31. இயக்குநர்களால் விரும்பித் தேடப்படும் இசையமைப்பாளர் - இமான் 

தமிழ்த் திரையுலகின் மிகவும் சீனியர் இசையமைப்பாளர்களில், தற்போது வேலை செய்துகொண்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தால், இளையராஜாவே மிகவும் சீனியர்.
31. இயக்குநர்களால் விரும்பித் தேடப்படும் இசையமைப்பாளர் - இமான் 

தமிழ்த் திரையுலகின் மிகவும் சீனியர் இசையமைப்பாளர்களில், தற்போது வேலை செய்துகொண்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தால், இளையராஜாவே மிகவும் சீனியர். அடுத்ததாக, ரஹ்மான். பின்னர் யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து ஹேரிஸ் ஜெயராஜ் என்று வந்து, பின்னர் பிற இசையமைப்பாளர்களின் பெயரெல்லாம் பட்டியல் இடப்படும். ஆனால், இந்தப் பட்டியலில் ஒரே ஒரு பெயர் மட்டும் சில சமயங்களில் விடுபட்டாலும் பட்டுவிடும். நமக்கும் அது தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. டி. இமான். 2002-இல் தமிழ்த்திரைப்படங்களில் அறிமுகமான நபர். கடந்த பதினைந்து வருடங்களாக இசையமைத்து வருகிறார். அண்மைக்காலங்களில் இயக்குநர்களால் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

திரைப்படங்களுக்குள் வருமுன்னரே தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்திருக்கிறார் இமான். கிருஷ்ணதாசி நினைவிருக்கிறதா? சன்டிவியில் 2000ல் மிகப் பிரபலமாக விளங்கிய தொடர். இதன் டைட்டில் பாடல் இன்றும் பலருக்கும் நினைவிருக்க வாய்ப்பு உண்டு. ‘சிகரம் பர்த்தாய்.. சிறகுகள் எங்கே..’ என்ற பாடலை, நித்யஸ்ரீயுடன் சேர்ந்து இமானே பாடியிருப்பார். இது மட்டும் அல்லாமல், இன்னும் பல சீரியல்களிலும் டைட்டில் பாடல் & பின்னணி இசையில் வேலை செய்திருக்கிறார் (மந்திர வாசல் ஒரு உதாரணம். கோலங்கள் இன்னொரு உதாரணம். மொத்தம் 70க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸொட்கள் என்று இமானே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இது எல்லாமே 17-18 வயதில்!).

கிருஷ்ணதாசி போன்ற தொடர்களில் இமானின் திறமையைக் கண்டுதான் குட்டி பத்மினி எடுத்த ‘காதலே சுவாசம்’ (2002) திரைப்படத்தில் இசையமைப்பாளராக இமான் முதன்முறையாக அறிமுகமானார். அது அவரது பத்தொன்பதாம் வயது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழனின் பாடல்கள் நன்றாகவே பிரபலம் ஆயின. அதில்தான் பிரியங்கா சோப்ரா முதன்முதலில் அறிமுகம் ஆனார். அதில் அவரும் விஜய்யும் பாடிய பாடல் ஒன்றும் மிகவும் பிரபலம் (உள்ளத்தைக் கிள்ளாதே கிள்ளிவிட்டுச் செல்லாதே). அப்படத்தில் இடம்பெற்ற ‘மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற’பாடல் அக்காலத்தில் எல்லாப்பக்கமும் பிரபலம் அடைந்தது. ‘ஹாட்டு பார்ட்டி’பாடலும்.

தமிழன் படத்துக்குப் பின்னர், அடுத்த வருடம் ‘விசில்’ வெளிவருகிறது. அதில் ‘அழகிய அசுரா’ பாடல் பிரபலம் அடைகிறது. பின்னர் அதற்கடுத்த வருடத்தில் ‘கிரி’ வெளியாகிறது.கிரியிலும் ஒரு சில பாடல்கள் பிரபலம் அடைகின்றன. அதன்பின்னர் குறிப்பிடத்தகுந்த படம் என்றால் அது மூன்று வருடங்கள் கழித்து2006ல் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம்தான். அதன்பின்னர் ‘ரெண்டு’வெளியானது. பின்னர் ‘நான் அவனில்லை’, ‘மருதமலை’ என்று ஹிட்கள் வந்தாலும், இவற்றுக்கும் மூன்று வருடங்கள் கழித்து 2010ல் வெளியான ‘மைனா’ படம்தான் இமானுக்குத் திருப்புமுனை. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பெரிதாகப் பேசப்பட்டன. அதன்பின்னர் வெளியான ‘மனம்கொத்திப் பறவை’, இமானை ஒரு முன்னணி இசையமைப்பாளராக முன்னிறுத்தியது. பிறகு, மறுபடியும் பிரபு சாலமன்& இமான் கூட்டணி, ‘கும்கி’ திரைப்படத்தை வெளியிட, கும்கியின் பாடல்களும் மிகுந்த பிரபலம் அடைகின்றன. உடனடியாக அடுத்த வருடமே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளியாகி, இமானைப் புகழுச்சியில் நிறுத்துகிறது. பின்னர் மறுபடியும் விஜய் படமாக, ‘ஜில்லா’. இதன்பின் இன்றுவரை ஏராளமான படங்கள். இன்றைய தேதியில், தமிழ்நாடெங்கும் பிரபலமடையக்கூடிய ஜனரஞ்சகமான ட்யூன்கள் வேண்டும் என்றால் கூப்பிடு இமானை என்றுதான் இயக்குநர்கள் எண்ணுகின்றனர். அதேபோல் இமானின் கைபட்ட படங்களின் பாடல்கள் எல்லாப்பக்கங்களிலும் பிரபலம் அடையவே செய்கின்றன.

இமானின்கதை எப்படிப்பட்டது? சிறிய வயதிலேயே இசை கற்றுக்கொண்ட கதைதான். என்றாலும், பிற இசையமைப்பாளர்களிடம் இருந்து எங்கே மாறுபடுகிறார் என்றால், அவர்கள் பிற இசையமைப்பாளர்களிடம் வேலை செய்துவிட்டு நேரடியாகத் திரைப்படங்களில் வேலை செய்ய, இமானோ தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் சென்றுவிட்டார்.பதினைந்து வயதில் மகேஷ் மற்றும் ஆதித்யனிடம் கீபோர்ட் ப்ரோக்ராமராக வேலை செய்துகொண்டிருந்தார் இமான். இந்தச் சமயத்தில்தான் தொலைக்காட்சி வாய்ப்புகள். பின்னர் திரைப்படம். ஒரு காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒன்பது படங்களுக்கு, வரிசையாக ஒன்றிரண்டு பாடல்களை இசையமைத்துக்கொடுத்ததும் படப்பிடிப்பு நின்றுவிடும். இப்படியே தொடர்ந்துகொண்டிருக்க, பேசாமல் ஏதாவது இசையமைப்பாளரிடம் கீபோர்ட் ப்ரோக்ராமராகச் சென்று சேர்ந்துவிடலாமா என்றெல்லாம் யோசித்திருப்பதாக இமான் சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னர்தான் கிரி நிகழ்ந்தது. ‘ஏய் கைய வெச்சிகிட்டு சும்மா இருடா’ ஹிட் ஆனது. ஓரளவாவது தன் இசை பரவாயில்லை என்று இமானே தன்னைப்பற்றி நினைக்கத் துவங்கியது அதன்பின்னர்தான். இதன்பின்னர் அர்ஜுனோடும் சி.சுந்தரோடும் இமான் வேலை செய்த படங்களின் பாடல்கள் ஹிட் ஆயின. இமான் ஓரளவு நிமிர்ந்து அமர்கிறார்.

பின்னர்தான் மைனா நிகழ்கிறது.

பிரபு சாலமனிடம் இமானுக்குப் பிடித்தது அவரது இறைச்சிந்தனை என்று சொல்கிறார் இமான். ‘நாங்கள் இருவரும் உடனடியாக ஒன்றுசேர்ந்தது இந்த விஷயத்தால்தான்’ என்பது அவரது கருத்து. கூடவே, மைனாவின் பாடல்கள் எப்படி ஹிட் ஆயின? பிற இயக்குநர்கள், ஒரு பாடலின் சிச்சுவேஷன் மட்டுமே சொல்லிவிட்டு, பின்னர் பாடல் ஹிட் ஆகவேண்டும். அப்படிப் போட்டுக்கொடுங்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் பிரபு சாலமனோ, பாடல் நிகழும் இடம், அங்கே இருக்கும் சூழல், யாரெல்லாம் பாடலில் வரப்போகிறார்கள் என்பதில் இருந்து, பாடலில் நிகழும் சம்பவங்கள், உணர்வுகள் வரை மிகத்தெளிவாக எல்லாவற்றையும் சொல்வது வழக்கம் என்கிறார் இமான். இது சமயத்தில் அதிகபட்சமான தகவலாக இருந்தாலும், பாடல்களைக் கவனித்து இசையமைக்க அது உதவியது என்பது அவர் கருத்து. இதனால்தான் மைனா இன்றும் அதன் பாடல்களுக்காகப் பேசப்படுகிறது.

மைனாவுக்குப் பிறகு இமானின் வாழ்க்கை மாறியது. அதிலிருந்து இன்றுவரை இமான் இசையமைத்த பாடல்களின் வீச்சுக்குத் தொலைக்காட்சியும் எஃப்.எம்மையும் கவனித்தாலே போதும். ஒவ்வொரு நாளும் அதிக அளவில் இமானின் பாடல்களே போடப்படுகின்றன என்பது என் கருத்து.

இமானின் இசை எப்படிப்பட்டது?

துவக்ககாலத்தில் இமான் இசையமைத்த தமிழன், விசில், கிரி, ரெண்டு போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டாலேயே, அவரது இப்போதைய மெலடிக்களின் சாயல் தெரியும். உதாரணமாக, ‘அழகிய அசுரா’ பாடலுக்கும் ‘செந்தூரா’ பாடலுக்கும் ஒருசில தொடர்புகள் உள்ளன. ‘மொபைலா மொபைலா’ பாடலுக்கும் ‘ஒம்மேல ஒரு கண்ணு’, ‘பார்க்காத என்னைப் பார்க்காத’பாடல்களுக்கும் கட்டாயம் சம்மந்தம் உண்டு. அப்போது போட்டுக்கொண்டிருந்த இசையின் மிகவும் refined வடிவம்தான் இப்போதைய இமானின் இசை என்று நினைக்கிறேன். அதேபோல், குத்துப் பாடல்கள் என்ற வகையிலுமே, ‘மாட்டு மாட்டுன்னு நீ’ பாடலையும், இப்போதைய ‘டண்டணக்கா’, ‘என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா’ பாடலையும் கேட்டுப்பாருங்கள். தனது பூர்வஜென்மத்தில் இசைக்கருவிகளின் அடர்த்தி இமானின் இசையில் சற்றே குறைவு. இப்போது அழகாக, பல்வேறு கருவிகளை உபயோகப்படுத்தி, அருமையான ஒரு medley இசையை இமானால் கொடுக்கமுடிகிறது.

கூடவே, மெலடியும் இல்லாமல் குத்தும் இல்லாமல், இடைப்பட்ட இடத்தில் நிகழும் பாடல்கள் இமானின் தனித்துவம். ‘ஊதாக் கலரு ரிப்பன்’, ‘குக்குரு குக்குரு’, ‘ஆவி பறக்கும் டீக்கட’, ‘அடியே இவளே’ போன்ற பாடல்களையே சொல்கிறேன். இத்தோடு சேர்ந்து, முழுக்க முழுக்கக் குத்துப் பாடல்களையும் சரமாரியாக அளிக்கிறார் இமான். அவையும் ஹிட்கள் ஆகின்றன.

இப்போதைய தமிழ் இசையமைப்பாளர்களில், தமிழ் மக்களின் விருப்பத்துக்கேற்ற பாடல்களை மிகவும் அட்டகாசமாக அளிப்பவர்களில் இமானுக்கே முதலிடம் என்று தோன்றுகிறது. அவரது இசை அலுப்பதில்லை. நமது மனதுக்குத் தேவையான அற்புதமான உணர்வுகளைக் கிளப்புவதில் அவர் எப்போதும் முதலிடம் வகிக்கிறார் என்றேதோன்றுகிறது. எத்தனை பாடல்கள் இமானால் இறவாப்புகழ் அடைந்திருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்?‘மைனா மைனா’, ‘கையப்புடி’, ‘அய்யய்யோ ஆனந்தமே’, ‘சொல்லிட்டாளே’, ‘அம்மாடி அம்மாடி’, ‘பார்க்காத என்னைப் பார்க்காத’, ‘ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்’, ‘எம்புட்டு இருக்குது ஆசை’, ‘கண்ணக் காட்டு போதும்’, ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’, ‘அலுங்குறேன் குலுங்குறேன்’முதலிய பல பாடல்கள் உண்டு. அண்மைக்காலத்தில் எத்தனை இசையமைப்பாளர்களுக்கு இப்படிப்பட்ட ஹிட்கள் அமைந்திருக்கின்றன? இவையெல்லாம் மெலடிக்கள். குத்துகள் என்று கணக்கெடுத்தால் இன்னும் பல பாடல்களை எழுதலாம்.

மொத்தத்தில், இமானின் வாழ்க்கையில் அட்டகாசமான வசந்தகாலம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவருடன் சேர்ந்து நாமும் அதனை அனுபவித்து மகிழ்வோம்.

(தொடரும்)    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com