1908 மார்ச் 9ம்தேதி,
திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில், தைப்பூச மண்டபத்தில் வ.உ.சி பேசப்போகிறார் என்று அறிந்த முத்துராசா முதலிலேயே மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அவனருகே நின்று எம்பி எம்பிப் பார்த்துக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி நாயுடு என்பதும், வ.உ.சி பேசுவதை, நகலெடுக்க மண்டபத்தின் மேற்குக்கரையில் சிரமத்துடன் முயன்று, இயலாமல் கைவிட்ட மனிதர் இன்ஸ்பெக்டர் வீரராகவ ஐயர் என்பதும் அவனுக்கு இருட்டில் தெரியாமல் போனது. விடுதலை வீரர் பிபின் சந்திரப் பாலுக்கு மரியாதை செய்ய கூட்டப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பிள்ளை என்ன பேசினார் என்பது பலருக்குக் கேட்கவில்லை. போலீஸ் அவர் பேச்சை எவிடென்ஸாக ஒரு பதிவும் செய்ய இயலவில்லை. ஆனால் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் அவரும் சிவாவும் ஈடுபட்டனர் என்று வழக்குப் பதிவு செய்தது. 10ம்தேதி வ.உ.சியின் பிறந்த நாளாக இருக்க, அதற்கு இருநாட்களில் அவரையும் சிவாவையும் கைது செய்தது. தூத்துக்குடி ஆத்திரமடைந்தது.
மார்ச் 15, 1908ல் ஆண்டர்ஸன் தூத்துக்குடியில் நுழைந்தபோது , சுதேசிகளின் ரகசியக் கூட்டங்கள், பகிரங்க மேடைப்பேச்சுகள் என அங்குமிங்குமாக சிறு சலசலப்புகள் கேட்டுக்கொண்டிருந்தன. வ.உ.சி சிறைப்படுத்தப்பட்டபின், திருநெல்வேலி கொதித்திருந்தது. ஆண்டர்ஸன் தனித்து இயங்கினான். அவனுடன் இருபது ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருந்தனர். உயர்மட்ட அதிகாரிகளுக்கு இணையாக, போலீஸுக்கு ஆணையிட அவனுக்கு விசேஷ உரிமை கவர்னரால் வழங்கப்பட்டிருந்தது.
‘முதலில், ஆங்கிலேய குடும்பங்களைக் காப்பாற்றவேண்டும்’ என்றான் ஆண்டர்ஸன். ‘சுதேசிகளும், வியாபாரிகளும் அடித்துக்கொண்டு சாகட்டும். ஆங்கிலேயர், அரசு இயந்திரங்கள், அவற்றின் சொத்து -இவை பாதுகாக்கப்படவேண்டும். அதற்காக ‘லோக்கல்-கள்’ எத்தனைபேர் செத்தாலும் பரவாயில்லை’. பழுப்பர்களாலான காவல் படை அதை அமைதியாகக் கேட்டு, செயலாற்றியது.
அடுத்தநாள், விக்டோரியா மகளிர் பள்ளியில் ஆண்டர்ஸன் குதிரைமீது வந்து இறங்கினான், பள்ளியைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டது.. ‘ஆண்டர்ஸன்’ என்று பதறியபடி ஆங்கிலேயத் தலைமை ஆசிரியை ஓடிவந்தார்.
‘சுதேசிகள் நாடெங்கும் கலவரம் நடத்தப்போகிறார்களாமே? இருநாட்களுக்குப் பின் டுட்டிக்கோரின் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மாறிவிடும் என்கிறார்களே? உண்மையா?’ என்றபடி ஒரு கசங்கிய தாளை நீட்டினார்.
‘இங்கிலாந்துப் பிரஜைகளே! உங்கள் நாட்டுக்கு மூட்டை முடிச்சுகளோடு ஓடிவிடுங்கள். இரு வாரங்களில் மதறாஸிலிருந்தும், பம்பாய், கராச்சி, கல்கத்தாவிலிருந்தும் லண்டன் செல்லும் கப்பல்களில் கோமாமிசம் புசிப்பவர்கள் இடும் ஓலங்கள் இந்நாட்டின் கரைகளில் அலைகளோடு கேட்கும். இது மாகாளியின் மீது சத்யம்’
‘ஸம் சுதேசி’ என்றான் ஆண்டர்ஸன் முணுமுணுத்தபடி.
கடிதத்தை வாசித்த தூத்துக்குடி உளவுத்துறை அதிகாரி ‘இது நீலகண்டன் குழுவின் வேலையாகத்தான் இருக்கும். அந்த வி.ஓஸி பிள்ளை, சிவா கேஸு வேற இவங்களுக்கு தீ மூட்டிவிடுது பாருங்க’ என்றார்.
‘அனைத்து சுதேசி ஆதரவாளர்களையும் பிடிச்சு உள்ள போடுங்க. எந்த ஜாதி, எந்த பதவின்னு பாக்கவேண்டாம்.’ ஆண்டர்ஸன் சொல்லச்சொல்ல, போலீஸ் அதிகாரி தேவசகாயம் வியர்த்தார்.
‘தூத்துக்குடியில பெரிய லாயர், பெரும் செல்வந்தர்கள், வணிகர்கள், சில ஐயருமாரு சுதேசின்னு இருக்காவ, எப்படி பிடிச்சு போட? மாடசாமிப் பிள்ளயத் தொடமுடியுமாவே? இந்த வெள்ளக்காரனுக்கு எவனாச்சும் எடுத்துச் சொல்லுங்கடே’
‘ஸப் -ஜெயில்ல இரண்டு அறைகள்ல அடைச்சு வைங்க. ஒரு டாக்குமெண்ட்டும் வேண்டாம். ஜெயிலர், போலீஸ் அதிகாரிகள்கிட்ட சொல்லுங்க. கேக்கலைன்னா, எங்கிட்ட பேசச்சொல்லுங்க’ ஆண்டர்ஸனின் கை இடுப்பில் இருந்த வெப்லியைத் தடவியது.
16 மார்ச்: தூத்துக்குடி, மெய்ஞ்ஞானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரங்களில் இருந்த பள்ளிக்கூடங்களில், ரகசியமாக ஆங்கிலேய குடும்பங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்கு பலத்த காவல் போடப்பட்டது. ஆங்கிலேயர் வீடுகளுக்கு அருகே இருந்த வீதிகளில் வசித்த இந்தியர்கள், பாதுகாப்பிற்காக , பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் சொந்தக்காரர்களின் வீடுகளிலும், கோவில்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
நெல்லை மாவட்டமெங்கும் சுதேசிகளின் வீடுகளிலும், சுதேசிகளெனச் சந்தேகித்தவர்களின் வீடுகளிலும், போலீஸ் புகுந்து தேடியது. அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தெருச்சந்திகளில் கூட்டம் கூடுவது தடைசெய்யப்பட்டு, ஊர்க்கோடிகளில் இருக்கும் மண்டபங்கள், சத்திரங்களில் மக்கள் கூடிப்பேசுவது கண்காணிக்கப்பட்டது. விளக்கம் அளிக்கப்படாது, கொத்துக்கொத்தாக ஆண்கள் சிறைபிடிக்கப்பட்டு, வெகு தொலைவுகளில் சென்று வைக்கப்பட்டனர்.
17 மார்ச் 1908 : திருநெல்வேலியில் மக்கள் கூட்டமாக சாலைகளில் குவிந்தனர். வ.உ.சி, சிவாவை சிறை பிடித்ததற்கும், அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருப்பதற்கும் எதிராக பெரும் கலவரம் வெடிக்கக் காத்திருந்தது.
திருநெல்வேலியில் ‘கண்டதும் அடிக்க’ கலெக்டர் விஞ்ச் துரை உத்தரவிட்டார். ஆண்டர்ஸனின் படை, இதற்கு இணையாக, மிக வன்மையாக இயங்கியது. அடி தாங்காமல் இறந்தவர்களும், மயங்கிக் கிடந்தவர்களும் தாமிரபரணியில் வீசப்பட்டனர். சிலர், ஆற்றங்கரையில் அவசரமாக சிதைகள் உருவாக்கப்பட்டு எரிக்கப்பட்டனர்.
ஆண்டர்சனை, ஆஷ்க்கும், விஞ்ச்சுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாமல் அவனை அவன் போக்கிற்கு விட்டுவிட்டனர். சுதேசிகளின் ரகசியக் கூட்டம் கூடும் இடங்களையும், அவர்களுக்கு இடம், உணவு அளிக்கும் மனிதர்களையும் ஆண்டர்சன் கவனித்துக் கொண்டான். அரசுரீதியாக எடுக்கப்படும் முடிவுகளை விஞ்ச் கவனித்துக் கொண்டார். ஒரு புனிதப் பெரும் தீ, பரவுமுன் பூட்ஸ் கால்களால் மிதித்து அணைக்கப்பட்டது.
‘ஆனி, மீட் மிஸ்டர் ஆண்டர்ஸன்’ ஆசிரியைகளில் ஒருவர் ஆண்டர்சனை தேவாலயத்தில், ஆனிக்கு அறிமுகம் செய்துவித்தார். பெரும் கலகம் ஒன்றிலிருந்து தங்களைக் காத்த தெய்வமாகவே, அங்கிருந்த ஆங்கிலேயக் குடும்பங்கள் நம்பின. அவன் திருமணம் ஆகாதவன் என்பது சிலருக்கு தங்கள் பெண்களை அவன் முன் ஒவ்வொரு ஞாயிறன்றும் சர்ச்சில் நிறுத்துவதென்ற முடிவினைக் கொண்டு வந்தது.
‘ஹலோ' என்றவன் அவளை முதலில் அதிகம் கவனிக்கவில்லை. அன்று இரவு கூடாரத்தில் புகைத்துக்கொண்டிருந்தபோது, சட்டென ஒரு வெறுமை அவனைச் சூழ்ந்தது. ‘ஒவ்வொரு இரவும் பைபிளை வாசி’ என்ற வார்த்தைகளில் வெறுமே சிரித்து முன்சென்றவன், அன்று இரவு, மண்ணெண்ணெய் விளக்கொளியில் , பைபிளை எடுத்து மனம்போன பக்கத்தைப் புரட்டினான்.
‘பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள்.’ எரேமியா 29 : 6
ஆனியின் முகம் ஏனோ நினவில் வந்தது. இதுவரை இல்லாத ஏதோவொரு உணர்வு அவனுள் ஊற்றெடுத்தது. ‘இது காமமல்ல’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். எனக்கு மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையில்லை. ஆனாலும், அவளில் ஒரு மென்மையான தெய்வீகம் தெரிகிறது. கேடுகெட்ட பழுப்பர்கள் மத்தியில் கரையும் எனது வாழ்விலும் ஒரு அர்த்தம் வரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
மன உளைச்சல் வரும்போதெல்லாம், ஆண்டர்சன் அதனை எழுதி எழுதிக் கரைப்பான். அதன்பின் எழுதியதை நிதானமாக வாசித்து, அதில் தொக்கி நிற்கும் உணர்வுகளைத் தட்டிவிட்டு, சவாலை மட்டும் மீண்டும் எழுதுவான். அதன் காரணங்களையும், தீர்வுகளையும் ஆராய்ந்து திட்டமிடுவான். எழுதியதை எரித்துவிடுவான். இத்தனை வருடங்களாக மிகச் சிறப்பாக அது வெற்றியைத் தந்திருக்கிறது.
ஆண்டர்ஸன் எழுதத் தொடங்கினான். இருமணி நேரம் கழித்து , தீர்வை எழுதினான் ‘ஆனியை மணந்துகொள்ளப்போகிறேன். அதன்பின் இங்கிலாந்து சென்று செட்டில் ஆகவேண்டும். முதற்படியாக கன்னிங்க்ஹாம்மிடம் இருநாட்களில் தொடர்பு கொள்ளவேண்டும்.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.