அத்தியாயம் 5: பழங்காலத்தில் பிராமணர்களைவிட அதிக எண்ணிக்கையில் படித்தது சூத்திரர்களும் தலித்துகளுமே!
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 20th October 2015 10:00 AM | Last Updated : 19th October 2015 05:46 PM | அ+அ அ- |

தரவுகள் எந்த அடிப்படையில் சேகரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தி மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய்த்துறை அனுப்பிய சுற்றறிக்கை, தகவல் சேகரிப்புக்காக வடிவமைக்கப்பட்ட படிவம், பிரஸிடென்ஸியின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களின் பதிலுரைகள், கிடைத்த தகவல்களை வைத்து அவர்கள் எடுத்த நடவடிக்கைகள், மதராஸ் அரசாங்கத்தின் செயல்பாடுகள், அரசாங்கத்தின் உத்தரவுகள் ஆகியவை இந்த ஆய்வுத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
கலெக்டர்கள் தமது அறிக்கைகளை எந்த அடிப்படையில் தொகுத்திருக்கிறார்கள் என்ற விவரங்களைக் கண்டுபிடிக்க முடிந்தால், மேலும் விரிவான ஆய்வுக்கும் தெளிவான புரிதலுக்கும் அது உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் இருந்த சில மாவட்டங்களின் தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் தகவல்கள் எதுவும் விடுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய தாலுகா அளவில் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் கிராமங்கள், டவுன்கள், கல்லூரிகள், பள்ளிகள் தொடர்பான தகவல்கள் நிச்சயம் அதில் இருக்க வாய்ப்பு உண்டு.
மினிட் ஆஃப் தி கவர்னர் இன் கவுன்ஸிலில் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டிக் குறிப்புகள், வருவாய்த்துறையின் அறிக்கை இவை நீங்கலாக, அந்தப் படிவமானது ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தது. மாணவர்கள் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டு பிராமண மாணவர்கள், வைசிய மாணவர்கள், சூத்திர மாணவர்கள், பிற சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள், முஸ்லிம் மாணவர்கள் போன்றோரின் எண்ணிக்கை குறித்த கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. முதல் நான்கு பிரிவுகளின் எண்ணிக்கை தனியாக இந்து மாணவர்கள் என்ற வகையின் கீழ் கூட்டி எழுதப்பட்டது. அதனுடன் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை தனியாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பிற சாதிகள் என்ற வகைப்பாட்டுக்குள் சத்-சூத்திர சாதிக்குக் கீழே இருக்கும் அனைத்து சாதியினரும் இடம்பெற்றனர். அதாவது, இன்று அட்டவணை சாதியாக இருப்பவர்கள் அனைவரும் இந்த வகைப்பாட்டின் கீழ் வந்தனர்.
கனரா (கர்நாடகம்) பகுதி கலெக்டரிடமிருந்து ஒரு பதில் வந்ததே தவிர அவருடைய பிராந்தியத்தில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன; மாவட்டத்தில் அவர் சொல்வதுபோல் தனியார் (வீடுகளில்) கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பாக எந்தத் தகவலும் தந்திருக்கவில்லை. 'கனரா பிராந்தியத்தில் கல்லூரிகளே இல்லை’ என்பது போன்ற வாக்கியங்கள் நீங்கலாக, வேறு எதுவும் அவரது பதிலில் இல்லை. அவரைப் பொறுத்தவரை கனரா பகுதியில் இருக்கும் கல்வியைப் பொதுக் கல்வி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. சில பெற்றோர் ஒன்று கூடி சில ஆசிரியர்களை அழைத்து வந்து தமது குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தரச் செய்கிறார்கள். அவ்வளவுதான். அந்த கலெக்டர் எந்த ஆய்வும் செய்யாமல் இருந்தற்கு, அவர் தனது கடிதத்தில் சொல்லியிருந்த இன்னொரு விஷயம் காரணமாக இருந்திருக்கலாம். அதாவது, ‘அந்தப் பணிகளுக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் ‘அந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும் ஜில்லாவில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன என்பதை அதன் மூலம் கண்டுபிடித்துவிட முடியாது; எனவே, இந்தக் கடிதத்தையே திருப்திகரமான பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கனரா மற்றும் ஆந்திராவின் வட கடலோரப் பகுதிகளில் பிரிட்டிஷாருக்கு எதிரான விவசாயப் போராட்டம் வலுவாக நடைபெற்று வந்தது (1800களில் ஆரம்பித்து குறைந்தபட்சம் 1850 வரையிலும்). மேலும் எங்கெல்லாம் இந்தத் தகவல்கள் சேகரிக்க உத்தரவு தரப்பட்டதோ அங்கெல்லாம் கலெக்டர்கள் தந்த தகவல்களின் தரமும் வீச்சும் இடத்துக்கு இடம் மாறுபட்டது. ஒரு குறிப்பிட்ட தகவல் ஒரு பிராந்தியத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் இந்த மாறுபாடு இருக்க வாய்ப்பு உண்டுதான். எனினும் இந்தப் பகுதிகளில் கலெக்டர்கள், ஐரோப்பிய உதவியாளர்கள் எல்லாம் அடிக்கடி இடம் மாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆய்வு நடத்தச் சொல்லப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு அந்த பிராந்தியம்பற்றி எதுவும் தெரிந்திருக்காது. எனவேதான் இந்தத் தரவுகள் இப்படி மாறுபட்டவையாக இருக்கின்றன. மேலும் வேறு பல காரணங்களும் இதற்கு இருக்கக்கூடும். வேறு நெருக்கடி மிகுந்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம். அல்லது இதுபோன்று தொடர்ந்து தரவுகளைத் தேடித் தொகுக்க மனரீதியாகத் தயாராக இருந்திருக்கமாட்டார்கள். எனவே, இந்த மாவட்டங்களில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் தரமும் வீச்சும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருக்கின்றன.
பாதி மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தாலுகா வாரியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பர்கானாக்கள் (pargana) வாரியாகத் தொகுக்கப்பட்டிருந்தன. பிற மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் ஒட்டு மொத்த மாவட்டத்தையும் மொத்தமாக உள்ளடக்கியதாக இருந்தன. விசாகப்பட்டிணம், மசூலிப்பட்டிணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசாங்கம் கொடுத்த படிவத்தில் இடம்பெறாத சத்திரிய அல்லது ராஜா மாணவர்கள் என்ற ஒரு பிரிவை பிராமணர் மற்றும் வைசியப் பிரிவுக்கு இடையில் அந்தப் பகுதி கலெக்டர்கள் சேர்த்திருந்தனர். பெல்லாரி, கடப்பா, குண்டூர், ராஜ முந்திரி பகுதிகளின் கலெக்டர்கள் ஆய்வுத் தரவுகளோடு மிக விரிவான விளக்க உரைகளையும் அனுப்பியிருந்தனர். திருநெல்வேலி, விசாகப்பட்டிணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் கலெக்டர்கள், தரவுகளே பேசட்டும் என்று அதை மட்டுமே அனுப்பியிருந்தனர்.
சில கலெக்டர்கள் அவர்களுடைய மாவட்டத்தில் உயர் கல்வி வகுப்பில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களின் பெயரைக்கூட எழுதியிருந்தனர். ராஜ முந்திரி மாவட்டக் கலெக்டர் தெலுங்குப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட 43 புத்தகங்களின் பெயரை விரிவாக எழுதியிருந்தார். உயர் கல்வி தரப்பட்ட பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள், பாரசீக, அரபு மொழி கற்றுத் தரப்பட்ட பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அட்டவணை 1
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பற்றிய விவரங்கள்
கல்வி தொடர்பான தரவுகளுடன் சேர்த்து மக்கள் தொகையையும் சில கலெக்டர்கள் தந்திருந்தனர். மாறுபட்ட அந்த எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றுள்ளன.
அட்டவணை -1 மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, உயர் கல்வி மையங்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தத் தரவுகள் கலெக்டர்களின் ஆய்வறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. கஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளின் கலெக்டர்கள் தாம் அனுப்பும் தரவுகள் முழுமையானவை அல்ல என்ற குறிப்பையும் சேர்த்தே அனுப்பியிருக்கிறார்கள். ஜமீன்தார் முறை முழுவதுமாகவோ பகுதி அளவோ இருக்கும் மாவட்டங்களுக்கும் இந்த விஷயம் பொருந்தக்கூடும்.
தனியார் கல்வி அல்லது வீட்டில் இருந்து கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையையும் இரண்டு கலெக்டர்கள் சேகரித்து அனுப்பியிருக்கிறார்கள். மலபார் கலெக்டர் இறையியல், சட்டம், வான சாஸ்திரம், தத்துவம், தர்மம், மருத்துவ அறிவியல் போன்ற பாடங்களைத் தனிப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 1826 பிப்ரவரியில் எழுதிய கடிதத்தில் மதராஸ் கலெக்டர், 26,963 மாணவர்கள் வீடுகளில் சிறப்புப் பயிற்சி பெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தனிப்பட்ட கல்வி பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
கலெக்டர்கள் அனுப்பிய ஆய்வுத் தகவல்கள் மதராஸ் பிரஸிடென்ஸி அரசால் 10, மார்ச், 1826-ல் பரிசீலிக்கப்பட்டன. கவர்னரான சர் தாமஸ் மன்ரோவின் கூற்றுப்படி, 'பள்ளிக் கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் பிரஸிடென்ஸியில் இருக்கும் 5-10 வயதிலான ஆண் குழந்தைகளில் கால்பங்குக்கு சற்று அதிகமானவர்கள் கல்வி பெற்றிருக்கிறார்கள். வீடுகளில் கல்வி பெறுபவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்த ஆண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குக் கல்வி கிடைத்ததாகச் சொல்லலாம்’.
மிகவும் சுவாரசியமானதும் சரித்திரரீதியாக மிகவும் முக்கியமானதுமான தகவல் சாதிவாரியான பகுப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. ஆண் குழந்தைகள் தொடர்பாக மட்டுமல்ல பள்ளிக் கல்வி பெறும் பெண் குழந்தைகளின் சாதி விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என ஐந்து முக்கிய மொழிகள் பேசப்படும் இடங்களில் இந்த சாதி வாரியான தொகுப்பு மிகவும் ஆர்வத்தைத் துண்டுவதாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறது. மதராஸ் பிரஸிடென்ஸி அன்றும் 19-ம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
அட்டவணை இரண்டு இந்த ஐந்து மொழிகள் பேசப்படும் பகுதிகளில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி பெற்ற ஆண் குழந்தைகளின் சாதி வாரியான எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது.
அட்டவணை - 2
சாதிவாரியான ஆண் மாணவர்களின் எண்ணிக்கை
பழங்கால இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகட்டத்திலும்கூடக் கல்வி என்பது பெரிதும் மேல் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்ததாகவே நம்பப்படுகிறது. மதராஸ் பிரஸிடென்ஸியில் 95% பேர் இந்துக்களே. அவர்களில் கல்வியானது பிராமணர், சத்ரியர், வைசியர் என்ற இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
எனினும் அட்டவணை இரண்டில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களைப் பார்த்தால் நிலைமை முற்றிலும் நேர்மாறாக இருப்பது தெரியவரும். அதிலும் தமிழ் பேசப்படும் பகுதிகளில் கல்வி கற்ற மாணவர்களில் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை தென் ஆற்காடில் வெறும் 13% மட்டுமே. மதராஸில் 23% மட்டுமே. தென் ஆற்காடு, செங்கல்பட்டில் கல்வி கற்ற முஸ்லிம்களின் சதவிகிதம் 3% க்கும் குறைவு. சேலத்தில் 10%. ஆனால், சேலம், திருநெல்வேலியில் இருந்த பள்ளிகளில் கல்வி பெற்றவர்களில் சூத்திர சாதி மாணவர்களின் எண்ணிக்கை 70%. தென் ஆற்காட்டில் அது 84%-க்கும் அதிகம்.
இந்த அட்டவணையை மேலும் எளிதில் புரிந்துகொள்ள கல்வி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை சதவிகிதமாக ஆக்கி அட்டவணை மூன்றில் தந்திருக்கிறேன்.
அட்டவணை 3
ஆண் மாணவர்களின் சாதிவாரியான சதவிகிதம்
மலையாளம் பேசப்படும் மலபாரில் பள்ளியில் படிக்கும் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை 20%-க்கும் கீழ் மட்டுமே. அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 27% வரை இருக்கிறது. பள்ளி மாணவர்களில் சூத்திரர் மற்றும் பிற சாதியினரின் சதவிகிதம் சுமார் 54% ஆக இருக்கிறது.
கன்னடம் அதிகமாகப் பேசப்படும் பெல்லாரியில் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை (பிராமணர்கள், வைசியர்கள் சேர்த்து) 33% ஆக இருக்கிறது. சூத்திரர்கள் மற்றும் பிற சாதி மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 63%.
ஒரிய மொழி பேசப்படும் கஞ்சம் பகுதியிலும் நிலைமை இதுபோன்றதுதான். கல்வி பெற்ற மாணவர்களில் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை 35.6%. சூத்திர, பிற சாதியினரின் எண்ணிக்கை 63.5%.
தெலுங்கு பேசப்படும் பகுதிகளில்தான் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பிராமண மாணவர்களின் எண்ணிக்கை கடப்பாவில் 24%. விசாகப்பட்டணத்தில் 46%. வைசியர்களின் எண்ணிக்கை விசாகப்பட்டணத்தில் 10.5%. கடப்பாவில் 29%. முஸ்லிம்களின் எண்ணிக்கை விசாகப்பட்டணத்தில் 1%. நெல்லூரில் 8%. சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் எண்ணிக்கை குண்டூரில் 35%. கடப்பா மற்றும் விசாகப்பட்டணத்தில் 41%.