாரிடமிருந்து தமது மதத்தையும் கலைகளையும் பெற்றார்களோ அந்தப் பழங்கால உலகின் சமூக அமைப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ள முடியக்கூடும். பனாரஸ்தான் இந்தியக் கல்வியின் மையமாக இருந்தது. அங்குதான் அனைத்து அறிவியல்களும் கற்றுத் தரப்பட்டன. வானவியலின் மிகத் தொன்மையான படைப்புகள்கூட அங்கு உருக்குலையாமல் இருக்கின்றன.
அதேகாலகட்டத்தில், இந்தியாவில் லண்டனில் இருந்து வரும் உத்தரவை ஏற்று அரசு நடத்தவும் கொள்கைகளை அமல்படுத்தவும் நியமிக்கப்பட்டவர்களிடமிருந்தும் இதுபோன்ற சிந்தனையும் அதற்கு இசைவான செயல்பாடுகளும் வெளிப்பட்டன. நடைமுறை மற்றும் உடனடித் தேவையாக இருந்த ஆட்சி நிர்வாகக் காரணங்களுக்காக (ஆடம் ஃப்பெர்கூஸனைப் பின்பற்றி) இந்து, முஸ்லிம் சட்டங்கள், சொத்து தொடர்பான உரிமைகள், பல்வேறு பகுதிகளின் வருவாய் வாய்ப்புகள் தொடர்பான படைப்புகள் எழுதப்பட்டன. இதற்காக சில பிரிட்டிஷார் சமஸ்கிருதம், பாரசீக மொழிகளைக் கற்றனர். எது பிரிட்டிஷாரின் நலனுக்குப் பெரிதும் உதவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் வேண்டாததைத் தவிர்க்கவும் இந்த மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என அவர்கள் நினைத்தனர். இந்த முயற்சியில் சிலருக்கு சம்ஸ்கிருதத்திலும் இந்திய இலக்கியங்களிலும், அதனளவிலேயோ மெக்கனோகி சொன்னது போன்ற காரணங்களுக்காகவோ ஈடுபாடு உருவானது. சென்னையில் இருந்த சார்ல்ஸ் வில்கின்ஸ், வில்லியம் ஜோன்ஸ், எஃப்.டபிள்யூ எலிஸ் ஆகியோரும் லெப்டினண்ட் வில்ஃபோர்டும் (வாரனாசியில் மிக அருமையான ஆய்வுகள் செய்தவர்) இந்த வகையில் மிகவும் முக்கியமானவர்கள்.
1770களில் இந்திய அறிவு, கல்வி மையங்கள் தொடர்பாக மூன்று அணுகுமுறைகள் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை மேற்பார்வைக்கு வெவ்வேறானவைபோல் தோன்றக்கூடும். ஆனால், அடிப்படையில் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தக்கூடியவையே.
முதல் அணுகுமுறை பிரிட்டிஷாரின் அதிகாரப் பெருக்கம், நிர்வாகத் தேவைகள் ஆகியவற்றின் மூலமாக உருவானது (ஆடம் ஃபெர்கூஸன் போன்றோர் பரிந்துரைத்திருந்தவற்றுக்கும் கூடுதலாகத் தேவைப்பட்டன). அந்தச் செயல்பாடுகளுக்கு ஒருவித நியாயத்தை வழங்கவும் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய வழிமுறைகள், சட்டங்கள், புதிய கருத்தாக்கங்கள் ஆகியவற்றுக்கு முந்தைய இந்திய அமைப்புகளின் சாயலைக் கொடுக்கவும் (எவ்வளவுதான் சிரமம் என்றாலும்) வேண்டியிருந்தது. இந்தத் தேவையே பிரிட்டிஷ்-இந்தியவியல் என்ற துறைக்குக் காரணமாக அமைந்தது.
இரண்டாவது அணுகுமுறை எடின்பர்க் அறிவொளி இயக்கத்தின் (1750களில் ஆரம்பித்தது) பயனாக உருவானது. மக்கனாக்கி போன்றோர் அதை பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. வரலாற்று அனுபவம் (அமெரிக்காவின் பூர்வ குடி நாகரிகங்கள் அடியோடு அழிக்கப்பட்ட நிகழ்வு), தத்துவார்த்த அவதானிப்பு மற்றும் வெளிப்பாடுகள் இவற்றின் மூலம் ஓர் உண்மை அவர்களுக்குத் தெரியவந்திருந்தது: ஒரு நாகரிகத்தை ஆக்கிரமித்துத் தோற்கடிப்பது என்பது அந்த நாகரிகத்தைச் சிதைத்துவிடுவதோடு அந்த நாகரித்தின் அனைத்து அரிய அறிவுச் சேகரிப்புகளையும் ஒரேயடியாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது. எனவே, ஒரு சமூகத்தின் யதார்த்தமான நிலைமை என்ன என்பதை அப்படியே ஆவணப்படுத்தவேண்டும்; வாரனாசி போன்ற கல்வியில் சிறந்த பகுதிகளில் இருந்து எதையெல்லாம் எடுத்துக்கொள்ளமுடியும் என்பதைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.
மூன்றாவது அணுகுமுறை, கிரேட் பிரிட்டனில்கூட அப்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒன்றின் வெளிப்பாடு: மக்களை நிறுவனமயப்படுத்தி, எளிய, சட்டத்துக்குட்பட்ட கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குதல். அதற்கு ஓரளவுக்கு எழுத்தறிவும் கல்வி கற்பித்தலும் அவசியம். அதே நோக்கத்தை இந்தியாவிலும் நிறைவேற்றவும் கிறிஸ்தவ ‘ஒளி’யையும் ‘ஞான’த்தையும் மக்களுக்கு வழங்கவும் பல்வேறு இந்திய மொழிகளின் இலக்கணத்தை உடனடியாக உருவாக்கவேண்டியிருந்தது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸைப் பொறுத்தமட்டில் ‘புனித வேதாகமங்கள் உள்ளூர் மொழிகளில் உலா வரவேண்டும்’, ‘கிறிஸ்தவம் மக்களிடையே பரவவேண்டும்.’ ‘இந்தியர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே கிறிஸ்தவர்களாக மாறிவிடவேண்டும்’.
இந்த முயற்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் ஆதரவுடன் சம்ஸ்கிருத, பாரசீகக் கல்லூரிகள் உருவாகவும் காரணமாக அமைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு உகந்த இந்திய படைப்புகள் வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு கிறிஸ்தவ மிஷனரிகளும் பள்ளிகள் திறக்க ஆரம்பித்தனர். அவர்கள் செயல்பட்ட இந்திய பகுதிகளில் இருந்துவந்த பாரம்பரிய இந்தியக் கல்வி பற்றி எழுதினர். எனினும் இந்திய மக்கள், அவர்களுடைய அறிவு, கல்வி அல்லது கல்வியின்மை இவைசார்ந்ததாக பிரிட்டிஷாரின் நோக்கம் இருந்திருக்கவில்லை. பழம் பெரும் படைப்புகளில் பிரிட்டிஷாரின் நலனுக்கு எவை உகந்தவையாக இருந்தனவோ அவையே எழுதப்பட்டன: அதாவது, இந்தியர்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பிரிட்டிஷார் விரும்பினர்களோ அவற்றையும் பிரிட்டிஷாரின் புதிய கோணத்திலான விளக்கங்களையும் மட்டுமே வெளியிட்டனர். அவர்களுடைய இன்னொரு எதிர்பார்ப்பு மத மாற்றத்துக்குத் தயாராக இருக்கும் நபர்களை அதாவது, பிரிட்டிஷாரின் வார்த்தையில் சொல்வதானால், கிறிஸ்தவ ஒளியைப் பெறுவதற்கும் ஒழுக்கத்தில் மேம்பாடு அடைவதற்கும் தயாராக இருக்கும் நபர்களை கிறிஸ்தவர்களாக ஆக்குவதுதான். 1813 வரையிலும் பிரிட்டிஷாரில் வெகு சிலருக்கே இந்த எண்ணம் இருந்தது. அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும் ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் நம்பிக்கை மற்றும் தோற்றம் சார்ந்து ஒருவித ஒத்திசைவை உருவாக்கவும் இந்த மத மாற்றங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரிட்டிஷாரின் பிரதான நோக்கம் ஆரம்பத்திலிருந்தே வருவாயை அதிகரிப்பதாகவும் அரசுக்கு எந்த வரியும் தராமல் இருக்கும் வருவாய்க்கான புதிய வாய்ப்புகளைக் கண்டிபிடித்து அவற்றுக்கு வரிவிதிப்பதாகவும்தான் இருந்தது.