அத்தியாயம் 27

அனைவரும் நிலைகுத்திப் போயிருக்க, முதலில் லிண்டா சுதாரித்தாள்.
அத்தியாயம் 27

அனைவரும் நிலைகுத்திப் போயிருக்க, முதலில் லிண்டா சுதாரித்தாள்.

‘அப்ப..அப்ப நீங்க..’

‘எனக்கு எத்தனையோ வருசமா சந்தேகம் இருந்துச்சு. எங்கம்மா சொல்லியிருக்கு… அப்பா ஒரு தர்மாஸ்பத்திரியில வேலையில இருந்தாருன்னு... அவரை  வாரம் ஒருதடவைதான் பாத்திருக்கேன். அவர் வீட்டுல இருந்த பாத்திரம் பண்டமெல்லாம் அடகு வச்சு ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்கறேன், காயத்துக்கு துணி வாங்கறேன்ன்னு என்னமோ சொல்லுவாரு, அம்மாகிட்ட வாக்குவாதம் நடக்கும். அப்ப ஒண்ணும் புரியா வயசுன்னு வைங்க.

திடீர்னு அவரு செத்துப்போனப்ப நான் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யுட்ல லோயர் இன்ஸ்ட்ரக்டரா இருந்தேன். ஃபாஸிட் மெஷின் மட்டும் ரீப்பேரிங்கும் பாப்பேன். அத விடுங்க. அப்பத்தான் நாகர்கோவில் போற ரோட்டுல இருக்கற அந்த இடிஞ்ச கட்டிடம் எங்களுக்குப் பாத்தியமானதுன்னும், அதுதான் இவரு வேலை பாக்கற ஆஸ்பத்திரின்னும் தெரிய வந்திச்சி. அப்பாதான் அத நடத்திட்டிருந்திருக்காருன்னும், அவருக்கு மருத்துவம் பத்தி அதிகம் தெரியாதுன்னும் அறிஞ்சப்போ ஆச்சரியமா இருந்திச்சு. போயிப் பாத்தேன். ஒரு கிழவி நர்சு, அவ மவன்னு ரெண்டு பேர் வேலைக்கு வச்சி, ரோட்டுல அடிபட்டு கிடக்கறவங்க, அவசரமா மருந்து வேணும்கிறவங்கள ஒரு மாரி சமாளிச்சு வச்சி, பெரியாஸ்பத்திரிக்கு அனுப்புவாருன்னும் தெரிஞ்சுகிட்டேன். அம்மாவுக்கு ஓரளவு தெரியும்.

எங்கிட்டிருந்து இதுக்கு காசு வருது?ன்னேன். அம்மா, ‘ஒங்க தாத்தா கொஞ்ச பணம் போட்டு வச்சிருக்காரு. அதுல ஏதோ வட்டி வருதுடே அவரு கட்டின கட்டிடம்லா இது’ன்னா. யார்ட்டயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு ‘முத்துராசா தாத்தா இருக்கார்லா? அதான் ஒங்கப்பா வழி தாத்தா’ன்னா. அவங்க வீட்டுல போய்க் கேக்கக்கூடாது, சொந்தம் கொண்டாடி நிக்ககூடாதுன்னா.

அப்ப எங்களுக்கு ரொம்ப சிரமமான வேளை, பாத்துகிடுங்க. ஆனாலும் இவங்ககிட்ட போய் கேக்கமாட்டேன்னுட்டா அம்மா. நான், ஒரு டைப் மெசினு வச்சி, கோர்ட்டு வாசல்ல மனு அடிச்சு கொடுக்க, அது இதுன்னு வேலை பாத்திட்டிருந்தேன். சரியா வரல. அப்புறம் ட்ராவல் பஸ் ஏஜென்ஸி, பொறவு சட்டுனு ரயில்வேல வேல கிடைச்சதும் சுதாரிச்சிட்டம்.

ஆனா, என் வம்சம் எதுன்னு ஏன் கேக்ககூடாதுன்னு எனக்குப் புரியல. கோபமாவும், குழப்பமாவும் இருந்தேன். நீங்க வந்தீய, மரபணு சோதனைன்னு சொன்னதும், என் மாதிரியையும் அதுல சேத்துட்டேன். நம்ம கூரியர்பய.. சத்தம்போடாம என் மாதிரியையும் அதுல போட்டு அடைச்சுட்டான்’

அறை சிறிது நேரம் மயான அமைதியுடன் இருந்தது. முத்துகுமார் செருமினான் ‘நீங்க, எங்க சொந்தக்காரவன்னு தெரியாமப் போயிட்ட, இத்தன நாளு? போட்டு… எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்லா?’

‘என்னத்தச் சொல்ல? இப்ப நிரூபணமாயிட்டுல்லா? எனக்கு என்ன வேணும்? எனக்கு சேர வேண்டிய சொத்து,  அத விடு, என் மக்கள்லாம் யாரு என்னான்னு தெரியணும்லா? எம்மவ, சென்னையில இஞ்சினீயரிங் காலேஜ்ல சேக்கச்சே சொல்லுதா ‘ஏம்ப்பா, மத்தவங்களுக்கெல்லாம் இங்கிட்டு அத்த இருக்கா, சித்தி இருக்கா, தாத்தா இருக்காங்காளுவோ நாமட்டும், எங்கப்பா திருநெவேலில்லேந்து வரணும்னு சொல்லிட்டு நிக்கேன். நமக்கு யாருமே இல்லியோ?’ இது என்ன கொடும தெரியுமாடே?’

முத்துக்குமார் ஏதோ சொல்லுமுன் லிண்டா இடைமறித்தாள் ‘இன்னும் ஒரு சோதனை வேணும். இப்போதைக்கு என் பணத்துல நீங்க யாரு என்னன்னு மட்டும்தான் தெரிஞ்சுகிட்டிருக்கீங்க. ஆனா, நீங்கல்லாரும் முத்துராசாவின் வாரிசுதான்னு நிரூபிக்கறதுக்கு ஒரு வழி வேணும்’

‘என்ன செய்யணும்?’ என்றான் முத்துகுமார்.

‘ஏன் செய்யணும்?’ என்றார் பெரியப்பா ஆவேசமாக.

லிண்டா அவரை உற்றுப் பார்த்தாள் . அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்த்து.   ‘ஆறு கோடி ரூபாய் வேணுமா உங்களுக்கு? முத்துராசாவின் வாரிசு நீங்கதான்னு நிருப்பிச்சு எடுத்துட்டுப் போங்க’

வீடு சற்றே சலசலத்து சப்தம் பெரிதானது..

‘முத்துராசாவிற்கு, அவர் குடும்பத்திற்கு என வரவேண்டிய தொகை அது’ லிண்டா ஆரம்பத்திலிருந்து விளக்கினாள்.

‘தாத்தா உசிரோட இருந்தப்ப எதுவும் கிடைக்கலே’ என்றார் பெரியப்பா வருத்தமாக.

‘ஏன் கிடைக்கலை? அவருக்கு சில பவுண்டுகளை ஆனி அனுப்பினா. மறுத்துட்டாரு. நடேசபிள்ளை, முத்துராசாவை வற்புறுத்தி, சமூகத்துக்கு உருப்படியா எதாச்சும் செய்யின்னு  சொன்னதுல, ‘எங்க குடும்பமே ரோட்டுல அடிபட்டு போச்சு. இந்த அவலம் இன்னொருத்தனுக்கு வரக்கூடாது’ன்னு சொல்லி, அந்த ஆஸ்பத்திரியைக் கட்டினாரு. மாடா, அந்த கட்டிடம் பேரு என்ன?’

‘கன்னியம்மா சத்திரம்’

‘ஒரு நிமிஷம்’ என்ற லிண்டா, தன் ஐ பேடை இயக்கி, சில கோப்புகளை நகர்த்தி, முத்துக்குமாரிடம் கொடுத்தாள் ‘இதுல மூன்றாவது பத்தியைப் படி’

‘ஆனி என்று பெயர் வந்தால் சந்தேகம் வரும் என்பதால், கன்னிங்ஹாம் அம்மாள் சத்திரம் என்று நாமகரணம் செய்தான் முத்துராசா.’

‘கன்னிங்ஹாம் அம்மாள் சத்திரம் …கன்னியம்மா சத்திரம்’ என்றான் முத்துகுமார் பிரமிப்போடு. எத்தனையோ முறை நாகர்கோவில் போகும்வழியில் பார்த்திருக்கிறோம். ஒரு தடவை கூட, இது பற்றி புத்தி போகவில்லையே?

லிண்டா தொடர்ந்தாள்.

‘நடேசபிள்ளை டைரில, வீடு கட்டினது போக, மிச்சமிருந்த தொகையை சுதேசிகள் குடும்பங்களுக்குக் கொடுக்கணும்னு முத்துராசா மிகவும் முயன்றிருக்கிறார். ஆனால் அவரால கிராமத்தை விட்டு அதிகம் வெளியே போக முடியவில்லை. அவர் குருவாக வணங்கிய வ.உ.சி குடும்பத்திற்கு வேதியப்பிள்ளை உதவினார் என்று கேட்டு இவரும் முயன்றிருக்கிறார். அதற்குள் மெட்ராஸ் போலீஸ் வேதியப்பிள்ளையின் நெருங்கிய உறவினரும், வ.உ.சியின் நண்பருமாக இருந்தவர்களைக் கைது செய்ய முனைகிறது என்று கேள்விப்பட்டு, மனம் தளர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் நின்றிருக்கிறார். இதெல்லாம் இந்த  நடேசபிள்ளையின் டைரியிலிருந்து கிடைத்த செய்திகள்’

முத்துக்குமார் கண்களை மூடினான். எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னுடையது? இதெல்லாம் அறியாது, என் குடும்ப வறுமைக்குக் காரணம் படிக்காத முட்டாள் முன்னோர்கள் என்று எத்தனை முறை ஏசியிருக்கிறேன்?

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com