அத்தியாயம் 6: பயிற்று மொழி வாரியாக பள்ளிகளின் பகுப்பு
By தரம்பால் - தமிழில்: B.R. மகாதேவன் | Published On : 27th October 2015 10:00 AM | Last Updated : 26th October 2015 04:11 PM | அ+அ அ- |

சில மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் பயிற்று மொழி என்ன என்பதையும் தெரிவிக்கின்றன. எத்தனை பள்ளிகளில் பாரசீகம் அல்லது ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டன என்பதையும் அவை தெரிவிக்கின்றன. ஆங்கில வழியில் கற்றுத் தரும் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் பத்து மட்டுமே. அதில் அதிகபட்சமாக ஏழு பள்ளிகள் வட ஆற்காட்டில் இருந்திருக்கின்றன. பாரசீக மொழி வழிப் பள்ளிகள் நெல்லூரில் 50, வட ஆற்காட்டில் 40, மசூலிப்பட்டணத்தில் 19, கோவையில் 10, ராஜமுந்திரியில் 5 இருந்திருக்கின்றன.
வட ஆற்காடு (1), கோவையில் (5) பள்ளிகளில் கிரந்தம் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. ஹிந்தவீ (ஒருவகையான இந்துஸ்தானி மொழி) வடஆற்காட்டில் (16) கோவையில் (15) பள்ளிகளில் கற்றுத்தரப்பட்டது. பெல்லாரியில் 23 மராத்தி வழிப் பள்ளிகள் இருந்திருக்கின்றன. வட ஆற்காட்டில் 365 தமிழ் பள்ளிகள், 201 தெலுங்கு பள்ளிகள் இருந்திருக்கின்றன. பெல்லாரியிலும் அதே அளவுக்கு (201) தெலுங்கு, கன்னட வழிப் பள்ளிகள் இருந்தன. அட்டவணை 4 இந்தத் தரவுகளை மேலும் விரிவாகக் காட்டுகின்றன.
அட்டவணை 4
பயிற்று மொழி
அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் அந்தக் குறிப்பிட்டவகைப் பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இந்தத் தகவல் எல்லா மாவட்டங்களுக்கும் கிடைத்திருக்கவில்லை.
பள்ளியில் சேர்க்கப்படும் வயது, வகுப்பு நேரங்கள் போன்றவை
முன்பே சொன்னதுபோல், இந்தத் தரவுகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. குழந்தைகள் (பெண் குழந்தைகள் உட்பட) பள்ளியில் சேர்க்கப்பட்ட வயதைப் பெரும்பாலான கலெக்டர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சாதாரணமாக ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாம் வயது, ஐந்தாம் மாதம், ஐந்தாம் தேதி மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாகக் கருதப்பட்டு அந்த தேதியில் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக ராஜமுந்திரி கலெக்டர் குறிப்பிட்டிருக்கிறார். கடப்பா கலெக்டர், பிராமணக் குழந்தைகள் ஐந்திலிருந்து ஆறு வயதுக்குள்ளாகவும் சூத்திரக் குழந்தைகள் ஆறில் இருந்து எட்டுக்குள்ளாகவும் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பள்ளியில் மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் மட்டுமே படித்ததாக கடப்பா கலெக்டர் குறிப்பிட்டிருக்கிறார். நெல்லூர் சேலம் பகுதிகளில் மூன்றில் இருந்து ஐந்து அல்லது ஆறு வருடங்கள் படித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறு கலெக்டர்கள், ஐந்தில் இருந்து 15 வருடங்கள் கல்விக் காலம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில கலெக்டர்கள் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் கல்வி குறித்து பெரிய மரியாதை எதுவும் கொண்டிருக்கவில்லை. சிலர் அந்தக் கல்வி பயனுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மதராஸ் கலெக்டர் கூறியிருப்பது: ‘மாணவர்கள் 13 வயதை அடைவதற்கு முன்பாகவே பல்வேறு துறைகளில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் கல்வி அபாரமாகவே இருக்கிறது’.
கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் பள்ளிகள் அதிக நேரம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடுகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாக ஓரிரு (சிறு நீர் கழிக்க) இடைவேளைகள் இருந்திருக்கின்றன. மாலை சூரிய அஸ்தமனம் வரை அல்லது அதைத் தாண்டியும் வகுப்புகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாகப் பல்வேறு கலெக்டர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் அட்டவணை ஐந்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அட்டவணை 5
பள்ளியில் சேர்க்கும் வயது, தினசரி கால அட்டவணை, படித்த வருடங்கள்
பள்ளிகள் செயல்படும்விதம், கற்றுக் கொடுக்கும் முறைகள், கற்றுத் தரப்பட்ட பாடங்கள் போன்றவை ஃப்ரா பவுலினோ ட பர்த்தால்மோ (கி.பி.1796) மற்றும் அலெக்சாண்டர் வாக்கர் (1820) எழுதிய ஆய்வு அறிக்கையில் மிக விரிவாக இடம்பெற்றிருக்கின்றன.
பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள்
இந்தியப் பாரம்பரியப் பள்ளிகளில் எழுத, வாசிக்க கற்றுத் தந்ததோடு கணிதமும் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. ராஜ முந்திரியிலும் பெல்லாரியிலும் கீழ்க்கண்ட பாட நூல்கள் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அது இந்தப் பாரம்பரியப் பள்ளிகளில் என்னவிதமான கல்வி தரப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள நன்கு உதவும்.
பெல்லாரி மாவட்டப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள்
அதிகம் பயன்படுத்தப்பட்டவை
1. ராமாயணம். 2. மகாபாரதம். 3. பகவத் கீதை
பாட்டாளிகளின் குழந்தைகள் படித்த நூல்கள்
நாகலிங்காயன கதா
விஸ்வகர்ம புராணம்
கமலேஷ்வர கலிகாமஹா கதா
லிங்காயத் சிறுவர்கள் படித்த நூல்கள்
1. பவ புராணம்
ராகவன் காவியம்
கிரிஜா கல்யாணம்
அம்பவ மூர்த்தா
சென்னா பசவேஸ்வர புராணம்
கெளரி குலா
எளிய இலக்கண வாசிப்புக்கான நூல்கள்
பஞ்ச தந்திரா
2. பாதாள பஞ்சவன் சதி
3. பங்கி சுபுக்தஹாலே
4. மகாதரங்கிணி
பயன்படுத்தப்பட்ட அகராதிகள் இலக்கண நூல்கள்
1. நிகண்டு
2. உமரா
3. சப்தமம்பரீ
4. சப்தமுனி தர்பணா
5. வியாகரணம்
6. ஆந்தரதீபிகா
7. ஆந்தர நாம சங்க்ரஹா போன்றவை.
ராஜமுந்திரி பகுதியில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களின் பெயர் பட்டியல்
1. பால ராமாயணம்
2. ருக்மணி கல்யாணம்
3. பாரிஜாத புராணம்
4. மூல ராமாயணம்
5. ராமாயணம்
6. தனசாரதி சதகம்
7. கிருஷ்ண சதகம்
8. சுமதி சதகம்
9. ஜானகி சதகம்
10. ப்ரசன்னாகர சதகம்
11. ராமதாரக சதகம்
12. பாஸ்கர சதகம்.
13.விபீஷண சதகம்
14. பீமலிங்கேஸ்வர சதகம்
15. சூரிய நாராயண சதகம்
16. நாராயண சதகம்
17. பிரகலாத சரித்திரம்
18. வசு சரித்திரம்
19. மனோ சரித்திரம்
20. சுமங்கலி சரித்திரம்
21. நள சரித்திரம்
22. வாமன சரித்திரம்
23. கணிதம்
24. பாவலூரி கணிதம்
25. பாரதம்
26. பாகவதம்
27. வேத விலாசம்
28. கிருஷ்ணலீலா விலாசம்
29. ரதமாதவ விலாசம்
30. சப்தம ஸ்கந்தம்
31. அஸ்டம ஸ்கந்தம்
32. ரதமாதவ சம்வாதம்
33. பானுமதி பரிணயம்
34. வீரபத்ர விஜயம்
35. லீலா சவுந்தரி பரிணயம்
36. அமரம்
37. சூரதானேஸ்வரம்
38. உதயகபருவம்
39. ஆதிபர்வம்
40. கஜேந்திர மோட்சம்
41. ஆந்தர நாம சங்க்ரஹம்
42. குசேல ப்ரகஸ்யணம்
43. ரசிகாஜன மனோபரணம்.
உயர் கல்விமையங்கள்
சில கலெக்டர்கள் தமது பிராந்தியத்தில் உயர் கல்வி மையம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எஞ்சியோர் தமது பிராந்தியங்களில் 1094 மையங்கள் உயர் கல்விக்காக இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உயர் கல்வி மையங்களை கல்லூரி என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் (அரசுப் படிவத்தில் அப்படி வகைப்படுத்தி இருந்ததற்கு ஏற்ப).
இத்தகைய கல்லூரிகள் ராஜ முந்திரி பகுதியில்தான் மிக அதிக அளவில் அதாவது 279 கல்லூரிகள் இருந்திருக்கின்றன. அதில் 1454 மாணவர்கள் கற்றிருக்கிறார்கள். அடுத்ததாக கோயம்புத்தூரில் 173 கல்லூரிகள் (724 மாணவர்கள்), குண்டூர் 171 கல்லூரிகள் (939 மாணவர்கள்), தஞ்சாவூர் 109 கல்லூரிகள் (769 மாணவர்கள்), நெல்லூர் 197 கல்லூரிகள், வட ஆற்காடு 69 கல்லூரிகள் (418 மாணவர்கள்), சேலம் 53 கல்லூரிகள் (324 மாணவர்கள்), செங்கல்பட்டு 51 கல்லூரிகள் (398 மாணவர்கள்), மசூலிப்பட்டிணம் 49 கல்லூரிகள் (199 மாணவர்கள்), பெல்லாரி 23 கல்லூரிகள், திருச்சினாப்பள்ளி 9 கல்லூரிகள் (131 மாணவர்கள்).
மலபாரில் ஒரு பழைய கல்வி மையம் சமுத்ரின் ராஜாவால் (Samudrin Raja) நிர்வகிக்கப்பட்டது அதில் 75 மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இதுபோன்ற கல்வி மையங்கள் இல்லாத மாவட்டங்களில் வேதம், சாஸ்த்ரம், சட்டம், வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், தர்மம் ஆகிய பிரிவுகளில் உயர் கல்வி வழங்கப்பட்டதாக அந்தப் பகுதி கலெக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவை பொதுவாக அக்ரஹாரங்களிலும் அல்லது வீடுகளிலும் தரப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற தனியாகக் கற்கப்பட்ட உயர்கல்வி பற்றிய விவரங்கள் பிற பகுதிகளிலும் அதுபோலவே இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அட்டவணை ஆறில் இந்தத் தகவல்கள் மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.
அட்டவணை 6
பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகளில் பிராமண மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், உயர் கல்வி என்பது சிறப்பு நிபுணத்துவம் சார்ந்ததாக இருந்ததால் அது பெரிதும் பிராமணர்களுக்கு மட்டுமேயானதாக இருந்திருக்கிறது. அதிலும் இறையியல், தர்மம், தத்துவம், பெருமளவுக்கு சட்டம் போன்றவையெல்லாம் பிராமணர்களுக்கு மட்டுமேயானதாகவே இருந்திருக்கின்றன. ஆனால், வானசாஸ்திரம், மருத்துவம் போன்றவை எல்லா சாதியினராலும் கற்கப்பட்டிருக்கின்றன.
மலபாரில் கிடைத்த தரவில் இருந்து இது தெளிவாகிறது. வான சாஸ்திரம் படித்த 808 பேரில் 78 பேர் மட்டுமே பிராமணர்கள். மருத்துவம் படித்த 194 பேரில் 31 பேர் மட்டுமே பிராமணர்கள். ஆச்சரியப்படும்வகையில் ராஜமுதிரியில் உயர் கல்வி மையத்தில் இருந்த மாணவர்களில் ஐந்து பேர் சூத்திர பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மதராஸ் பிரஸிடென்ஸியின் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றவற்றைச் செய்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் சிகை அலங்காரத் தொழில் செய்பவர்கள்தான் அறுவை சிகிச்சையில் நிபுணர்களாக இருந்தனர் என்று பிரிட்டிஷ் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மலபாரில் இருந்த கல்வி மையத்துக்கு நிதி உதவி அளித்த சமுத்திர ராஜாவின் குறிப்புகள் நீங்கலாக குண்டூர், கடப்பா, மசூலிப்பட்டணம், மதுரா, மதராஸ் பிரஸிடென்ஸி போன்ற பகுதிகளின் கலெக்டர்களும் உயர் கல்வி பற்றிப் பல தரவுகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். மதராஸ் கலெக்டரைப் பொறுத்தவரையில் வான சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை பிராமண ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கு இலவசமாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பெற்றோரின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை தரப்பட்டிருக்கிறது. மதுரா கலெக்டர் தனது அறிக்கையில்:
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரங்களில் வெகு முந்தைய காலத்திலிருந்தே வேதம், புராணம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவென ஆண்டுக்கு 20 முதல் 50 பணம் வருவாய் வரக்கூடிய அல்லது சில இடங்களில் 100 பணம் வருவாய் வரக்கூடிய அளவில் நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தன. படிக்க விருப்பம் தெரிவித்து வரும் அனைவருக்குமே இலவசமாகவே கற்றுத் தந்திருக்கிறார்கள்.
மசூலிப்பட்டிணம் கலெக்டர் கூட இதுபோன்றதொரு கணிப்பை முன்வைத்திருக்கிறார்: வைதிக பிராமணர்களின் குழந்தைகள் நன்கு எழுதக் கற்றுக் கொண்டதும் வேதம், சாஸ்திரம் கற்றுக் கொடுக்கும் கல்லூரிக்கு நேராகக் கொண்டு செல்லப்பட்டனர். வேதங்கள்தான் இந்து சாஸ்திரங்கள் அனைத்தின் தாய் என்று கருதப்படுகிறது. சாஸ்திரம் என்பது அனைத்து அறிவியல் துறைகளையும் குறிக்கும் வார்த்தையாகும். சட்டம், வான சாஸ்திரம், இறையியல் போன்ற அவையெல்லாம் சமஸ்கிருத மொழியில் இருந்தன. இந்தப் பாடங்கள் எல்லாம் பிராமணர்களால் குறிப்பாக அக்ரஹாரத் தலைவர், மானியம், ரோஸூனா (Rozunahs) போன்ற சலுகைகளைப் பெற்ற பிராமணர்களால் மட்டுமே கற்றுத் தரப்பட்டன. அவர்களின் முக்கிய பணி மத சடங்கு ஆசாரங்களை எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதுதான்.
பெரும்பாலான கிராமங்கள், டவுன்களில் பிராமணர்கள் தமது குழந்தைகளுக்கு வேதம், சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறார்கள். கல்லூரிகளிலோ அவரவர் வீடுகளிலோ இந்தக் கல்வி தரப்பட்டிருக்கிறது.
மிகவும் விரிவான தகவல்கள் கடப்பா, குண்டூர் கலெக்டர்களிடமிருந்து கிடைத்திருக்கின்றன. கடப்பா கலெக்டர் சொல்கிறார் :
பொது நிதி பெற்று எந்தக் கல்லூரியோ பள்ளியோ இயங்கவில்லை. எனினும் பிராமணர்கள் மத்தியில் கல்வியானது இலவசமாகவே தரப்பட்டிருக்கிறது; அதிலும் பெரும்பாலான பிராமண ஏழைகள் தமது முழுக் கல்வியையும் இலவசமாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட்டேயாகவேண்டும். 10-16 வயது பிராமணக் குழந்தைக்கு கல்வி கற்கப் பொருளாதாரரீதியாக வழியில்லையென்றால் அந்தக் குழந்தை தன் வீட்டை விட்டு அவருடைய சாதியைச் சேர்ந்த வேறொருவருடைய வீட்டுக்குச் சென்று தங்கியிருந்து கல்வி கற்கிறது. அந்தக் குழந்தைகளிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்ப்பதில்லை. மாணவர்களும் அந்த ஆசிரியரிடமிருந்து கல்வி நீங்கலாக வேறு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. ஏனென்றால், அந்த ஆசிரியரும் வறுமையில் வாடுபவராகவே இருப்பார். அவரால் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு உடையும் உணவும் கொடுக்க முடிவதாக இருந்தால் நிறைய மாணவர்கள் அவரைத் தேடி வந்துவிடுவார்கள். அவரால் அப்போதும் அதைச் சமாளிக்க முடியாமல் போய்விடும்.
தனது சொந்த கிராமத்தில் கல்வி பெற முடியாமல் வறுமையில் வாடும் இந்தச் சிறுவர்கள் முற்றிலும் அந்நிய கிராமம் ஒன்றில் எப்படிப் போய் தங்கிப் படிக்க முடிகிறது. அதுவும் பல வருடங்கள் சொந்த வீட்டுக்குத் திரும்பாமலேயே பத்திலிருந்து நூறு கி.மீ தொலைவுக்குச் சென்று எப்படித் தங்கிப் படிக்க முடிகிறது என்ற கேள்வி நிச்சயம் வருவாய்த்துறைக்கு இருக்கும். அந்தச் சிறுவர்களுடைய தினசரித் தேவைகள் முழுவதுமே தானம் மூலமாகவே சமாளிக்கப்படுகிறது. மேலே சொல்லியிருக்கும் காரணங்களினால் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரிடமிருந்து அல்ல; பொதுவாக அவருடைய கிராமத்தில் இருக்கும் நபர்களின் உதவியின் மூலமாக நடந்தேறுகிறது. தொலை தூர கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு பிராமணரின் வீட்டு வாசலுக்குச் சென்று உணவை யாசகம் கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்குத் தானம் கொடுப்பது மிகுந்த மரியாதையுடனும் கவுரவத்துடனும் பரிவுடனும் செய்யப்படுகிறது. எந்தவித படோடோபமும் இன்றி மிக எளிய முறையில் இந்த தானம் தரப்படுகின்றன. அது அதன் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. இந்த ஏழைகளுக்கு இப்படியான பரோபகார உதவி மட்டும் கிடைக்காதிருந்தால் அவர்கள் கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேறவே முடிந்திருக்காது. இந்த வழிமுறையை அரசு தாராள மனதுடன் தாயன்புடன் கவனித்து முழுமைப்படுத்தினாலே போதுமானது.
‘இறையியல், சட்டம், வான சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்றுத் தர கல்லூரிகள் இல்லை’ என்றாலும் அவை மாணவர்களுக்கு தனியாகக் கற்றுத்தரப்பட்டிருக்கின்றன என்று குண்டூர் கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சாஸ்திரங்கள் எல்லாம் அதைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களால் தனிப்பட்ட முறையில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்விக்கு அவர்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஜமீன்தார்கள் மற்றும் முந்தைய மன்னர்கள் மூலமாக இந்த ஆசிரியர்களின் முன்னோர்களுக்கு வேறு பல காரணங்களுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இலவசமாக மற்றவர்களுக்குக் கல்வி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்படியான கல்வி தருவதற்கு மட்டுமே என்று எந்த ஆசிரியருக்கும் நேரடியாக எந்த உள்ளூர் மன்னராலும் பணமோ நிலமோ தரப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாகச் சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளில் இருந்து 171 இடங்களில் இறையியல், சட்டம், வான சாஸ்திரம் போன்றவை தனிப்பட்ட முறையில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. கல்வி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 939. இந்தக் கல்வி பெற்ற மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் அவர்களுடைய கிராமத்திலேயே ஆசிரியர்கள் கிடைத்திருக்கவில்லை. எனவேதான் வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். சில குழந்தைகளின் பெற்றோரால் தேவையான பணத்தைத் தர முடிந்திருக்கும். அதாவது மாதத்துக்கு 3 ரூபாய் . ஆனால், அந்தப் பணம் உணவு, உடைக்கே சரியாகிவிடும். அந்தப் பணம் கூடத் தர முடியாமல் இருக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள்தான் ஆசிரியரின் கிராமத்தினரின் வீடுகளில் இருந்து தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினர் என கிராமத்தினரும் அதை மனமுவந்து செய்வார்கள்.
இந்த கிராமங்களில் கற்றுத் தரப்படும் விஷயங்களுக்கும் மேலாக இறையியல் போன்றவற்றில் யாரேனும் கற்றுக்கொள்ள விரும்பினால் பனாரஸ், நவத்வீப் போன்ற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களில் இருக்கும் பண்டிதர்களிடம் இருந்து அவற்றைக் கற்றுக்கொள்வார்கள்.