1. காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...

தமிழர்களாகிய நமக்கும் பாடல்களுக்கும் உள்ள உறவு, ஏறத்தாழ ஆதித்தமிழர்கள் உருவான நாட்களில் இருந்தே துவங்குகிறது.
1. காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...

தமிழர்களாகிய நமக்கும் பாடல்களுக்கும் உள்ள உறவு, ஏறத்தாழ ஆதித்தமிழர்கள் உருவான நாட்களில் இருந்தே துவங்குகிறது. அப்போதிலிருந்து இப்போதுவரை நமது எல்லாச் செய்கைகளிலும் பாடல்களும் இசையும் அவசியம் இடம்பெறுகின்றன. மரண கானா என்பது ஒரு அட்டகாசமான இசைவடிவமாகவே உள்ள பிரதேசம் நம்முடையது. இதுமட்டுமல்லாமல் பிறப்பில் இருந்து, பருவம் அடைதல், திருமணம் செய்துகொள்ளல், குழந்தை பிறத்தல், திருமணம் முறிதல், உயிர் போதல் ஆகிய அனைத்துக்கும் பாடல்களும் இசையும் ஏராளமாக இருக்கும் நாடு இது. இவையெல்லாமே மிக இயல்பான இசை வடிவங்கள். அங்கிருந்து அப்படியே முறையாக உருவாக்கப்படும் பாடல்களின் பக்கம் வந்தால், திரையிசை என்பதும் நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பது எளிதாகப் புரிந்துவிடும்.

நம் வாழ்க்கையில் என்ன சம்பவம் நடந்தாலும் அதைத் திரையிசையோடு சம்மந்தப்படுத்திக்கொண்டு, அதற்கான பிரத்யேகப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அந்த உணர்வை நம்மால் தாண்ட இயல்கிறது. உண்மையில் உலகின் பிற பகுதிகளில் திரையிசை என்பது இல்லாமல், தனிப்பட்ட ஆல்பங்களாகவே இசை பரவியிருக்கிறது. ப்ளூஸ், ராக், Rap, ரெக்கே போன்ற பல்வேறு பிரிவுகளாக இந்த இசை பிரிந்து, இவை ஒவ்வொன்றிலும் அட்டகாசமான இசைக்கலைஞர்கள் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கின்றனர்.

எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்வுக்கும் அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் பாடல்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் – குறிப்பாகத் தமிழகத்தில் இசை என்றாலே அது திரையிசையாகவே பெரும்பாலும் உருவெடுத்திருக்கிறது. இங்கு தனிப்பட்ட இசைத்தொகுப்புகள், ஆல்பங்கள் எல்லாம் மிகக்குறைவு. இதனாலேயே திரையிசை என்பது பெரும்பாலும் காதல் (மகிழ்ச்சி, சோகம்) என்ற ஒரே உணர்வோடே துவங்கி முடிந்தும் விடுகிறது. வாழ்க்கையில் தன்னம்பிக்கை நிறைந்து நிற்கும் ஒரு இளைஞன் கேட்கத்தகுந்த பாடல்கள் எவை என்று யோசித்துப் பார்த்தால், திரையிசையிலும் மிகமிகக் குறைவான பாடல்களே கிடைக்கும். இதுபோல் பல உணர்வுகளுக்குப் போதுமான பாடல்களே நம்மிடம் திரையிசையாக இல்லை. இதுதான் மேற்குக்கும் நமக்குமான வேறுபாடு. அவர்களின் இசை திரையை மட்டும் நம்பி இல்லை என்பதால், தன்னம்பிக்கையூட்டும் ஆயிரக்கணக்கான பாடல்கள் அவர்களிடம் உண்டு. இதுபோலவே அத்தனை உணர்வுகளுக்கும்.

இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது அற்புதமான திரைப்பாடல்கள் மட்டுமல்லாமல், திரையில் இல்லாமல் ஆல்பங்களில் இருக்கும் நல்ல பாடல்களும்தான். ஒட்டுமொத்தமாக, பாடல்களும் அவை உருவான விதங்களும், அப்பாடல்களின் மூலமாகக் கடத்தப்படும் உணர்வுகளும் முக்கியமாக இத்தொடரில் இடம்பெறும். பல்வேறு இசையமைப்பாளர்கள், பலப்பல பாடகர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள்- இன்னும் இவர்களைப்பற்றிய கதைகள் போன்ற பல சுவையான செய்திகளை நாம் கவனிக்கப்போகிறோம். பழைய பாடல்கள், புதிய பாடல்கள், வேற்றுமொழிப்பாடல்கள் என்று எல்லையே இல்லாமல் பாடல்கள் இந்தத் தொடரில் இடம்பெறப்போகின்றன. அப்பாடல்களின் வழியே, அமரத்துவம் வாய்ந்த கலைஞர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இத்தொடரின் நோக்கம். தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலகட்டத்தில் ரங்கோலி, சித்ரஹார், ஒளியும் ஒலியும் என்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் ஒளிபரப்பப்பட்ட பாடல்களை நினைவு வைத்திருக்கிறீர்களா? அப்போது உங்களுக்குள் உருவான உணர்வுகள் என்னென்ன? அதேபோன்ற உணர்வுகளையே இந்தத் தொடரிலும் அனுபவிக்கப்போகிறோம். மேலே சொன்னவையெல்லாம் என்னவென்றே தெரியாத இளைஞரா நீங்கள்? கவலையே வேண்டாம். நேற்று வெளியான பாடல்களைக்கூட நாம் இங்கே பார்க்கலாம். மகிழ்ச்சி அடையலாம்.

வாருங்கள். தொடரின் முதல் பாடலைக் கவனிக்கலாம்.

தமிழ் சினிமாவில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா ஆகிய அட்டகாசமான இசையமைப்பாளர்களைக் கொஞ்சம் கூட மறந்துவிட இயலாது. இவர்கள் அனைவரும் ஜீனியஸ்களே. இவர்களில் ஒவ்வொருவரின் இசை வாழ்க்கையும் உச்சபட்ச சிகரத்தில் இருந்து, மெல்ல மெல்ல இவர்களின் இசைவாழ்க்கை பழக்கப்பட்ட இசையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது, கச்சிதமாக இதில் அடுத்தவர் வந்து மீண்டும் தமிழ்த்திரையிசையை அதன் சிகரம் நோக்கிக் கொண்டு சென்றனர். இப்படி, எம்.எஸ்.வியிடம் இருந்த இசைச்சிம்மாசனம் இளையராஜாவிடம் வந்து சேர்ந்து, இளையராஜா அவரது இசையின் உச்சத்தில் இருந்தபோது உள்ளே நுழைந்தவர் – ஏ.ஆர். ரஹ்மான் என்ற அல்லா ராக்கா ரஹ்மான். இளையராஜாவிடம் பணிபுரிந்தவர். இளைஞர். காலஞ்சென்ற இசையமைப்பாளர் ஆர்.கே. சேகரின் புதல்வர். இதெல்லாம் உலகுக்கே தெரியும்.

ஆனால், 1983ல் இருந்து 1992 வரை இளையராஜாவுடன் பத்து படங்கள் வேலை செய்த மணி ரத்னம், பதினோராவது படமான ரோஜாவில் திடீரென்று இளையராஜாவை விட்டு விட்டு ஒரு புத்தம் புதிய இசையமைப்பாளரிடம் வேலை செய்வதற்குக் காரணம் என்ன?

இதுபற்றி மணி ரத்னம் தெளிவாக இன்றுவரை சொல்லவில்லை. அது கூடப் பரவாயில்லை. ஆனால் அவரை பரத்வாஜ் ரங்கன் பேட்டியெடுத்து வெளியான ‘கான்வர்சேஷன்ஸ் வித் மணி ரத்னம்’ (தமிழில் ‘மணி ரத்னம் படைப்புகள்: ஒரு உரையாடல்) புத்தகத்தில் ரோஜா பற்றிய அத்தியாயத்தில், ரஹ்மான் பற்றிய ஒரே ஒரு கேள்வி கூட இல்லை! ரோஜாவின் இசை, தமிழ்த் திரையிசையையே மாற்றியமைத்த ஒரு சகாப்தம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளரைப் பற்றி, அப்படத்தின் இசையைப்பற்றி எதுவுமே பேசாமல் கடந்துபோகிறது ரோஜா பற்றிய அத்தியாயம்!

சரி – நமக்கு இதெல்லாம் தேவையில்லை. மணி ரத்னம் ரஹ்மான் என்ற இளைஞரைத் தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ரஹ்மானும் இசையமைத்துக் கொடுக்கிறார். படத்தின் இசை பட்டிதொட்டியெங்கும் பிரம்மாண்டமாகப் பரவுகிறது. ரஹ்மானுக்கு அப்படத்துக்காக தேசிய விருதும் கிடைக்கிறது. டைம் பத்திரிக்கை, ரோஜாவின் இசையை, உலகின் மிகச்சிறந்த திரையிசைகளில் ஒன்றாக அறிவிக்கிறது.

ரோஜா வரும்வரை, ரோஜாவின் இசையில் இருந்த துல்லியத்தை நாம் தமிழில் அனுபவித்ததே இல்லை என்பதே உண்மை. அதுவரை ஆங்கில இசை ஆல்பங்களில்தான் அந்த செய்நேர்த்தியையும் துல்லியத்தையும் நான் கண்டிருக்கிறேன். அந்த வகையில், தமிழ்த் திரையிசையையும், அதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் ரசனையையும் மண்டைக்குள் கையை விட்டு ஒரு உலுக்கு உலுக்கியது ரோஜாவே.

ரோஜாவுக்குப் பின்னர் ரஹ்மான் மெதுவாக, ஒவ்வொரு படமாக இசையமைக்கத் துவங்கினார். அப்படி ரோஜா வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து வெளிவந்த ஆல்பம், ‘காதலன்’. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் அக்காலகட்டத்தில் அத்தனை இளைஞர்களுக்கும் சென்று சேர்ந்தன. இளைஞர்கள் மட்டுமல்லாமல், இசை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடத்தக்க தொகுப்பாகவே காதலன் இருந்தது. காரணம் அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு இசை வடிவங்கள். 

அந்தப் படத்தில் ஒரு பாடல். காதலியின் நினைவாக ஹீரோவிடம் இருந்த ஒரு சிறிய பொருளை, ஹீரோவின் தந்தை தொலைத்துவிடுகிறார். காதலன் கோபமடைந்து தந்தையைத் திட்டுகிறான். உடனடியாக அவனை சமாதானம் செய்யும் தந்தை, அவனுடன் சேர்ந்து அந்தப் பொருளைத் தேடுகிறார். வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக எங்கே அப்பொருள் விழுந்திருக்கும் என்று யோசித்து, வெளியே சென்று, குப்பைத்தொட்டியில் விழுந்து கிடக்கும் அந்தப் பொருளை எடுக்கும் தருவாயில், அந்தப் பொருள் குப்பை லாரிக்குள் ஏற்றப்பட்டு விடுகிறது. இதன்பின்னர் காந்தத்தின் உதவியோடு அப்பொருளைப்போலவே இருக்கும் பல பொருட்களையும் தந்தை எடுத்துவந்து மகனிடம் தருகிறார். அதிலிருந்து மிகச்சரியாக அந்தப்பொருளை மகன் கண்டுபிடித்துவிட, பாடல் துவங்குகிறது. அந்தப் பொருள் – ஒரு ஹூக்!

‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’ என்ற பாடல்தான் முதல் வாரத்தில் நாம் பார்க்கப்போகும் பாடல்.

இந்தப் பாடல் ஏன் எனக்குப் பிடிக்கும்? ஹிந்தியில் பிரபல பாடகராக இருந்த உதித் நாராயண் முதல்முறையாகத் தமிழில் பாடிய பாடல் இது. பாடலில் அவரது வரிகளை முதலில் கேட்டால் ஒன்றுமே புரியாது. கவனித்துக் கேட்டால் மட்டுமே அவரது தமிழ் வரிகள் புரியும். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அட்டகாசமான ட்யூன்; அந்த ட்யூனை மறக்கமுடியாமல் நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் இசைக்கருவிகள்; ட்யூன் முழுதுமே பொங்கி வழியும் குறும்பு; ட்யூனுக்குப் பொருத்தமான பாடல் வரிகள் ஆகியவையெல்லாம் ஒன்று சேர்ந்து, இப்போதும் மறக்கவே முடியாத ஒரு பாடலாக மாறியுள்ளதே காரணம்.

இப்பாடலை உதித் நாராயணுடன் பாடியவர் எஸ்.பி.பி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாடலில் உள்ள பெண் குரல், எஸ்.பி.பியின் மகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைப்போன்ற இன்னும் சில பாடல்களை மட்டுமே தமிழில் அவர் பாடியுள்ளார். அவர் பெயர் பல்லவி. ’ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘ஹைர ஹைரா ஹைரப்பா’ பாடலும் அவர் பாடியதே. பவித்ராவிலும் ‘செவ்வானம்’ பாடலைப் பாடியுள்ளார்.

பாடல் முழுதுமே அவ்வப்போது ஒலிக்கும் மேளம், வீணை, கிடார் ஆகிய இசைக்கருவிகள் அட்டகாசமாக ஒன்று சேர்ந்து அளிக்கும் சந்தோஷத்தின் உச்சபட்ச மனநிறைவே இப்பாடலின் பலம். கூடவே, இப்படி ஒரு பாடலை அதுவரை யாருமே தமிழில் கேட்டதில்லை என்பதும்தான் இப்பாடலை நம் அனைவரின் மனதிலும் இன்னும் தக்க வைத்துள்ளது.

பிரபுதேவாவின் நடனம் மற்றும் ஒட்டுமொத்தப் பாடலின் விஷுவல்களும், இப்பாடலை அருமையாகக் கோரியோக்ராஃப் செய்துள்ள விதமும் மறக்கமுடியாதது. பாடலில் எஸ்.பி.பி ஆடும் பரதநாட்டியத்தை மறக்க இயலுமா?

காதலிக்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் என்ற உணர்வு கட்டாயம் காதலிப்பவர்களுக்கு அவ்வப்போது தோன்றும். அந்தப் பெண்ணின் அசைவுகள், அவள் உபயோகித்த பொருட்கள் போன்றவையெல்லாம் பொக்கிஷம் போல நம் மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த உணர்வுகளை மெது………..வான பாடலாகப் போடாமல், துள்ளலான இசையுடன் அட்டகாசமாக வழங்கிய பாடல் இது. இன்றுவரை ரஹ்மானின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

பாடலுக்கான சுட்டி: 

ரஹ்மானுக்கு முந்தைய இந்தியத் திரையிசை எப்படி இருந்தது என்று யோசித்தால், தபலா, டோலக்குகள் வைத்தேதான் பெரும்பாலான பாடல்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது பேங்கோஸ், ட்ரம்ஸ், கிடார் ஆகியன இடம்பெறும். ஆனால், தொண்ணூறுகளின் துவக்கத்தில் உலகம் முழுக்கப் பரவியிருந்த இசை வடிவங்கள் என்னென்ன என்று கவனித்தால், ஹிப்ஹாப், ராக், ப்ளூஸ், டெக்னோ, ஸோல் ம்யூஸிக், ஸூஃபி இசை போன்ற பல வடிவங்கள் இந்தியாவில்- தமிழ்நாட்டில் சரியாக நுழைந்திருக்கவே இல்லை என்று புரியும். குறிப்பாகத் தமிழில் இவை நுழைந்திருக்கவே இல்லை (ஒரு சில எம்.எஸ்.வி & இளையராஜா பாடல்கள் விதிவிலக்கு). இப்படிப்பட்ட இசை வடிவங்களை இங்கே கொண்டுவந்து, சமகால உலக இசையை சர்வசாதாரணமாகத் தமிழ்ப்பாடல்களில் உலவ விட்ட பெருமை ரஹ்மானையே சாரும். இதுதான் ரஹ்மானின் திறமை. அறிமுகமான புதிதில் ரஹ்மான் இசையமைத்திருந்த எந்தப் பாடலையும், அதே பாடலுடன் வெளியான பிற பாடல்களையும் (தமிழ், ஹிந்தி முதலிய எம்மொழியானாலும் சரி) எடுத்து ஒப்பிட்டால் இது எளிதாக விளங்கும். ரஹ்மானின் வருகைக்குப் பின்னர்தான் இப்படிப்பட்ட உலக இசை நமது இளைஞர்களை முழுவீச்சில் சென்றடைந்தது என்பது மிகவும் முக்கியம். இது போலவே ரஹ்மான் வந்த பின்னர்தான் ஹேரிஸ் ஜெயராஜ், யுவன் போன்றவர்கள் அதேவிதமான பாணியில் இசையமைக்கவும் துவங்கினர். இவர்களில் யுவன் பிந்நாட்களில் அட்டகாசமான இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இசை என்பது மட்டும்தான் குறிக்கோள் – அதில் இசையமைப்பாளர்களின் மீது வெறித்தனமான பற்று என்பதை விட்டுவிட்டு, நல்ல இசை எங்கிருந்தாலும் ரசிப்போம் என்பதே இசை ரசிகர்களின் நோக்கமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட இன்னொரு நல்ல பாடலுடன் வரும் வாரம் சந்திப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com